ஆஷா போஸ்லே பிரபல பின்னணிப் பாடகி

ஆஷா போஸ்லே பிரபல பின்னணிப் பாடகி

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளுள் ஒருவரும் 60 ஆண்டுகளுக்கும் மேல் பின்னணி பாடி வருபவருமான ஆஷா போஸ்லே (Asha Bhosle) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l

மகாராஷ்டிரத்தில் சாங்க்லி மாவட்டத்தில் கோர் என்ற கிராமத்தில் பிறந்தார் (1933). தந்தை ஒரு நடிகர். இவரது 9 வயதில் தந்தை காலமானார். குடும்பம் பம்பாயில் குடியேறியதும், இவரும் இவரது அக்கா லதா மங்கேஷ்கரும் திரைப்படங்களில் பாடினர்.

l

1943-ல் முதன்முதலாக 'சலா சலா நவ பாலா' என்ற மராத்தி மொழிப் பாடலை ஆஷா தனியாகப் பாடினார். 1949-ல் 'ராத் கீ ராணி' படப் பாடல் மூலம் புகழ்பெறத் தொடங்கினார்.

l

1952-ல் 'சங்தில்', அடுத்த ஆண்டு 'பரிநீதா' ஆகிய படப் பாடல்களாலும் ராஜ் கபூர் படத்தில் பாடிய 'நன்ஹே முன்னே பச்சே' என்ற பாடல் மூலமும் புகழ்பெற்றார். தொடர்ந்து 'சி.ஐ.டி.', 'நயா தௌர்' ஆகிய படங்களில் பாடிய பாடல்கள் வெற்றி பெற்றதில் பாலிவுட்டில் நிரந்தர இடமும் கிடைத்தது.

l

1966-ல் 'தீஸ்ரி மஞ்சில்' படத்தில் இவர் பாடிய 'ஆஜா ஆஜா' என்ற மேற்கத்திய பாணியிலான பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 'வசன்' படத்தில் பாடிய 'சந்தாமாமா தூர் கே' என்ற தாலாட்டுப் பாடல் இந்திய அன்னையரின் மனம் கவர்ந்த பாடலாக மாறிவிட்டது.

l

'ஹவுரா பிரிட்ஜ்', 'மேரே சனம்', 'காஷ்மீர் கீ கலி', 'வக்த்', 'கும்ராஹ்', 'சாகர்', 'ஆத்மி அவுர் இன்சான்', 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா', 'உம்ராவ் ஜான்', 'இஜாசத்', 'யாரோங் கீ பாராத்', 'ரங்கீலா' உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

l

மராட்டியர்கள் இவரை ஆஷா 'தாயி' (சகோதரி) என்று அன்புடன் குறிப்பிடுவர். தமிழில் 'நம்ம ஊரு பாட்டுக்காரன்', 'ஹே ராம்', 'இருவர்', 'சந்திரமுகி' உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார். கஜல், பஜனைப் பாடல்கள், கவாலி எனப் பல்வேறு வகைப் பாடல்களைப் பாடும் திறன் கொண்டவர். இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம், தமிழ், மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஆங்கிலம், ரஷ்யா, நேபாளம், செக் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.

l

கனடா, துபாய், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இசைப் பயணங்கள் மேற்கொண்டார். 1990களில் பழம்பெரும் பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இவர் இசையமைத்து, பாடி வெளியிட்ட 'ராகுல் அன்ட் ஐ', 'ஜானம் சம்ஜா கரோ', 'ஆப்கி ஆஷா' உள்ளிட்ட பல இசைத் தட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தன.

l

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

l

நன்றாகச் சமைப்பார். தங்களுக்கு விருப்பமான உணவைச் சமைத்துத் தரும்படி கேட்கும் பல திரையுலகப் பிரபலங்களுக்கு அன்போடு சமைத்துத் தருவாராம். துபாய், குவைத் ஆகிய இடங்களில் உணவகங்களை நடத்திவருகிறார்.

l

இரண்டு முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, பல ஃபிலிம்ஃபேர் விருதுகள், நைட்டிங்கேல் ஆஃப் ஆசியா, தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இன்று 83-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இவர் இப்போதும் திரைப்படங்கள், ஆல்பங்களில் பாடியும், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார்.  

Comments