Monday, September 26, 2016

மேகத்துக்கு ஒரு தூது!

மேகத்துக்கு ஒரு தூது!

"மேகமே மேகமே' "ஓடும் மேகங்களே' "மேகாரே மேகாரே' என்றெல்லாம் மேகத்தை வர்ணித்துப் பாடாத கவிஞர்களே இல்லை. எல்லா மொழிகளிலும் மேகவர்ணனை உண்டு. தலைவி தலைவனுக்கு மேகத்தைத் தூது விட்டுத் தன் தனிமைத் துயரத்தை வெளிப்படுத்துவாள்.மேகத்தைச் சுமக்கும் ஆகாயம் இந்திரனைக்குறிக்கும். வெல்ல முடியாத வீரக்கடவுளாக இந்திரனை நான்மறை போற்றுகிறது. இடி என்பது இந்திரனின் வீர கர்ஜனை. மின்னலே இந்திரனின் வஜ்ராயுதம். இப்படிப்பட்ட இந்திரனையே வென்றதினால் இராவணனின் புதல்வனை இந்திரஜித்தன் என்று புகழ்ந்த வால்மீகி, அப்படிப்பட்ட இந்திரனையும் வெல்லக்கூடிய தெய்வமாக மாருதியை அதாவது அனுமனையும் ஒப்பிடத் தவறவில்லை.மாருதி காற்றின் தெய்வம். மேகம் பெரிதா? காற்று பெரிதா? எது அதிக சக்தியுள்ளது? விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் மேகத்தின் கருவே காற்றுதான். காற்றைப் பற்றி மகாகவி பாரதியார் இயற்றிய வசன கவிதைகளைப் படித்தவர்கள் அவருடைய வேதாப்பியாசத்தைக் கண்டு வியந்து மகிழ்வர்.குறிப்பாக, மேகத்தைப் போற்றும் ரிக்வேத சாரமே அவை. காற்றை மேகத்தின் ஒரு கூறாகப்போற்றிய வைதீக விஞ்ஞான உண்மையையும் விண்டுரைக்கின்றார்.

""காற்றைப் புகழ நம்மால் முடியாது

அவன் புகழ் தீராது.

அவனை ரிஷிகள் "ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம'

என்று போற்றுகிறார்கள்.

ப்ராண வாயுவைத் தொழுகின்றோம், அவன் நம்மைக்காத்திடுக.

அபாநனைத் தொழுகின்றோம்.

அவன் நம்மைக் காக்க.

வ்யானனைத் தொழுகின்றோம்.

அவன் நம்மைக் காக்க.

உதானனைத் தொழுகின்றோம்.

அவன் நம்மைக் காக்க.

ஸமானனைத் தொழுகின்றோம்.

அவன் நம்மைக் காக்க.

உயிரை வணங்குகின்றோம்

உயிர் வாழ்க. உயிரே, நினது

பெருமை யாருக்குத் தெரியும்?

நீ கண்கண்ட தெய்வம்.

எல்லா விதிகளும் நின்னால் அமைவன.

எல்லா விதிகளும் நின்னால் அழிவன.

உயிரே! நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்.

தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ.

மாறுவனவற்றை மாற்றுவிப்பது

நின்தொழில்.

பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி,

ஊர்கின்ற புழு,

இந்த பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள்,

எண்ணற்ற உலகங்களில் உள்ள

எண்ணேயில்லா உயிர்த்தொகைகள் -

இவையெல்லாம் நினது விளக்கம்''.

இனி ஒரு சித்தர் பாடல் }

"காயமே இது பொய்யடா - வெறும்

காற்றடைத்த பையடா'.

