Thursday, September 29, 2016

பெண்மையைப் போற்றுவோம்

பெண்மையைப் போற்றுவோம்

தமிழக முதலமைச்சர் உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு என்பதற்கான மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேறிய வேளையின் சற்று முன்பின்னாகத்தான் உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியைப் பற்றி எழுந்த விமர்சனம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் சட்டென சேற்றை வாரி வீசிவிட எத்தனிக்கிற சமூகத்தின் பொதுப் புத்தியின் வெளிப்பாடாகத்தான் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக ஏதோ ஒரு கட்சியின் தலைவி மீதான விமர்சனம் என்று குறுக்கிக் கொள்ளக் கூடாது.காலங்காலமாக இந்த ஆணாதிக்கச் சமூக அமைப்புக்குள் மூழ்கி மூலையில் முடங்கி விடாமல், கிடைக்கிற பிடிப்புகளை விடாமல் பற்றி மேலெழ ஒவ்வொரு பெண்ணும் எவ்வளவு பிரயத்தனப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கும் போதே பிரமிப்புதோன்றுகிறது.பரமபத ஆட்டத்தில் எத்தனை உச்சிக்குச் சென்ற பின்பும் சட்டென கீழிறக்கி விடும் சர்ப்பத்தைப் போல ஒவ்வொரு கடுஞ்சொல்லும் பெண்ணைத் தூக்கி தூர எறிந்து விடுகிறது.வேட்டைச் சமூகம் எனும் புராதான சமூக அமைப்பில் பெண் தலைமை இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வேட்டைக்குத் தலைமையேற்று அக்குடும்பத்தின் தலைவி முன்னே சென்றதை மானிடவியலாளர் ராகுல சாங்கிருத்யாயன் "வால்காவில் இருந்து கங்கை வரை' நூலில் பதிவு செய்துள்ளார். பொதுவுடைமைச் சமூக அமைப்பில் ஆண் - பெண் ஏற்றத்தாழ்வு பெரிய அளவில் இல்லை என்பதைத்தான் வரலாறு சுட்டியுள்ளது.தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் நூற்பாக்களே "பெருமையும் உரனும் ஆடூஉ மேன' என்றும் "அச்சமும் நாணும் மடனும் பெண்பாற்கு உரியவை' என்றும் ஆணாதிக்கச் சமூக அமைப்புக்கு அடித்தளம் இட்டன."நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு' போன்ற குணங்களைக் கொண்ட புதுமைப் பெண்ணைக் கட்டமைக்கும் பாரதி, "நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்' என்று அறிவிப்பதையும் கடந்த நூற்றாண்டில் கண்டோம், எனினும் அவை அத்தனையும் கற்பனாவாதம் என்ற அளவிலேயே முடிந்து விட்டன.சதி என்ற உடன்கட்டை ஏறுதல் தொடங்கி சதிர்க்கலை மகளிரான தேவதாசிகள் வரை பெண் இனம் பங்கப்படுத்தப்பட்டது. கற்பு என்ற மதிப்பீட்டை பெண்ணுக்கு மட்டுமே அதிகம் வலியுறுத்தி மரபு சார்ந்த இலக்கியங்கள் கட்டமைக்கப்பட்ட நிலையில், அதை மறுதலிக்கும் மாற்று இலக்கியங்கள் பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் போன்றோர் வாயிலாக பேசப்பட்டன."கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதானய்யா பொன்னகரம்' என்ற புதுமைப்பித்தனின் பரிகாசமும், "கற்பு நெறியென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்' என்ற பாரதியின் முழக்கமும் ஆயிரமாயிரமாண்டு பழைமைவாதத்தின் முகத்தில் ஓங்கி அறைந்தன.