விஞ்ஞானிகளின் வைரஸ் விவசாயம்

விஞ்ஞானிகளின் வைரஸ் விவசாயம்


சோதனைக்கூடத்தில் நோரோ வைரஸை (Noro virus) வளர்க்க 45 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தார்கள். இப்போது அதை வளர்த்துச் சாதனை படைத்துவிட்டார்கள்.

பூச்செடி அழகாய் இருந்தால் வளர்க்க ஆசைப்படு கிறோம். போயும் போயும் வைரஸை ஏன் வளர்க்கணும் என்று கேட்கிறீர்களா? மந்தையில் ஓடுகிற ஆடுகளில் ஒன்றைப் பிடித்து ஆராய்வதைப் போல, நுண்ணுயிர்களை ஆய்வு செய்ய முடியாது. குறிப்பிட்ட வைரஸையோ, பாக்டீரியாவையோ ஆய்வகத்தில் பண்ணைக் கோழி போல மொத்தமாக வளர்ப்பார்கள். இதை 'மைக்ரோபயாலஜி கல்சர்' என்பார்கள்.

நோரோ வைரஸை வளர்க்க விரும்பியதற்குக் காரணம், அது மனிதனுக்கு இரைப்பைக் குடல் அழற்சி (gastroenteritis) நோயை உண்டுபண்ணக் கூடிய நுண்கிருமி. இரைப்பைப் பாதையில் வீக்கத்தை ஏற்படுத்தி, தீவிர வயிற்றுப்போக்குக்கு உள்ளாக்கும் இந்நோயால் மரணம்கூடச் சம்பவிக்கும். உணவு அல்லது பருகும் நீர் முதலியவற்றால் ஏற்படும் நோய் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், 4 கிருமிகளே இந்நோய்க்குக் காரணம். நூற்றில் 20 பேருக்கு ரோட்டோ வைரஸாலும், 30 பேருக்கு அடினோ மற்றும் ஆஸ்டிரோ வைரஸாலும் இந்நோய் ஏற்படுகிறது. மீதமுள்ள 50% பேருக்கு நோயைத் தருவது நோரோ வைரஸ் தான். அதாவது, வருடத்துக்கு சுமார் 2 லட்சம் பேரைக் கொல்கிறது இந்த வைரஸ். மற்ற மூன்று வைரஸ்களையும் சோதனைச்சாலையில் வளர்த்துவிட்டார்கள். அதன் மூலம் தடுப்பூசிகளையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

'வயிற்றுப்போக்கு வைரஸ் ஆய்வின் தந்தை' என போற்றப்படும். ஆல்பர்ட் காபிகியான் (Dr.Albert Kapikian) 1972-ல் மனித நோரோ வைரஸை இனம் கண்டார். அன்று முதல் அதை வளர்க்க முயன்றார்கள். அப்படி வளர்த்து அந்த வைரஸின் உயிரியல் பண்புகளை அறிந்துகொண்டால்தானே, அதை அழிக்கும் மருந்து, தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும்?

வைரஸ்களில் தாவர வைரஸ், விலங்கு வைரஸ் என்று இருபெரும் பிரிவுகள் இருப்பதை அறிவீர்கள். வாழிடத்தைப் பொறுத்து அவற்றுக்கு அந்தப் பெயர். எனவே, மனித வைரஸ் களை வளர்க்க வேண்டும் என்றால், மனிதத் திசுக்கள் தேவை. அதன்படி, மனிதக் குடலில் உள்ள மேற்திசு செல்களை பெட்ரி டிஷ்ஷில் வளர்த்து, அதன் மீது வைரஸை இட்டுச் சோதனை செய்தபோது, வைரஸ் வளர்ந்தது. ஆனால், சீக்கிரமே மடிந்துபோனது. ஆக, குடலுக்குள் வாழ்வது போன்ற சூழலை சோதனைச்சாலையில் செயற்கையாக ஏற்படுத்தினால் மட்டுமே இந்த வைரஸை வளர்க்க முடியும் எனப் புரிந்துகொண்டனர் விஞ்ஞானிகள்.

குடலில் வளரும் வைரஸ்கள் கணையம் சுரக்கும் நொதிகளைப் பயன்படுத்தித்தான் பல்கிப் பெருகுகின்றன. எனவே, நோரோ வைரஸுக்கும் கணைய நொதிகள் தேவைப்படுமோ எனக் கருதிச் செய்த சோதனையும் பயன்தரவில்லை. குடலில் கல்லீரல் சுரக்கும் பித்தநீரும் வருமே என்று யோசித்து, பெட்ரி டிஷ்ஷில் குடல் திசு மற்றும் பித்தநீர்க் கலவையை வைத்து, நோரோ வைரஸை வளர்த்தபோது கிடைத்தது வெற்றி. பஞ்சகவ்யம் பாய்ச்சிய பயிர்போல பல்கிப் பெருகி வளர்ந்தன வைரஸ்கள்.

கொசுகே முருகாமி (Dr. Kosuke Murakami) முதலியோர் நடத்திய இந்த ஆய்வு, மருத்துவத் துறையில் பெரும் பாய்ச்சல். சீக்கிரமே அந்த வைரஸை எங்கே, எப்படி அடித்தால் சாகும் என்பதைக் கண்டறிந்து, மருந்தும் கண்டுபிடித்துவிடுவார்கள். அப்புறம் என்ன? இரைப்பைக் குடல் அழற்சி நோய்க்கு டாடா சொல்லிவிடலாம்! 

Comments