இந்த உடல் காற்றடைத்த பை என்று பொருள். பாரதி எடுத்துக்காட்டியுள்ள ப்ராணன், அபானன், வ்யானன் உதானன், சமானன் என்று ஐந்து மூலக்காற்றையும் கொண்டதே இப்பூதவுடல்.இந்த ஐந்து காற்றும் நம் உடலில் உள்ளது. நாம் உண்ணும் உணவு செரிமானமாகி ரத்தத்தில் சேர்ந்து விந்து சக்தியாகவும் உந்து சக்தியாகவும் மாறுகிறது என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் பாரதி பிரபஞ்சத்தின் அம்சமாகவே இந்த ஐந்து பூதக்காற்றுகளை நோக்குகிறார்.ஏனெனில், ஐம்பூதத் தத்துவத்தில் தான் மனித உடலில் உயிரியக்கம் நிகழ்கிறது. பிராணன் என்பது உயிர்க்காற்று ஆக்சிஜன். அபானன் என்பது கார்பன் - மீத்தேன் - நைட்ரஜன். மற்ற காற்றுகள் ஒளிக்கற்றைகளைக் குறிக்கும் சக்திகள்.அன்று செய்தி சொல்ல மேகத்தை தூது அனுப்பியதாக புலவர்கள் காவியங்களைப் படைத்தார்கள். இன்று ஒலி அலைகளைத் திரட்டும் கோபுரங்களை வடிவமைத்து 2ஜி, 3ஜி என்றெல்லாம் பேசுகிறோம். இவற்றை இயக்குவது மேகமும் காற்றுமே.இன்று இந்தியாவிலிருந்து தொலைவில் உள்ள அமெரிக்காவுடன் கைபேசியில் பேசுகிறோம். காளிதாசனின் மேகவிடு தூது இன்று நிஜமாகிவிட்டது. வானியல் தத்துவத்தின்படி இந்த பூவுலகு ஒரு கோளம். அண்டவெளியில் சுற்றும்போது பூமியை மிதக்கவைக்கும் ஒரு சக்தியே நைட்ரஜன் என்ற அபானன்.அந்த அபானனைத் தூய்மைப்படுத்துபவனே பிராணன் - அதாவது ஆக்சிஜன். குறிப்பாக, பாரதியார் கூறியபடி "ஒரு சதுர காற்று வரம்பில் லட்சக்கணக்கான சிறிய ஜந்துக்கள் கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன' என்ற வாசகத்தில் வானியல் விஞ்ஞானமே அடங்கியுள்ளது."வானியல்' என்பது கோள்களைப் பற்றிய படிப்பு மட்டுமல்ல, இந்த பூமிக்கும் வானத்திற்கும் உள்ள தொடர்பில் காணக்கூடிய மேகம், மழை, வெய்யில், குளிர், காற்று போன்ற ஆற்றல்கள் குறித்த படிப்பும் ஆகும்.ஆகாயத்தில் விண்வெளிக் கப்பல்களைப் பறக்கவிட்டு தொலை தூரத்தில் உள்ள சந்திரனையும் செவ்வாயையும் ஆராய்வது சரி. ஆனால் மண் மீது தாக்கம் ஏற்படுத்தும் மேகம், காற்று, மழை பற்றி நாம் இன்னம் முழுமையாக அறியவில்லை.விஞ்ஞான அறிவின்படி பூமியின் மேற்பரப்பில் 40 சதவீதம் வெற்றிடம் என்றால் 60 சதவீதம் மேகமே ஆக்கிரமித்துக் கொண்டு மழை, வெண்பனி, புயல் ஆகியவற்றை உருவாக்கிய வண்ணம் உள்ளது.சூரிய ஒளி உருவாக்கும் ஆற்றலையும் மேகம் கட்டுப்படுத்துகிறது. மேகத்தைப் பொருத்து சூரிய ஒளி ஆற்றல் (Solar Energy) வேறுபடும். நீர் சுழற்சியால் ஏற்படும் மழையையும் கட்டுப்படுத்துகிறது. நீர் சுழற்சிக்கும் சூரிய ஒளி ஆற்றலுக்கும் அடிப்படையான மேகத்தைப் புரிந்து கொண்டால்தான் புவியின் தட்பவெப்ப மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியும். மேகத்தைச் சரியானபடி புரிந்து கொண்டால்தான் செயற்கை மழை வித்துக்களை வானில் விதைத்து மழை பெறவும் இயலும். ஆனால் மேகத்தைப் பற்றி மனிதன் புரிந்து கொண்டது மிகவும் குறைவு. மேக இயக்கத்தைப் புரிந்து கொண்டால் ஆண்டு தோறும் இடி மின்னலால் இறக்கும் மனிதர்களைக் காப்பாற்ற முடியும். மேகம் சமயங்களில் ஒரு குறுகிய பரப்பில் திரட்சியாகிறது. இவ்வாறு திரட்சியாகும் போது இடியாக வெடித்து மின்னலைக்கீழே இறக்குகிறது. இவ்வாறு பூமிக்குள் பாயும் இடி மின்னலால் கடந்த இருபது ஆண்டுகளில் 30,000 மக்கள் இந்தியாவில் மடிந்துள்ளனர்.