Thursday, September 29, 2016

நில சம்பங்கி

நில சம்பங்கி

எண்ணற்ற சிகிச்சை முறைகள் இன்றைய மருத்துவத்தில் உள்ளன. இவற்றில் மலர்களைப் பயன்படுத்தும் அரோமா தெரபி என்ற சிகிச்சை இப்போது உலகெங்கும் பிரபலமாகி வருகிறது. இந்த நறுமண சிகிச்சையில் மிகவும் முக்கியத்துவம் கொண்ட மலர்தான் நில சம்பங்கி!

 

நில சம்பங்கிப்பூவை நேரடியாக மருத்துவத்துக்குப் பயன்படுத்துவதை விட, அதன் எண்ணெயைப் பயன்படுத்தும் வழக்கம்தான் அதிகமாக உள்ளது. இதன் எண்ணெயை முகர்வதாலும், உடலில் தேய்த்துக் கொள்வதாலும் மருத்துவரீதியாகப் பெரும் மாற்றத்தை உணர முடியும். சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் அளவு சம்பங்கி மலர் எண்ணெயில் என்ன இருக்கிறது என்ற ஆவல் உங்களுக்கு எழலாம்.

 

Benzyl alcohol, Butric acid, Eugenol, Farnesol, Geraniol, Menthyl benzoate, Menthyl anthranite, Nerol போன்ற எண்ணற்ற மருத்துவ வேதிப்பொருட்கள் நில சம்பங்கியில் மிகுதியாக உள்ளன. இதுதான் அதன் மருத்துவ ரகசியம். இத்தனை மகத்துவம் கொண்ட நில சம்பங்கியின் மருத்துவ குணங்களைக் கொஞ்சம் விரிவாகக் காண்போம்சம்பங்கியில் அகச்சம்பங்கி, காட்டு சம்பங்கி, சிறு சம்பங்கி, கொடி சம்பங்கி, நாக சம்பங்கி என பலவகைகள் உள்ளன.

 

இவற்றுள் நில சம்பங்கியையே பெரும்பாலும் சிகிச்சைக்காகப் பயன்படுத்துகிறோம். இதனால்தானோ என்னவோ, நிலசம்பங்கிதான் அதிகமாகப் பயிரிடப்படுவதும் எளிதில் கிடைப்பதுமாக இருக்கிறது. நில சம்பங்கிக்கு ஆங்கிலத்தில் Mexican tuberose என்று பெயர். Polianthes tuberose என்பது இதன் தாவரவியல் பெயர். வடமொழியில் 'ரஜனி கந்தா'என்னும் பெயரால் அழைக்கிறார்கள். இதற்கு இரவில் மலர்ந்து மணம் தரும் மலர் என்பது பொருள். இதன் காரணத்தாலேயே 'இரவு ராணி' என்றும் அழைப்பது உண்டு. கன்னடத்தில் சுகந்தராஜி என்றும் தெலுங்கில் கெல சம்பங்கி என்றும் கூறுகிறார்கள்.

 

நில சம்பங்கி எண்ணெயின் மருத்துவப் பயன்கள்

 

சம்பங்கி எண்ணெயை பாலியல் சார்ந்த சிகிச்சைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. நறுமணம் மிக்க மலர் என்பதால் பாலியல் விருப்பத்தைத் தூண்டக்கூடிய குணம் கொண்டதாகவும், பெண்களின் குழந்தையின்மைக்கான காரணிகளில் ஒன்றான பெண்ணுறுப்பு இறுக்கம் (Frigidity),ஆண்மைத் தன்மை குறைவு போன்றவற்றை நிவர்த்தி செய்யும் திறன் கொண்டதாகவும் நில சம்பங்கி விளங்குகிறது. சம்பங்கியின் மணம் மூளைக்குப் பரவி, உள்ளுறுப்புகளைத் தூண்டி அவற்றுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி சீரான பாலியல் உறவுக்கு உதவுகிறது. இதனால் உறுப்பு தளர்வு, இயலாமை போன்ற குறைபாடுகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

 

மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் வியர்வை நாற்றம் தவிர்க்கப்பட்டு அனைவரோடும் கூச்சமின்றி பழகும் சூழ்நிலையை சம்பங்கி எண்ணெய் உருவாக்கிக் கொடுக்கிறது. சம்பங்கியின் நறுமணம் மனிதனின் மனதுக்கு அமைதியைத் தருகிறது. மன உளைச்சல், மன அழுத்தம், கோபம், படபடப்பு, நரம்புத் தளர்ச்சி, வலிப்பு, தசைப் பிடிப்பு, குத்திருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் தணிக்க உதவுகிறது. சம்பங்கியின் நறுமணம் நரம்புகளுக்கும், சுவாச உறுப்புகளுக்கும் சுகம் தரவல்லது.

