உலகின் பிரம்மாண்டப் பல்லி!

உலகின் பிரம்மாண்டப் பல்லி!

விநோதமான தோற்றம் கொண்ட ஒரு விலங்கு 'கொமோடோ டிராகன்'. இதை உலகின் மிகப் பெரிய பல்லி என்று சொல்வார்கள். ஊர்வன இனத்தைச் சேர்ந்த கொமோடோ டிராகன், அகன்ற, தட்டையான தலை, உருண்டையான வாய்ப் பகுதி, வளைந்த குட்டையான கால்கள், நீண்ட சதைப்பற்றான வால், சாம்பல் அல்லது பழுப்பு நிறத் தோலுடன் காணப்படும். சராசரியாகப் பத்து அடி நீளம் வரை வளரும். 140 கிலோ வரை இருக்கும்.

இந்தோனேஷியாவின் கொமோடோ, ஃப்ளோர்ஸ், ரின்கா, கிலி மொடாங் ஆகிய நான்கு தீவுகளில் இந்தப் பல்லி உள்ளது. கொமோடோ தீவில் அதிகமாக இது காணப்பட்டதால், இது கொமோடோ டிராகன் என்றே அழைக்கப்படுகிறது. கொமோடோ டிராகன் சுமார் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் ஓர் ஆச்சரியமான உண்மையும் உள்ளது. இந்தப் பல்லியை 100 வருடங்களுக்கு முன்புதான் மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள்.

கொமோடோ ஊன் உண்ணி. மான், பாம்பு, மீன் மட்டுமல்லாமல் நீர் எருமையைக்கூடத் தின்றுவிடும். பெரிய டிராகன்கள் குட்டி டிராகன்களையும் தின்றுவிடும். இந்தப் பல்லிக்கு அறுபது கூர்மையான பற்கள் உள்ளன. இவற்றின் மூலம் இரையின் எலும்பைக்கூட மிச்சம் வைக்காமல் தின்னும். தன் எடையில் 80 சதவீத அளவு இரையை ஒரே சமயத்தில் தின்னக்கூடிய விலங்கு கொமோடோ. கொமோடோ டிராகன் தன் இரையை வேட்டையாடியே தின்னும்.

இது குளிர் ரத்தப் பிராணி. எனவே, உடலைச் சூடேற்ற ரொம்ப நேரம் வெயிலில் கிடக்கும். இரவில் வெளியே வராது. மழைக் காலம் என்றால் பொந்துக்குள்ளேயே ஒளிந்துகிடக்கும். எப்போதுமே உடலின் சூடு குறையாமல் பார்த்துக்கொள்ளும். கொமோடோ டிராகன்களுக்கு நீச்சலடிக்கவும் தெரியும். ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்குக்கூட இரையைத் தேடி நீச்சலடித்துப் போய்விடும்.

பெண் கொமோடோ டிராகன்கள் தரையில் குழியைத் தோண்டி 15 முதல் 30 முட்டைகள் வரை இடும். முட்டைகள், நீர் நிரம்பிய பலூன் போல் இருக்கும். முட்டையிலிருந்து வெளியே வந்ததுமே, குட்டி டிராகன்கள் மரத்தில் ஏறி எட்டு மாதங்கள் வரை அங்கேயே வாழும். இல்லையேல், பெரிய டிராகன்களுக்கு அவை உணவாகிவிடும். இந்தப் பல்லிகள் சராசரியாக 30 ஆண்டுகள்வரை வாழும்.

Comments