எந்தெந்த இடங்களில் அதிகப்படியாகக் குப்பைகளை எரிக்கிறார்களோ அங்கு இடி மின்னலைத் துரிதப்படுத்தும் போக்கு நிகழ்கிறது. அதிகபட்சம் அறுவடைக் கழிவுகளாகவுள்ள உதிர்ந்த மர இலைகள், கரும்புச் சோகை, வைக்கோல் போன்றவற்றை மக்க வைக்காமல் எரிப்பதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னை நகரில் பெய்த இயல்புக்கு மீறிய மழையை நினைவு கொள்வோம். இதுவும் மாசு மிகுதியால் விளைந்ததே. இவ்வாறே மத்தியப் பிரதேசத்தில் சாத்னா மாவட்டத்தில் இரண்டே நாளில் 40 செ.மீ. மழை பெய்து வெள்ளக்காடானது. இந்த ஆண்டு கோடை மழை இந்தியாவில் பொய்தது போல் ஆகஸ்டு மாதம் வட மாநிலங்களிலும் வங்காளத்திலும், அசாமிலும் அபரிமிதமாக மழை வெள்ளம்.வட இந்திய நதிகள் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரியில் நீர் இல்லை ஆனால் உலகில் பரவலாகப் பெய்ய வேண்டிய கோடை மழை சீனாவில் மட்டும் பெய்து 400 உயிர்களைப் பறித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடு வாசல் இழந்துள்ளனர். இவ்வாறே அமெரிக்காவிலும் மாமழை பெய்துள்ளது. நிலம் கடல் நிலப்பரப்பு மாறுவது இல்லை.பூமியில் ஏற்படும் உஷ்ணத்தால் கடல் நீர் ஆவியாகி, காடுகளில் உள்ள மரங்களின் பசுமை இலைகள் வழங்கும் உயிர்க்காற்றும் சேர்ந்து படியும் நீர்த்திவலைகளே கருமேகமாகி மழை பெய்வதாகக் கொண்டால் மழை உற்பத்தியில் மாற்றம் இல்லை. மாசுகள் இல்லாத வரை மழை ஒரே சீராகவும் பருவம் தவறாமலும், பரவலாகவும் பெய்யும்.ஆனால் ஒரே இடத்தில் கொட்டித் தீர்த்தால் அம்மழை திசைமாறிப் போய்விட்டது என்பது பொருள். அதாவது, ஒரு இடத்தில் மட்டுமே அபரிமித மழை என்றால் பல இடங்களில் பெய்யாமல் வறட்சி ஏற்படும் என்பது பொருள்.காற்று சக்திதான் மேகமாகத் தெரிகிறது. உண்மையில் மேகத்தின் கருவே காற்று. காற்றும் நீரும் கலந்த உருவே மேகம். கடலும், காடுகள் - மரங்கள் உள்ள பசுமை பூமியிலும் சூரிய சக்தியால் நீராவியாகி ஓசோன் உருவாகிறது. மேகம் என்பது வானத்தில் மிதக்கும் பனித்துகள்களே. இப்பனித்துகள்களின் கரு காற்றில் உள்ள அணுக்களே.உயிர்ச் சக்தியுள்ள அபானனை மண்ணுக்குள் போற்றி மண்ணைப் பசுமையாக்கி அபானனைப் பிராணனாக மாற்றி விண்ணுக்கு வழங்கிவிட்டால் பருவத்தே மழை பொழியும். பூமியில் வெப்பம் குறையும். மனிதர்களின் பிழையால் அபானனைத் தூய்மைப்படுத்தாமல் அப்படியே மாசாக அனுப்பி மேகம் சிதைவதால் காலம் மாறிப் பெய்யும் மழை ஒரே இடத்தில் கொட்டித்தீர்த்தும் பல இடங்களில் வறட்சியையும் உருவாக்குகிறது.

பூமி மலர்ந்து குளிர மனிதர்கள் செய்ய வேண்டியது என்ன?

"மேகமே, மேகமே, எங்கள் பிழையைப் பொருத்தருள்க; நிலக்கரி வேண்டி, அனுமினியம் வேண்டி காட்டை அழிக்க மாட்டோம்; மாசு தரும் குளிர் சாதனங்களை மறந்து மின் விசிறியைப் பயன்படுத்துகிறோம்; கரிப்புகை தவிர்த்த வாகனங்களைப் பயன்படுத்துகிறோம்; மரங்களை நடுகிறோம்; மாசுகளை மரங்கள் கொண்டு நீக்கிவிட்டு நல்ல உயிர்க்காற்றை உனக்கு அனுப்புகிறோம்; மேகமே, எங்களைக் காப்பாற்று' என்று நமது பிரார்த்தனையை பிராணன் மூலம் மேகத்திற்கு தூதுவிட வேண்டும். தூது விடுவோமா? மறந்து விடுவோமா?

No comments:

Post a Comment