 

சுவாசப்பாதை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஏற்பட்ட அழற்சியைத் தனித்து சீரான சுவாசத்துக்குத் துணை செய்கிறது. சம்பங்கி உடலின் ரத்த ஓட்டத்தைத் தூண்டி உடலுக்கு உஷ்ணத்தைப் பரவச் செய்கிறது. இதனால் பனிக்காலத்திலும் குளிரைத் தாங்கும் தன்மையை உடல் பெறுகிறது. உடல் வெப்பம் பெறுவதால் சுவாசப் பாதையிலும் சுவாச அறையிலும் சளி, கோழை ஆகிய துன்பம் தரும் பொருட்கள் சேராத வண்ணம் தடுக்கப்படுகிறது.

 

சம்பங்கி எண்ணெயை மேல் பூச்சாகப் பயன்படுத்துவதால், தொற்றுக் கிருமிகள் தாக்காத வண்ணம் சருமப் பாதுகாப்பைப் பெறுகிறது. சருமத்தின் மேல் ஏற்படும் வெடிப்புகளும் இதனால் தவிர்க்கப்படுகிறது. சம்பங்கி எண்ணெயைத் தலைக்குத் தேய்க்கும் எண்ணெயோடு சேர்த்துப் பயன்படுத்துவதால் தலைமுடி உதிர்வு, தலைமுடியின் முனைகளில் உடைதல், இளநரை போன்ற தொல்லைகள் விலகுகின்றன.

 

சம்பங்கி மருந்தாகும் விதம்

 

சம்பங்கிப்பூவை உலர்த்தி வைத்துக்கொண்டு தேவையான போது 5 அல்லது 6 பூக்களை நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து, தினம் இரண்டு வேளைகள் உணவுக்கு முன் பருகிவருவதால் 'கொனோரியா' எனும் பால்வினை நோய் விரைவில் குணமாகும். சம்பங்கிப் பூக்களை நன்கு மைய அரைத்துப் பசையாக்கி நீண்ட நாட்களாக உடையாமலும் ஆறாமலும் இருக்கும் கொப்புளங்கள், கட்டிகள் இவற்றின் மேல் பற்றாகப் போட்டு வைக்க இரண்டொரு நாட்களில் கட்டிகள் பழுத்து உடைந்து சீழ் வெளியேறி சீக்கிரத்தில் குணமாகும்.

 

கொப்புளங்களும் வந்த வடு தெரியாமல் விலகிப் போகும்.சம்பங்கிச் செடியின் கிழங்கை வியட்நாம், கம்போடியா போன்ற நாட்டினர் தடுப்பு தரும் நோயைத் தணிக்கவும், மலேரியாவைக் குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இதன் கிழங்கு தீநீராகவும் பயன்படுத்தப்படுகிறது. சம்பங்கிக் கிழங்கை அரைத்து மேற்பற்றாகப் பூசுவதன் மூலம் சீன தேசத்து மக்கள் தீக்காயங்களை குணப்படுத்தவும், சருமத்தைப் பாதிக்கும் தொற்றுக் கிருமிகளை வெளியேற்றவும், அடிபட்ட காயங்கள், கட்டி ஆகியவற்றின் வீக்கங்களைக் கரைக்கவும் பயன்படுத்துகின்றனர்.

 

சம்பங்கி பூக்கள் ஐந்தாறு எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி சுவைக்காக தேன் அல்லது கற்கண்டு சேர்த்துப் பருகி வருவதால் சிறுநீர் தாராளமாகக் கழியும். வயிற்றில் தங்கி துன்பம் தரும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி நன்மை பயக்கும் குணமும் இதற்கு உண்டு. சம்பங்கிப் பூவை உலர்த்திப்பொடித்து மைய சலித்து வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசுவதால் வேர்க்குரு விரைவில் மறையும். அது தரும் நமைச்சலில் இருந்தும், சருமத்துக்குத் தரும் தொல்லையில் இருந்தும் விடிவு கிடைக்கும்.

 

சம்பங்கிச் செடியின் இலையை அரைத்துத் தலைக்குத் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிப்பதால் தலையில் அரிப்பு, செதில் செதிலாக மாவு போல உதிர்தல், துர்நாற்றம் வீசுதல் போன்றவற்றுக்குக் காரணமான பொடுகுத் தொல்லையினின்று குணம் ஏற்படும். தொடர்ந்து 3 அல்லது 4 வாரங்கள் இப்படி சம்பங்கி இலையைத் தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் கேசத்துக்கு பூரண ஆரோக்கியம் கிடைக்கும்.

 

ஐந்தாறு சம்பங்கிப் பூக்களைத் தீ நீராக்கிச் சுவைக்காகப் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்துக் குடிப்பதால் செரிமானத்தைத் துரிதப்படுத்தி ஜீரணக் கோளாறுகளைக் கண்டிக்கும். மேலும் வெயிலில் திரிந்து வந்ததால் ஏற்பட்ட உஷ்ண ஜுரமும் தணியும். சம்பங்கிப் பூக்களை மைய அரைத்துப் பாதங்களின் புறப்பகுதியில் ஏற்படும் வெடிப்புகளின் மேல் பூசி வைக்க சில நாட்களில் வெடிப்புகள் மறைந்து பாதம் அழகு பெறுவதோடு பாத வலியும் பறந்து போகும்.

No comments:

Post a Comment