உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி

* தென்கொரியாவில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து இரு நில நடுக்கங்கள் ஏற்பட்டன. சக்தி வாய்ந்த இந்த நில நடுக்கங்களால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. சுமார் 15 பேர் காயம் அடைந்தனர். அங்குள்ள அணு உலைகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

* பாகிஸ்தானில் சிந்து மாகாணம், சிகார்பூர் மாவட்டத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி விசேஷ தொழுகை நடந்தது. அதனிடையே அந்த மசூதிக்கு வெளியே தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் மோதி, தன் உடலில் கட்டி வந்திருந்த குண்டுகளை வெடிக்கச்செய்தார். இதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஐ.எஸ். இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முகமது அல் அத்னானி, கடந்த மாதம் சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய வான்தாக்குதலில் சிக்கி உயிரிழந்ததை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் உறுதி செய்துள்ளது.

* அமெரிக்காவில் 2025-ம் ஆண்டுக்குள் 100 கோடி மரக்கன்றுகளை நடுவதற்காக இந்து அறக்கட்டளை ஒன்று 1 லட்சம் டாலர் (சுமார் ரூ.67 லட்சம்) நிதி திரட்டியது. இந்த நிதி, நியூ ஜெர்சி இயற்கை பாதுகாப்பு அமைப்பிடம் வழங்கப்பட்டது.

* இங்கிலாந்து நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் படித்துவருகிற மாணவிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி இருப்பதாக அந்த நாட்டின் பாராளுமன்ற குழு அறிக்கை மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

Comments