அசிமோவ், எந்திரன் அடுத்தது ஏஐ!

அசிமோவ், எந்திரன் அடுத்தது ஏஐ!

நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்

வாயுண்டு ஆனால் வயிறில்லை

பேச்சுண்டு மூச்சில்லை

நாடி உண்டு இருதயம் இல்லை

பூம் பூம் ரோபோடா

என எந்திரன் படப் பாடலை அனைவரும் கேட்டிருப்போம். இந்த வரிகளை உண்மையாக்கும் விதமாக சமீபகால நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆம், அறிவியலின் வளர்ச்சிக்கு எல்லைகள் கிடையாது. எப்படி மனித வடிவில் ரோபோவை கண்டு நாம் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தோமே அதே போல் மனிதனை போல் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் இன்னும் சில வருடங்களில் உலகம் முழுவதும் வர இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்கள் மட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட மென்பொருட்களை உருவாக்குவதிலும் பல்வேறு நாடுகள் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன.

உதாரணத்துக்கு ஒரு நிகழ்வு. 'பியூட்டி டாட் ஏஐய்' என்ற நிறுவனம் தனது செயலி மூலம் உலக அழகிப் போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் செயலியில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்துவிட வேண்டும். இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த அழகிகளைத் தேர்ந்தெடுத்தது நுண்ணறிவு திறன் கொண்ட சாப்ட்வேர்கள். ஆம், ஆச்சரியப்பட வேண்டாம். அழகியைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பல்வேறு அளவுகோல்களில் செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேரில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவுகோல்களை வைத்து அழகிகளை சாப்ட்வேர் தேர்ந்தெடுத்துள்ளது. வேடிக்கை என்னவென்றால் இந்திய அழகிகள் உட்பட 6,000 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் மிகுந்த வெள்ளை நிறம் கொண்ட பெண்களையே இந்த செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் அழகிகளாக தேர்ந்தெடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்

மனித உருவம் கொண்ட ரோபோக்கள் (HUMANOID ROBOT) என்பது நம்மில் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சில கட்டளைகளை செய்யுமாறு மட்டும் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும். அந்த வேலைகளை செய்யுமாறு கட்டளையிட்டால் மட்டுமே இயங்கும். மேலும் நாம் சொல்வதற்கு எந்த வித பதிலும் அளிக்காது. இந்த வகை ரோபோக்கள் ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்.

இந்த வகை ரோபோக்களும் புரோகிராம் படியே செயல்படுகின்றன. ஆனால் நாம் செயல்பாடுகளை புரிந்து கொள்கிற, நாம் பேசினால் பதில் சொல்கிற, மனிதர்களை போன்ற யோசிக்க கூடிய வகையில் செயற்கை நுண்ணறிவை இந்த ரோபோக்களுக்கு புரோகிரமாக செலுத்தப்படுகிறது. அதனால் மனிதன் யோசித்து செய்யக்கூடிய வேலைகளை கூட இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோக்களால் செய்ய முடியும். உதாரணமாக முன்னணி பாஸ்ட்புட் நிறுவனமான கேஎப்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கண்காட்சியில் `டூ மி' என்ற செயற்கை நுண்ணறிவு ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோ கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம் ஆர்டர் எடுக்கும். உணவை பரிமாறுவது முதல் பணம் வசூலிப்பது வரை அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய வகையில் இந்த ரோபோவை வடிவமைத்திருந்தனர். கேஎப்சி மட்டுமல்லாமல் பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்களையும் இயந்திரங்களையும் உருவாக்க பல கோடிகளை செலவழிக்கின்றன.

