மாங்கல்ய பலம் கூட்டும் மங்கள நாயகி : திருமங்கலக்குடி

மாங்கல்ய பலம் கூட்டும் மங்கள நாயகி : திருமங்கலக்குடி

எமனுடன் போராடி தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்டாள் சாவித்ரி. ஆனால், இன்னொரு பெண்ணோ இறைவனுடனேயே போராடி தன் கணவனை  மீட்டிருக்கிறாள். என்ன கதை அது? முதலாம் குலோத்துங்க சோழனிடம் அலைவாணர் என்ற ஓர் அமைச்சர் இருந்தார். இவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி  கொண்டவர். சிவபெருமானுக்குத் தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் ஓர் ஆலயம் அமைக்க ஆர்வம் கொண்டார். ஆனால், அதற்கு நிறைய பணம் வேண்டுமே!  வரி வசூலில் வரும் பணம் யாவும் அவர் மூலமாகத்தான் கஜானாவுக்குச் செல்ல வேண்டும். அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன? உடனே வரிப்  பணத்தைச் செலவழித்துக் கோயில் கட்டினார். இதைக் கேள்விப்பட்ட மன்னன் கடுங் கோபங்கொண்டான். அரச தண்டனைக்கு அஞ்சிய அமைச்சர் தன் உயிரை  மாய்த்துக் கொண்டார். கணவனின் முடிவை அறிந்த அவரது மனைவி, கணவன் கட்டிய கோயிலில் உள்ள இறைவனிடமும், இறைவியிடமும் கண்ணீர் பெருக்கி  கதறி அழுதாள். தன் கணவனை மீண்டும் உயிரோடு தந்தருளுமாறு வேண்டினாள். இறையருளால் அலைவாணர் உறங்கி எழுபவர் போல் எழுந்தார். இவ்வாறு தன் பக்தனுக்கு மீண்டும் பிராணனை அருளி உயிர்ப்பித்ததால் இங்குள்ள இறைவன்  பிராண நாதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அமைச்சரின் மனைவியின் மாங்கல்யத்தைக் காத்து அருள் புரிந்ததால் இத்தல இறைவி மங்களநாயகி என  அழைக்கப்படுகிறாள். நவகிரக தோஷங்களை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது திருமங்கலக்குடி. நவகிரக நாயகர்கள் இத்தலத்து இறைவனையும்இறைவியையும் வணங்கி தங்களது சாபம் நீங்கப் பெற்றிருப்பதாகவும் புராணம் உண்டு. முன்னொரு காலத்தில் விந்திய மலைச்சாரலில் காலவ முனிவர்  வசித்திருந்தார். அவர் முக்காலத்தையும் கணிக்கும் வல்லமை கொண்டவர். ஒருநாள் அவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்தபோது, முன் ஜென்மத்தில் நண்டுகளின்  காலை முறித்துத் தின்ற பாவத்தால், இப்போது தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். கிரகங்களை வழிபட்டால் அந்த தோஷத்திலிருந்து விடுபடலாம் என உணர்ந்தார். உடனே, நவகிரகங்களை நோக்கி கடுந்தவம் இருக்கத் தொடங்கினார். முனிவரின்  தவத்திற்கு இரங்கி நவகிரகங்கள் அவருக்கு காட்சி தந்து, "என்ன வரம் வேண்டும்?" என கேட்டனர். முனிவர் தன்னை தொழுநோய் தாக்காத வரம் கேட்கஅவர்களும் அப்படியே தந்தனர். நவகிரகங்களின் இந்தச் செயலை அறிந்த பிரம்மா சினம் கொண்டார். "உங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது.  முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே நீங்கள் தர வேண்டுமெனப் பணித்திருந்தேன். நீங்களோ காலவ  முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் தந்தீர்கள். எனவே, நீங்கள் பூலோகத்தில் பிறந்து தொழுநோயால் பீடிக்கக்கப்படுவீர்கள்" எனச் சாபமிட்டார்.