Friday, September 30, 2016

முன்னோர் வழங்கிய மூலிகை: இசங்கு

முன்னோர் வழங்கிய மூலிகை: இசங்கு

மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளையும் நோயின்றி பாதுகாக்க இயற்கை அன்னை எண்ணற்ற மூலிகைகளைப் படைத்துள்ளாள். இவற்றை நம் முன்னோர்கள் முறையாகப் பயன்படுத்தி நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ நாம் நம் சுய தேவைக்காக மூலிகைகளையும், மரங்களையும் அழித்து, அதன் பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். அப்படி அழிந்துகொண்டு வரும் மூலிகைகள் நம்மை தீராத நாட்பட்ட நோய்களிலிருந்து காக்கக்கூடியவை. அப்படிப்பட்ட ஒன்றுதான் இசங்கு என்ற இந்த மூலிகை. பொதுவாக மூலிகைகளை எந்த நோய்க்கு எவ்வாறு சாப்பிடவேண்டும் என்றும், நோய் வராமல் இருப்பதற்கு எவ்வாறு சாப்பிடவேண்டும் என்றும் சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர். வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே மேல்  என்பதற்கேற்ப நோய் வருமுன் காக்க கண்டு பிடிக்கப்பட்ட முறைதான் கற்பமுறை.  கற்ப முறையில் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இசங்கு.

கரப்பான் கிரந்தி கருங்குட்ட ரோகம்

உரப்பான மேகம் ஒழியுங் - கருவாம்

கருங்கிரந்தி செவ்வாப்புக் கட்டிகளு மேகும்

மருஞ்சங்கங் சுப்பிக் கறி - அகத்தியர் குணவாகடம்

காச சுவாசம் நீங்க

சுவாசம் சம்பந்தப்பட்ட நாட்பட்ட நோய்கள் இருமல், ஈளை, இழுப்பு, மண்டைக்குத்து, மூக்கு நீரேற்றம், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, ரத்தத்தில் சளி, போன்றவற்றிற்கு இசங்கு இலை கஷாயம் அருந்தினால்  நோய்கள் குணமாகும்.  ஒருசிலருக்கு நெஞ்சு முழுக்க சளி கோர்த்துக் கொண்டு  மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும். மூச்சு விடும்போது சத்தம் வரும்.  இவர்களுக்கு இசங்கு கொண்டு செய்யப்பட்ட கஷாயம் அருமருந்தாகும்.

உடல் வலுப்பெற

இசங்கானது உடலை வலுப்பெற வைக்கும் தன்மை கொண்டது.  இசங்கு இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உடல் சூடு குறைய

இசங்கின் இலையையும், வேரையும் காயவைத்து இடித்து பொடியாக்கி, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.  வெயிலில் அலைபவர்களுக்கும், வெப்பம் மிகுந்த தொழிற்கூடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இசங்கு நீர் சிறந்த வரப்பிரசாதம்.  குறிப்பாக கணினியில் வேலை செய்பவர்களுக்கு இசங்கு நீர் மிகவும் சிறந்தது. விஷக்காய்ச்சலுக்கு இசங்குநீர் சிறந்த நிவாரணி.

இரத்தத்தைச் சுத்தப்படுத்த

இசங்கு இலையை சாறு எடுத்து லேசாக சூடாக்கி காலை, மாலை என 15 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும்.  இரத்தத்தில்  உள்ள தேவையற்ற கொழுப்புகள், நீக்கப்படுவதுடன் இரத்தத்தின் பசைத்தன்மை மாறும்.

சொறி, சிரங்கு குணமாக

புறச் சூழ்நிலை அசுத்தத்தாலும், உடலின் அகச் சூழ்நிலை மாசுபாட்டாலும் சருமம் சொறி, சிரங்கு, தேமல் என பாதிப்புக்குள்ளாகும்.  இதனைப் போக்கி சருமத்தைப் பாதுகாக்க இசங்கு சிறந்தது.இசங்கு இலையை நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரில் குளித்துவரவேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் சொறி, சிரங்கு போன்றவை நீங்கும். இசங்கு இலையுடன் ஆமணக்கு நெய் விட்டு வதக்கி அரையாப்புக் கட்டிகள் உள்ள இடங்களில் கட்டிவர விரைவில் குணம் பெறலாம்.இசங்கு இலைச்சாறுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் கரப்பான் மற்றும் தோல் வியாதிகள் நீங்கும். இசங்குவேரை இடித்து எண்ணெய் விட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு வாயுப்பிடிப்பு, வாதக் கோளாறுகளுக்கு மேல்பூச்சாக பூசி வந்தால் உடனே பலன் கிடைக்கும்.இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து உண்டு வந்தால் சுரம் மற்றும் விஷக்கடி நீங்கும். நீரிழிவு நோயாளிகள் இசங்குவேர் பொடியை நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.இசங்கு இலை, இண்டு, தூதுவளை, கண்டங்கத்திரி, சுக்கு இவற்றை சம அளவு எடுத்து இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.   

No comments:

Post a Comment