பேஸ்புக் - கூகுள்

தனது வீடு, அலுவலகம் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு திறன் முறையில் இயங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க் ஜூகர்பெர்க் கூறியிருந்தார். இந்த நோக்கத்தை இலக்காகக் கொண்டு அடுத்த பத்தாண்டுகளில் கம்ப்யூட்டர் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாப்ட்வேர்களையும் இயந்திரங்களையும் உருவாக்க பேஸ்புக் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்காக பாரீஸில் சர்வதேச ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கியுள்ளார். மேலும் இந்த செயற்கை நுண்ணறிவு துறை வல்லுநரான யான் லீகானை தலைவராக நியமித்துள்ளார். ஏற்கெனவே இந்நிறுவனம் பார்வையற்றோர்கள் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாப்ட்வேரை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கூகுள் நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் இயங்கும் டிரைவர் அல்லாத காரை சோதனை செய்துள்ளது. இந்த கார் 2020-ம் ஆண்டுக்கு விற்பனை வரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூகுள் செயற்கை நுண்ணறிவு துறையில் செய்து வரும் முதலீட்டையும் அதிகப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் 40 கோடி டாலர் தொகைக்கு செயற்கை நுண்ணறிவு துறையைச் சார்ந்த டீப்மைண்ட் என்ற நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளது. மேலும் இந்த துறையைச் சார்ந்த 8 ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது. கூகுள் மட்டுமல்லாமல் டெஸ்லா கார் நிறுவனம் இந்த துறையில் 10 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. ஆப்பிள், ஐபிஎம், மைக்ரோசாப்ட் என பல முன்னணி நிறுவனங்கள் இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்க துவங்கிவிட்டன.

செயற்கை நுண்ணறிவின் தேவை?

பேஸ்புக்கில் 100 கோடி பயனாளிகள் உள்ளனர் என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நான்கு அல்லது ஐந்து துறைகளில் விருப்பம் இருக்கும். அப்படியெனில் இந்த துறைகள் அனைத்திற்கு 400 அல்லது 500 கோடி தகவல்களை தினந்தோறும் தர வேண்டிருக்கும். மேலும் இவற்றை பராமரிக்கவும் வேண்டும். இதற்கு லட்சக்கணக்கில் பணியாளர்கள் தேவைப்படுவர். மேலும் இவர்களால் தொடர்ந்து 24 மணி நேரமும் தகவல்களை தர முடியாது. ஆனால் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாப்ட்வேர்களையோ அல்லது ரோபோக்களையோ உருவாக்கி விட்டால் இந்த அனைத்து வேலைகளையும் எந்த வித அலுப்புமின்றி செய்து முடித்து விடும். அதனால்தான் டிவிட்டர், லிங்க்டுஇன், கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த துறையில் அதிகமாக கவனம் செலுத்துகின்றன. மேலும் தேவை பெருகிவருவதால் தொழில் துறையில் உற்பத்தியை அதிகப்படுத்தவேண்டியுள்ளது. அதனால மனிதர்களை விட விரைவாகவும் துல்லியமாகவும் வேலை செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் தேவைப்படுகின்றன.

மனிதர்களுக்கு வேலை இழப்பா?

செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரங்கள் ரோபோக்கள் பெருகினால் மனிதர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. உதாரணமாக டிரைவர் அல்லாத கார்கள் விற்பனைக்கு வந்தால் டிரைவர்களின் வேலை பறிபோய்விடுமா? என்ற அச்சம் பலரது மத்தியில் நிலவுகிறது. மேலும் இதற்கு வலுசேர்க்கும் விதமாக உலக பொருளாதார மையம் 2020-ம் ஆண்டுக்குள் 50 லட்சம் ஊழியர்கள் இயந்திரத்தால் வேலை இழப்பார்கள் என்று கணித்துள்ளது. ஆனால் அறிவியல் வளர்ச்சியின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதுமாதிரியான விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன என்று இந்த துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். அனைத்து துறைகளிலும் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியாது. இதற்கென்று சில விதிமுறைகள் கொண்டு வரப்படும் பொழுது செயற்கை நுண்ணறிவு துறை மிகச் சிறப்பாக வளர்ச்சியடையும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எதிர்காலம்?

2011ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு துறையில் 70 நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது 400 நிறுவனங்களுக்கு மேல் உருவாகியுள்ளன.

2006-ம் ஆண்டு இந்த துறையில் 22 கோடி டாலர் தொகையே முதலீடு செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு நிலவரப்படி இந்த துறையில் பல நிறுவனங்கள் 97.4 கோடி டாலர் தொகையை முதலீடு செய்துள்ளன. 2018-ம் ஆண்டு சர்வதேச அளவில் உள்ள மொத்த நிறுவனங்களில் 62 சதவீதம் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரத்தையோ அல்லது சாப்ட்வேரையோ பயன்படுத்துவர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் இந்த துறை சார்ந்து படிப்பை முடித்தவர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாகும் என்று துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொழிற்புரட்சியில் ஆரம்பித்து இன்று வரை அறிவியலின் உதவியோடுதான் இவ்வளவு பெரிய சமூக பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம். இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரங்கள் மற்றும் ரோபோக்கள் பயன்படும் என்பதில் சந்தகேமில்லை.  

Comments