சினிமா விமர்சனம்: உச்சத்துல சிவா

சினிமா விமர்சனம்: உச்சத்துல சிவா


கதாநாயகன்-கதாநாயகி: கரண்-நேஹா.

டைரக்‌ஷன்: ஜேப்பி.

கதையின் கரு: போதை மருந்து கடத்தும் கும்பலை தனி ஒருவராக போராடி, போலீசில் பிடித்துக் கொடுக்கும் இளைஞர்.

கரண், ஒரு 'கால் டாக்சி' டிரைவர். ஒரு இரவில், பேராசிரியர் ஞானசம்பந்தத்தை தனது டாக்சியில் ஏற்றிக்கொண்டு சவாரி வருகிறார். மறுநாள் காலை அவர் பெண் பார்க்க போக வேண்டிய சூழல். ஞானசம்பந்தத்தை இறக்கி விட்டு, கரண் திரும்பிக் கொண்டிருக்கும்போது, ஒரு பெண்ணும், ஒரு இளைஞரும் ரோட்டில் ஓடி வருகிறார்கள். அவர்களை நரேன் தலைமையில் ஒரு கும்பல் காரில் துரத்துகிறது.

இளைஞரை, அந்த கும்பல் துப்பாக்கியால் சுடுகிறார்கள். ஓடி வந்த பெண்ணை கரண் தனது காரில் ஏற்றி காப்பாற்றுகிறார். "நீங்க யார், உங்களுக்கும் அந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு? என்று அந்த பெண்ணிடம் கரண் கேட்கிறார். "நானும், சுடப்பட்ட இளைஞரும் காதலர்கள். எங்கள் காதலை பிடிக்காத என் அப்பா (நரேன்) கொலை செய்ய முயற்சிக்கிறார்" என்கிறார், அந்த பெண்.

அதை நம்பி கரண் மனதளவில் அந்த பெண் மீது காதல்வசப்படுகிறார். இந்த நிலையில், கரணின் காரை போலீஸ் துரத்துகிறது. காரை நிறுத்தும்படி போலீஸ் அதிகாரி இளவரசு துப்பாக்கியை காட்டி எச்சரிக்கிறார். அடுத்த நிமிடம், கரணிடம் அடைக்கலம் புகுந்த பெண் துப்பாக்கியால் போலீசை நோக்கி சுட ஆரம்பிக்கிறார். கரண், மிரண்டு போகிறார். அதன் பிறகு ஏற்படும் எதிர்பாராத அதிர்ச்சிகள்தான் கதை.

காதல், காமெடி, சண்டை கலந்த ஜனரஞ்சகமான கதை. 'கால் டாக்சி' டிரைவர் வேடம் கரணுக்கு பொருந்துகிறது. ரோட்டில் ஓடிவந்து அடைக்கலம் கேட்கும் பெண் மீது காதல்வசப்படுவது, அடிக்கடி போனில் வரும் அம்மா கோவை சரளாவுடன் காமெடியாக பேசி சமாளிப்பது, கனல் கண்ணன் கும்பலுடன் சண்டை போட்டு அந்த பெண்ணை காப்பாற்றுவது, இறுதியாக போதை மருந்து கடத்தல் ஆசாமிகளுடன் உயிரை பணயம் வைத்து மோதுவது என கரணுக்கு நிறைய வேலை. அத்தனையையும் கச்சிதமாக செய்கிறார்.

அய்யோ பாவம் என்று பரிதாபப்பட்டு காரில் இடம் கொடுத்து அவரால் காப்பாற்றப்பட்ட பெண் திடீரென்று துப்பாக்கியால் போலீசை சுட முயன்று, இவரை தள்ளிவிட்டு காரை ஓட்ட ஆரம்பித்ததும் கரண் அதிர்ச்சி அடைவது போல், படம் பார்ப்பவர்களையும் அதிர வைக்கிறது. "நீ குலமகள் ராதைன்னு நினைச்சு காதலிக்க ஆரம்பிச்சேனே...ரிவால்வார் ரீட்டாவா மாறிட்டியே...புடவை கட்டிய பொன்னம்பலம்ன்னு தெரியாம போச்சே..." என்று கரண் புலம்பும்போதும், போலீஸ் நிலையத்தில், "நீதான் துருப்பு சீட்டு. உன்னை வைத்துதான் போதை மருந்து கும்பலை பிடிக்கப் போகிறேன்" என்று மிரட்டும் போலீசுடன் கரண் மோதி அங்கிருந்து தப்பும்போதும், தியேட்டரில் கைதட்டுகிறார்கள்.

கரணிடம் காரில் அடைக்கலம் கேட்கிற பெண்ணாக, நேஹா. அழகான வரவு. பாடல் காட்சிகளில், கவர்கிறார். கார் பயணியாக ஞானசம்பந்தம், பஸ் பயணியாக மதன்பாப், போதை மருந்து கும்பலின் தலைவராக நரேன், போலீஸ் அதிகாரியாக இளவரசு, போதை மருந்து கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும் போலீஸ்காரராக ரமேஷ்கண்ணா, பிக்பாக்கெட்டாக 'கும்கி' அஸ்வின் என படம் முழுக்க தெரிந்த முகங்கள்.

இரவு நேர சென்னையை எழிலாக படம் பிடித்து இருக்கிறது, ஹார்முக்கின் கேமரா. படம் முழுக்க சென்னை நகரம் வண்ணமயமாக ஜொலிக்கிறது. "பேசு பேசு இசை மொழி பேசு" என்ற பாடலில் வைரமுத்துவின் வரிகளும், வித்யாசாகரின் இசையும் வசீகரிக்கின்றன. பின்னணி இசை, சில இடங்களில் மிகையாக இருக்கிறது. பழைய படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.

சம்பவங்கள் முழுவதும் ஒரு இரவில் நடப்பது போல் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஜேப்பி. விறுவிறுப்பான காட்சிகளும், திடீர் திருப்பங்களும் படம் பார்ப்பவர்களை கதையுடன் ஒன்ற வைக்கின்றன. 'கிளைமாக்ஸ்' சண்டை காட்சியில், உச்சக்கட்ட திகில்.

Comments