மூளைப் புற்றுநோயைத் துரத்திய பாப்பாவுக்கு ஒரு பூச்செண்டு!

மூளைப் புற்றுநோயைத் துரத்திய பாப்பாவுக்கு ஒரு பூச்செண்டு!

இங்கிலாந்தில் வசிக்கும் 4 வயது குழந்தை பிப்பா கோல். ஒரு வயதில் பிப்பாவுக்கு மூளையில் புற்றுநோய் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அறுவை சிகிச்சை செய்தனர். ஓராண்டு முழுவதும் கீமோதெரபி அளிக்கப்பட்டது. குழந்தைக்கு இனி ஆபத்து இல்லை என்று நினைத்திருந்தபோது, 2015-ம் ஆண்டு ஜனவரியில் புதிய புற்றுநோய் கட்டிகள் மூளையில் உருவாகியிருப்பது தெரிய வந்தது. 48 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மூளையின் வேறு பகுதியில் கட்டிகள் வளர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2 நாட்களுக்குப் பிறகு, மேலும் சில கட்டிகள் மூளையிலும் தண்டுவடத்திலும் பரவியிருந்ததைக் கண்டுபிடித்தனர். நான்காவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் குழந்தை சில வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். "பிப்பாவும் நாங்களும் எவ்வளவோ போராடிவிட்டோம். சின்னக் குழந்தைக்கு இத்தனை அறுவை சிகிச்சைகள் செய்ததே பெரிய விஷயம். நானும் ஸ்காட்டும் கீமோதெரபி எடுத்துக்கொண்டு, இருக்கும் காலம் வரை பிப்பாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம். விதவிதமாக படங்கள் எடுத்தோம். டிஸ்னி லேண்டுக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவத்தையும் தொடர்ந்தோம். கடந்த 8 மாதங்களாக பிப்பா அத்தனை சந்தோஷங்களையும் அனுபவித்து வந்தாள். கடந்த மாதம் மருத்துவரிடம் அழைத்து சென்றோம். மனம் திக்திக்கென்று அடித்துக்கொண்டிருந்தது. மருத்துவரை நிமிர்ந்து பார்க்கும் துணிச்சல் இல்லை. ஆனால், பிப்பாவின் புற்றுநோய் கட்டிகள் காணாமல் போய்விட்டன என்ற மருத்துவர்களின் உற்சாகக் குரல் கேட்டு ஆச்சரியமானேன். மருத்துவர்களாலேயே இதை நம்ப முடியவில்லை. பிப்பா புற்றுநோயின் பிடியில் இருந்து முற்றிலும் மீண்டு விட்டாள். இனி கவலை இல்லை. 4 வயதுக்குள்ளேயே அத்தனை வலிகளையும் அனுபவித்துவிட்டாள். சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுப்பாள். அவளது பெற்றோராக இருப்பது பெருமையாக இருக்கிறது. புற்றுநோயைத் துரத்தி அடித்துவிடலாம் என்பதற்கு என் மகளே சாட்சி" என்கிறார் பிப்பாவின் அம்மா ஷெல்.

நடைப் பயிற்சி கூட ஒரு தொழிலாகும் காலம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் சக் மெகார்தி, பகுதிநேர தொழிலாக நாய்களை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். இதற்காக ஒரு தொகையை கட்டணமாக பெற்றுக்கொள்வார். இப்பொழுது நாய்களுக்குப் பதிலாக மனிதர்களை அழைத்துச் செல்கிறார். "நாயை அழைத்துச் செல்லும்போது திடீரென்று சிறுநீர், மலம் கழிக்கும் பிரச்சினைகள் இருந்தன. இந்தப் பகுதியில் துணைக்கு ஆள் இல்லாத காரணத்தால் நடை பயிற்சி மேற்கொள்ளாதவர்கள் அதிகம். அதனால் மனிதர்களை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை ஆரம்பித்தேன். ஒரு மைல் தூரம் நடப்பதற்கு 420 ரூபாய் கட்டணம். நடக்கும்போது அவர்களுடன் உரையாடுவேன். அவர்களின் கஷ்டங்களைக் காது கொடுத்துக் கேட்பேன். ஆறுதல் அளிப்பேன். தீர்வு சொல்வேன். ஆரம்பித்த ஒரு மாதத்துக்குள் இந்தத் தொழில் பிரமாதமாக மாறியது. இன்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 5 பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறேன்" என்கிறார் மெகார்தி.

 

Comments