எனினும், சதி என்ற உடன்கட்டை வழக்கத்தையும், தேவதாசி முறையையும் ஒழிக்கவே இராஜா ராம்மோகன் ராய், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் பட்ட பாட்டை நினைத்தாலே இந்தச் சமூக அமைப்பு பெண்களை ஒடுக்குவதில் எவ்வளவு கருணையற்று இருந்தது என்பதைக் காண முடிகிறது. "பெண்ஏன் அடிமையானாள்' என்ற நூலில் தந்தை பெரியார் சுட்டிக் காட்டும் காரணங்களும் இவற்றோடு பொருத்தப்பாடு கொண்டவையே.1883-இல் மாயூரத்தை அடுத்த மூவலூர் கிராமத்தில் தேவதாசி குலத்தில் பிறந்து இளம் வயதிலேயே பொட்டுக்கட்டப்பட்ட தமிழின் முதல் பெண் நாவலாசிரியர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், அவரது நாவலை வெளியிடுவதற்கு கடும் இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது.323 பக்கமுள்ள தனது நாவலை வெள்ளைத் துரைச்சி அம்மையார் என்கிற ஜமீன்தாரிணி ஒருவரது உதவியினால் அச்சேற்றி இருக்கிறார். 1930-இல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்த போது அவரது சொந்தக் கட்சிக்காரர்களாலேயே கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி இருந்தது.1937-இல் ராஜாஜி முதலமைச்சரான பின்பும் அம்மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளடப்படவில்லை. கட்சிக்குள் ராஜாஜிக்கு முரண்பட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியும் அந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்துள்ளார். கடைசியில் 1947-இல் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டம் அமலுக்குவந்தது.இத்தகைய பின்னணியில் இருந்து பார்க்கும்போது, மூவலூர் இராமாமிர்தம் அம்மாளும், அவரது சமகாலத்தவரான வை.மு.கோதைநாயகி அம்மாளும் இலக்கியத் தளத்தில் சந்தித்த எதிர்வினைகளும், முத்துலட்சுமி ரெட்டிக்கு அரசியல் தளத்தில் ஏற்பட்ட நெருக்கடியும், கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் கலை உலகில் சந்தித்த சவால்களும் நூற்றாண்டுக்குப் பின்னும் இன்னும் முற்றுப் பெறவில்லை.தேசத்தை விடுதலை வேள்விக்கு ஆயத்தப்படுத்திய மகாத்மா, அத்தகைய போராட்டங்களில் பெண்களின் பங்கை தெளிவாக உணர்ந்திருந்தார். பெண்கள் சமமாகப் பங்கெடுக்கும் இயக்கமே சாதிக்க முடியும் என்ற அவரது அசைக்க முடியாத நம்பிக்கை நிரூபணமானதை இந்திய விடுதலைப் போராட்டத்தில் உணர முடிந்தது.வை.மு. கோதைநாயகியின் பதிவொன்றில் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் ராட்டையில் நூல் நூற்றவாறு மறியல் செய்த காட்சி குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் பிரிவினைக்கு முந்தைய காலத்தில் பிரிட்டிஷார் நடத்திய தடியடியை எதிர்த்து இரண்டு இரவுகள் பெண்கள் மாடியில் இருந்து தண்ணீரை வாரி இறைத்துள்ளனர். இப்படிப் பெண்கள் வீரியத்துடன் பங்கெடுத்ததாலேயே சுதந்திர இயக்கத்தில் எழுச்சி நிறைந்தது.தாய்வழிச் சமூக அமைப்பு உலகின் பெரும்பாலான தொன்ம நாகரிகங்களில் இருந்தமைக்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. பொதுத்தளங்களில் வேட்டை முதல் நிர்வாகம் வரை தாய்த்தலைமை இருந்துள்ளது.சீனத்துத் திருமண முறையை உருவாக்கிய ஃப்யூஹி காலம் வரையிலும், 14-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஜப்பானிலும் தாய்த் தலைமையே இருந்துள்ளது. ஹீப்ரு இனத்திலும், அரேபியப் பெண்களின் சொத்துரிமையும், அவர்களுள் சான்றோர் என மதிக்கப்பட்ட பெண்கள் எழுவர் போன்ற தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.