அதிர்ச்சியடைந்த நவகிரக நாயகர்கள் தங்களது சாபத்தை நீக்கும்படி பிரம்மாவை வேண்டினர். மனம் இளகிய பிரம்மா, "சோழ நாட்டில் திருமங்கலக்குடிக்கு  அருகே உள்ள வெள்ளெருக்கு காட்டுக்குச் செல்லுங்கள். கார்த்திகை மாத முதல் ஞாயிறு முதல் பன்னிரண்டு ஞாயிறுகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தங்களில்  நீராடுங்கள். பின், திங்களன்று காவிரியில் நீராடி, திருமங்கலக்குடி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பிராணநாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபடுங்கள்.  பிறகு, வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் புசியுங்கள். இப்படிச் செய்தால் உங்கள் சாபம் நீங்கி விமோசனம் பெறுவீர்கள்" என்றார். நவகிரக நாயகர்களும்  அப்படியே செய்து சாப விமோசனம் பெற்றனர். அப்போது பிராண நாதேஸ்வரர் அவர்களைப் பார்த்து, "இந்த அர்க்கவனத்தின் வடகிழக்கில் நீங்கள் தங்கி தவம்  செய்த இடத்தில் உங்களுக்கென தனி ஆலயம் உண்டாகி, அது உங்களுக்கு உரிய தலமாக விளங்கட்டும். அங்கே வந்து உங்களை வழிபடுவோர்க்கு, நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்ய வரம் தந்தோம்" எனக்கூறினார். பின்னர் தங்களை வந்து தரிசித்த  காலவமுனிவரிடம், அந்த இடத்தில் தங்களுக்கு தனிக்கோயில் அமைக்கும்படி கூற, முனிவரும் அங்கே கோயில் அமைத்து, நவகிரகங்களை பிரதிஷ்டை செய்து  வழிபட்டார். அர்க்கவனமாக இருந்த அந்த இடத்தில் காலப்போக்கில் எருக்கங்காடுகள் அழிந்தன. குடியிருப்புகள் உருவாகின. பிராணநாதேஸ்வரர் ஆலயம் உள்ள  இடம் திருமங்கலக்குடி எனவும், நவகிரக நாயகர்கள் கோயில் கொண்டுள்ள இடம் சூரியனார் கோயில் எனவும் இரண்டு தலங்களாகப் பிரிந்தன. ஐந்து நிலை  ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தருகிறது. உள்ளே இரண்டு பிராகாரங்கள். இறைவன் பிராணநாதேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். முன்மண்டபத்தில்  தென்திசை நோக்கியபடி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார், இத்தல இறைவியான மங்களநாயகி. அம்மனின் முன்கரத்தில் மாங்கல்ய சரடுகள்  தொங்குகின்றன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், ஆறுமுகக்கடவுள், பிரம்மன் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. இந்த பழமையான கோயிலில் அருள்பரப்பும் ஈசனை சம்பந்தரும், திருநாவுக்கரசரும், தம் தேவாரத்தில் சிறப்புறப் பாடியுள்ளனர். இந்தக் கோயிலில் அனைத்தும்  மங்களகரமானவையே! ஆமாம், இறைவி, மங்கள நாயகி. விநாயகர், மங்கள விநாயகர். விமானம், மங்கள விமானம். கோயில், மங்கள கோயில். தீர்த்தம், மங்கள  தீர்த்தம்! சூரியனார் கோயிலுக்குச் செல்பவர்கள் முதலில் திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரரை வணங்கிய பின்னரே அங்கு செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.  இங்கு ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்னையின் திருக்கரத்தில் இருக்கும்  மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. பிராணநாதேஸ்வரருக்குத் தொடர்ந்து 11 ஞாயிற்றுக் கிழமைகள்  அர்ச்சனை செய்து வந்தால் நவகிரக  தோஷம், பூர்வஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும் என்கிறார்கள். அன்னை மங்களநாயகிக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால்  மாங்கல்ய பலம் கூடும், களத்திர தோஷம் அகலும் என்று சொல்கிறார்கள் பலனடைந்த பக்தர்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி.

Comments