அமெரிக்க ஓபன் டென்னிஸ்:ஜோகோவிச்சை வீழ்த்தி வாவ்ரிங்கா ‘சாம்பியன்’

அமெரிக்க ஓபன் டென்னிஸ்:ஜோகோவிச்சை வீழ்த்தி வாவ்ரிங்கா 'சாம்பியன்'

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, முதல் நிலை வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

டென்னிஸ் போட்டி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் கடந்த இரண்டு வார காலமாக நடந்து வந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 3-ம் நிலை வீரர் ஸ்டான் வாவ்ரிங்காவும் (சுவிட்சர்லாந்து) பலப்பரீட்சையில் இறங்கினர்.

எதிர்பார்த்தது போலவே இருவரும் நீயா-நானா? என்று பலமாக வரிந்து கட்டினர். முதல் செட்டை 'டைபிரேக்கர்' வரை போராடி ஜோகோவிச் வெல்ல, 2-வது, 3-வது செட்டுகளை வாவ்ரிங்கா வசப்படுத்தி மிரட்டினார். தொடர்ந்து 4-வது செட்டிலும் 5-2 என்று வாவ்ரிங்காவின் ஆதிக்கம் ஓங்கியது. அதே சமயம் ஜோகோவிச் கால் பாதத்தில் வலியால் அவதிப்பட்டார். இரண்டு முறை காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆடிய அவரால் முழு வேகத்தை காட்ட முடியவில்லை. அது வாவ்ரிங்காவுக்கு சாதகமாக மாறியது. மணிக்கு அதிகபட்சமாக 135 மைல் வேகத்தில் சர்வீஸ் போட்ட வாவ்ரிங்கா 9 'ஏஸ்' சர்வீஸ்களுடன் ஜோகோவிச்சின் சவாலுக்கு முடிவு கட்டினார்.

வாவ்ரிங்கா சாம்பியன்

3 மணி 55 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் வாவ்ரிங்கா 6-7 (1-7), 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை சாய்த்து அமெரிக்க ஓபனை முதல் முறையாக ருசித்தார். 1970-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கென் ரோஸ்வால் தனது 35-வது வயதில் அமெரிக்க ஓபனை வென்றிருந்தார். அதன் பிறகு அதிக வயதில் அமெரிக்க ஓபனை வென்றவர் என்ற பெருமையை 31 வயதான வாவ்ரிங்கா பெற்றார்.

வாவ்ரிங்காவுக்கு இது 3-வது கிராண்ட்ஸ்லாம் மகுடம் ஆகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனையும், 2015-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனையும் கைப்பற்றி இருக்கிறார். அவருக்கு ரூ.23½ கோடியும், தோல்வி கண்ட ஜோகோவிச்சுக்கு ரூ.11¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

'எதிர்பார்க்கவில்லை'

இங்கிலாந்து வீரர் டேனியல் இவான்சுக்கு எதிரான 3-வது ரவுண்டில் தோல்வியின் விளம்பில் இருந்து தப்பிய வாவ்ரிங்கா அதன் பிறகு நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி வாகை சூடியது நிபுணர்களை ஆச்சரியப்பட வைத்து இருக்கிறது. வாவ்ரிங்கா கூறுகையில், 'வெற்றி பெறுவேன் என்ற எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் இங்கு வந்தேன். ஆனால் களம் இறங்கும் போது, ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறுவதற்குரிய எல்லா முயற்சியையும் வெளிக்காட்டினேன். ஜோகோவிச்சுக்கு எதிராகவும் அதைத் தான் செய்தேன். ரசிகர்களின் ஏகோபித்த ஆரவாரம் மற்றும் இங்குள்ள சூழல் இதற்கு முன்பு நான் அனுபவிக்காத ஒன்று. இது வியப்புக்குரிய இரவாகும்' என்றார். இந்த வெற்றியின் மூலம் டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்றுக்கு 3-வது வீரராக வாவ்ரிங்கா தகுதி பெற்றார்.

Comments