உலகின் அதிசய ‘மெமரி’ மனிதர்!

உலகின் அதிசய 'மெமரி' மனிதர்!

உலகின் மிகச் சிறந்த நினைவுத்திறன் பெற்ற மனிதர் பிரிட்டனைச் சேர்ந்த டொமினிக் ஓ பிரைன். கடந்த 10 ஆண்டுகளில் 8 முறை 'உலக நினைவுத்திறன் சாம்பியன்ஷிப்' பட்டங்களை வென்றிருக்கிறார்! ஒரு முழு சீட்டுக்கட்டையும் சில நொடிகளில் நினைவில் வைத்துக்கொள்வதால், உலகம் முழுவதும் உள்ள சூதாட்ட விடுதிகளில் டொமினிக் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உலகத்தையே தம் நினைவுத்திறனால் அச்சப்பட வைக்கும் 59 வயது டொமினிக், குழந்தையில் மிகவும் மோசமான நினைவுத்திறனோடு இருந்திருக்கிறார். ஆசிரியர் பாடம் நடத்துவதை அவரால் நினைவில் வைக்க முடியாது. மிகுந்த துன்பத்துக்கு ஆளானார். பிறகுதான் அவருக்கு நினைவுத்திறன் குறைபாடும், டிஸ்லெக்ஸியா பிரச்சினையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "நான் குழந்தையாக இருந்தபோது படுக்கையில் இருந்து கீழே விழுந்து, என் தலையில் அடிபட்டிருக்கிறது. ரயிலில் இருந்து தவறி, தண்டவாளத்தில் ஒருமுறை விழுந்துவிட்டேன். இதனால் என் முன் தலைப்பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 1987ம் ஆண்டு தொலைக்காட்சியில் சீட்டுக்கட்டுகளை வைத்து, நினைவுத்திறன் விளையாட்டுகள் ஒளிபரப்பாகின. அதை ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக விளையாடிப் பழகினேன். 30 வயதில் முறையாக நினைவுத்திறன் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். சில வாரங்களிலேயே என்னிடம் அசாதாரண மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன! முழு சீட்டுக்கட்டையும் வெகுவேகமாக நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது. ஒரு வருடத்துக்குள் 6 கட்டுகளில் உள்ள 312 சீட்டுகளையும் என்னால் நினைவில் கொண்டுவர முடிந்தது. கின்னஸ் சாதனையும் படைத்தேன். இன்று என்னிடம் 54 கின்னஸ் சாதனைகள் இருக்கின்றன! முயற்சியும் பயிற்சியும் செய்தால், யார் வேண்டுமானாலும் நினைவுத்திறனில் சாதிக்கலாம். என் உத்திகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பின்னர் அறிந்தபோது, மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 1994ம் ஆண்டு, நினைவுத்திறனை வளர்த்துக்கொள்வது எப்படி? என்று முதல் புத்தகம் எழுதி, வெளியிட்டேன். இந்தப் புத்தகம் மிகவும் எளிமையானது. நீங்கள் வசிக்கும் வீடு, வேலை செய்யும் அலுவலகம், விளையாடும் பூங்கா என்று எதை வேண்டுமானாலும் வைத்து, நினைவுத்திறனை அதிகரித்துக்கொள்ளலாம். நீங்கள் நினைவில் வைக்க விரும்பும் விஷயங்களை எழுத்துகளாக இல்லாமல், படங்களாக நினைவில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டொமினிக் ஓ பிரைன். கின்னஸ் உலக சாதனை அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான நோரிஸ் மெக்விர்டர், "மனிதர்களால் 6 கட்டுகளில் உள்ள சீட்டுகள் வரையே நினைவில் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் டொமினிக், 54 கட்டுகளில் இருந்த 2808 சீட்டுகளையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அனைத்தையும் சொல்லிவிட்டார். இதில் 8 பிழைகள் இருந்ததாகச் சொல்லி, 4 பிழைகளைச் சரி செய்தும்விட்டார். மனிதர்களால் இது சாத்தியமில்லை!'' என்கிறார்.

நாயின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றிய அன்பு மனம்!

அமெரிக்காவில் வசிக்கும் அஷ்லே நீல்ஸ், பனிப்பிரதேசத்தில் வாழக்கூடிய ஹஸ்கி நாயை வளர்த்து வந்தார். திடீரென்று நாய்க்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விரைவில் நாய் இறந்துவிடும் என்பதால், நாயின் விருப்பங்களை நிறைவேற்ற முடிவு செய்தார். நண்பர்களின் உதவியுடன், செயற்கைப் பனிப்பொழிவை உருவாக்கினார். நாயின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!

 

Comments