ஓய்வூதிய திட்டம் குறித்து ஆலோசனை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்பு

ஓய்வூதிய திட்டம் குறித்து ஆலோசனை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்பு

ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் மாற்றப்பட்டு கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவின் அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார்.அக்குழுவின் தலைவராக முதல்வர் அலுவலக சிறப்புப்பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டார். குழுவின் உறுப்பினர்களாக நிதித்துறை செயலர் கே.சண்முகம், சென்னை பொருளாதாரப் பள்ளியின் பேராசிரியர் பிரிஜேஷ் சி.புரோகித் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவின் கூட்டம் ஏற்கெனவே நடந்தது. அப்போது பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தன. இக்குழுவின் அடுத்த கூட்டம் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், ஜாக்டா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்றன. இச்சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் பரிந்துரைகளை, குழுவுக்கு அளித்தன. இவற்றை பரிசீலித்து, இறுதி அளிக்கையை விரைவில் குழு தயாரித்து அரசுக்கு அளிக்கும். இதன் அடிப்படையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.  

Comments