எகிப்தின் தாலமி வம்சத்திலும், கேரளத்து நாயர் வகுப்பினரின் தரவாடு எனப்படும் மூத்த ஆண் சகோதரி மக்களின் உரிமைகளைப் பேணும் முறை, "மருமக்கள் வழி மான்மியம்' எழுதிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை காலம் வரை சமூக வழக்காக இருந்ததை அறிய முடிகிறது.சமூகத்தின் மிகச் சிறிய அலகான குடும்பத்தில் இருந்த பெண்வழித் தாய் உரிமை, அதன் வழியிலான அரசுரிமை போன்றவை கேரள வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை. வரலாற்று ஆதாரங்கள் வலுவாக இருந்தபோதிலும், கல்வி உரிமை, பொதுத் தளங்களில் இயங்குதல் போன்றவை மறுக்கப்பட்ட காலச் சூழலைக் கடந்து வந்துள்ளோம் என்பதே கசப்பான உண்மை.நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் அறிமுகமான காலத்தில் அவற்றை வாசிப்பதற்குக்கூட சுதந்திரம் அற்றவர்களாகவே பெண்கள் இருந்துள்ளனர்.மேலும் சினிமாவின் முன்னோடி வடிவமான நாடகம், கூத்து போன்ற கலை வடிவங்களில் பெண்களுக்கு பதிலாக ஆண்களே ஸ்த்ரீபார்ட் வேடமணிந்து வந்ததையும், தொடக்ககாலத் தமிழ்த் திரைப்படங்களில் கே.பி. சுந்தராம்பாள் போன்ற ஆன்மிக நாட்டம் கொண்டவர்களே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டதும், வை.மு. கோதைநாயகி அம்மாள் நாடகம் நடித்துக் கொண்டிருந்த போதே தலைமுடி அறுக்கப்பட்ட நிகழ்வும் ஆணாதிக்கச் சமூகம் பொதுத்தளங்களில் பெண்களை இயங்க விடாமல் முடக்கி வைத்திருந்தமைக்கான காத்திரமான சான்றுகள்.இந்தியப் பொது வாழ்வில் அங்கொன்றும், இங்கொன்றுமாக வெற்றி பெற முடிந்த சிலரும் குடும்பக் கட்டமைப்பைத் தாண்டி செயல்பட்டவர்கள் என்பதே உண்மையாகும்.தமிழக முதலமைச்சர் தான் நிலை கொண்ட அரசியல் தளத்தில் நின்று கொண்டு பெண் முன்னேற்றம் தொடர்பானவற்றில் வீரியமாக இயங்கி வந்துள்ளார் என்பதை அவருடைய ஒவ்வொரு ஆட்சிக் காலமும் தெளிவாக உணர்த்துகிறது.பெண் சிசுக்கொலை அதிகமாக இருந்த காலகட்டத்தில் நம் முதலமைச்சர் அறிமுகப்படுத்திய தொட்டில் குழந்தைத் திட்டமும், நாட்டிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தொடங்கி வைக்கப்பட்ட மகளிர் காவல் நிலையங்களும் பெண் இன வரலாற்றில் காலம் காலமாக கல்வெட்டாய் நிலைக்கப் போகிறவை.மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை இலவசத் திட்டங்கள் என்பதைத் தாண்டி அவை மகளிரின் அன்றாட வாழ்வின் பணிச் சுமையைக் குறைப்பதில் வகிக்கிற பங்கையும், மாணவியருக்கு வழங்கப்படும், இலவச சானிட்டரி நாப்கினையும் சாதாரணமானவை என்று ஒரு போதும் புறந்தள்ள முடியாது. இன்று மத்திய அரசே நடைமுறைப்படுத்தாதவை மகளிருக்கு ஒன்பது மாத பேறுகால விடுப்பும்,

உள்ளாட்சியில் 50 சதவீதம் இடஒதுக்கீடு என்பதும்.புதுமைப் பெண்களை உருவாக்கும் சமூகத்திற்கு தமிழக முதலமைச்சர் போன்றவர்கள் மாபெரும் உந்து சக்தியாக விளங்குவார்கள். நாயக வழிபாடே நிலவி வந்த சமூகம் முதன்முறையாக ஒரு தலைவியைக் கொண்டாடும் சமூக மாற்றமும் வரவேற்புக்குரியது; தனித்த ஆய்வுக்குரியது!

 

No comments:

Post a Comment