KALVISOLAI TNPSC

Thursday, 29 September 2016

முன்னெச்சரிக்கை தேவை

முன்னெச்சரிக்கை தேவை

ஊற்று நீரும், மழை நீரும், இவை அமைந்த மலையும், அதிலிருந்து வரும் ஆற்று நீரும், வலிய அரணும் ஒரு நாட்டிற்கு நல்லுறுப்புகள் என்கிறார் திருவள்ளுவர்.1993-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை 64 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. 2004 முதல் 2011 வரை இயல்பு அளவு, இயல்பு அளவை மிஞ்சிய மழை என பதிவாகி உள்ளது. 2005-இல் பல்வேறு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக இயல்பை விட 79 சதவீதம் அதிகமாக மழை பெய்தது.2012-இல் 16 சதவீதம் குறைவாகவும், 2013-இல் 33 சதவீதம் குறைவாகவும் பெய்தது. 2014-இல் 1 சதவீதம் கூடுதல். வடகிழக்குப் பருவ மழை காலமான, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை அளவு 44 செ.மீ. ஆனால், 2015-ஆம் ஆண்டு தமிழகத்தில் 68 செ.மீ. மழை பெய்துள்ளது.இது சராசரி அளவைவிட 53 சதவீதம் கூடுதலாகும். வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழையால் தமிழகத்திற்கு 48 சதவீதம் மழை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வடகிழக்குப் பருவ மழைதான் முக்கிய நீர் தரும் ஆதாரமாக விளங்குகிறது.கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததற்குக் காரணம் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவானது தான். இந்த நிகழ்வுகள் தொடர்ந்து, அவை தமிழ்நாட்டிற்கு அருகில் நிலை கொண்டதும், அந்தமான் பகுதியில் வெப்பம் குறைவாக இருந்ததும், தமிழகத்தில் கூடுதல் மழை பெய்ய காரணமாக அமைந்தது.அதோடு, பொதுவாக தீவிர காற்றழுத்த தாழ்வு நிலைகள் வேகமாக நகரும் காரணத்தால் மழை பொழிவு குறைவாகவே இருக்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகளின் குறைந்த வேகம் கடல் பகுதிகளில் நீண்ட நேரம் நிலை கொள்ளும் தன்மைக் கொண்டது.மேலும், கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடர் மழையும், அதைத் தொடர்ந்து உருவான பெரும்பாலன நிகழ்வுகளும் காற்றழுத்த தாழ்வுநிலை வலு குறைந்ததன் காரணமாகவே ஏற்பட்டது.ஆனால், தமிழகத்தில் வடக்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தாலும், மதுரை, சிவகங்கை, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அந்த அளவுக்கு மழை பெய்யவில்லை.இலங்கையை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் எந்த காற்றழுத்தமும் உருவாகாததே இதற்கு காரணம்.தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆபத்துகள் குறித்த முன்னறிவிப்புகளை வெளியிடு நிறுவனமான வெதர் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், இந்த ஆண்டில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 104 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.வடகிழக்குப் பருவ மழையின்போது, காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள், புயல் போன்றவை உருவாகி கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.அந்தச் சமயத்தில் பொது மக்கள் தங்களுக்கும், தங்கள் உடமைகளுக்கும், கால்நடைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், கடந்த ஆண்டு பெருமழையில் ஏற்பட்ட அனுபவத்தைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.ஊருக்குள் ஓடி வரும் மழை வெள்ளத்தை குளத்தில் தேக்கி வைத்து தண்ணீர் வங்கிகளை அக்கால மக்கள் ஏற்படுத்தினர். ஆனால், இன்று குளங்கள், ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவைகள் இருந்த இடம் தெரியவில்லை. மண் வளம் மிகுந்த தமிழ்நாட்டில் எங்கும் கான்கிரீட் காடுகளின் ஆக்கிரமிப்பால் நீர் உறிஞ்ச இடமின்றி வெள்ளநீர் வீடுகளிலும், சாலைகளிலும் விரைந்தோடுகின்றது.அவ்வாறு ஓடும் நீரினை மடைமாற்றம் செய்து அருகிலுள்ள பொது குளங்கள் அல்லது கோவில் குளங்களில் விழுமாறு செய்ய வேண்டும்.பெரும் மழையின் போதும், பேரிடர் காலங்களின் போதும் முதலில் தேவைப்படுவது தகவல் பரிமாற்றங்கள்தான். எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள தன்னார்வ தொண்டர்கள் மற்றும் மீட்புக் குழு குறித்த தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உதவிக்காகத் தொடர்பு கொள்ள வேண்டிய முக்கிய தொலைபேசி எண்களையும் திரட்டி, பகிர்ந்து கொள்ள வேண்டும்.மழைக்காலங்களில் வீட்டில் கொதிக்க வைத்து வடிக்கட்டிய குடிநீரையே பருக வேண்டும். குறிப்பாக, வெளியில் விற்கப்படும் குடிநீரை வாங்கி பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழைக் காலத்தில் தேங்கியுள்ள நீரில் தங்கும் ஈக்கள் மற்றும் கொசுக்களின் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.சுத்தப்படுத்தப்படாத குடிநீர் மூலமாக, காலரா, மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், போலியோ, மஞ்சள்காமாலை, வயிற்றுப் போக்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.முக்கியமான ஆவணங்களையும், மாணவர்களின் பாடப்புத்தகங்களையும், சான்றிதழ்களையும், மழையால் பாதிக்கப்படும், மின்சாதனப் பொருள்கள் உட்பட அனைத்துப் பொருள்களையும் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.பாதிப்புகள் வந்தப் பின் வருந்துவதைவிட, வரும் முன் வராமல் தடுப்பதே சாலச் சிறந்தது.வடகிழக்குப் பருவமழை பொழியத் தயாராக இருக்கிறது. அரசும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பெரும் மழையை சமாளிக்கவும், பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேசக் கரம் நீட்ட தன்னார்வத் தொண்டர்களும் தயாராக இருக்கிறார்கள்.நாம் தகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்கிறோமா?

No comments:

Post a comment