முதுமையும் இனிமையாகும்!

முதுமையும் இனிமையாகும்!

மனித வாழ்வில் முதுமை பருவம் தவிர்க்க முடியாத ஒன்று. சமீப காலங்களில் ஏற்பட்ட விஞ்ஞானம் மற்றும் மருத்துவ முன்னேற்றங்களால், மனித வாழ்வின் சராசரி வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு, அதற்கேற்றார்போல் முதுமை பருவமும் நீள்கிறது. 55 வயதை தொட்டபிறகுதான், முதுமையை நோக்கி, தளர் நடை போடுவதை ஒவ்வொருவரும் உணர துவங்குகின்றனர்.பொதுவாக, ஒவ்வொரு வயது ஏற்றத்திலும் மனிதனின் அனுபவ அறிவு வளர்ச்சி காண வேண்டும். ஒவ்வொருவரின் அனுபவ அறிவின் முதிர்ச்சி மற்றும் அணுகுமுறையைப் பொருத்து, வயது ஏற்றத்துடன் சுற்றம், சூழல், நட்பு வட்டம் ஆகியவை விரிவடையும் அல்லது சுருங்கக்கூடும்.திருமணம் வரை தனக்காகவும், பெற்றோருக்காகவும், திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளுக்காகவும் பொருள் ஈட்டும் மனிதன், தன் முதுமை காலத்தை பற்றி பெரும்பாலும் முன்கூட்டியே திட்டமிடுவதில்லை.தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அளவற்ற நம்பிக்கையும், முதுமைப் பருவ பிரச்னைகளை பற்றிய அறியாமையும், வாழ்க்கையின் மற்ற பருவங்களை போல், முதுமையிலும் பிரச்னைகளை எப்படியும் சமாளித்து விடலாம் என்ற தைரியமும்தான் இதற்கு முக்கிய காரணங்களாகும்.அருகி வரும் கூட்டு குடும்ப முறை, பொருளாதார எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, மற்றவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து அதைப் பின்பற்றுவதால் ஏற்படும் கூடுதல் செலவுகள், உணவு முதல் உல்லாச பயணம் வரையில் ஏற்பட்டிருக்கும் வேகமான மாறுதல்கள், கடன் மற்றும் அதற்கான அதிக வட்டி என்ற புதைகுழிக்குள் படிப்படியாக இழுத்து செல்லும் கிரெடிட் கார்டுகள் போன்ற எளிய கடன் சாதன முறைகள் ஆகியவை தற்காலத்தில் நடுத்தர குடும்பங்களின் எதிர்காலத்தை பெருமளவு பாதிக்கும் காரணிகளாகும்.இந்தக் காரணிகள், ஒருவரின் நிகழ்கால சராசரி சேமிப்பை வெகுவாக பாதிக்கும் தடைக் கற்களாகும். சம்பள தொகையிலிருந்து வசூலிக்கப்படும் பி.எஃப், வருமான வரியை குறைக்க தேர்ந்தெடுக்கப்படும் ஆயுள் காப்பீடு போன்ற கட்டாய சேமிப்பை தவிர, தனிப்பட்ட சேமிப்பு பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.சேமிப்பதைவிட, கடன் வாங்கியாவது மற்றவர்கள் அனுபவிக்கும் செளகரியங்களை நாமும் அனுபவத்திட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினரின் ஆசையாகும். அந்த ஆசைகளை நிறைவேற்ற நிகழ்கால சம்பாத்தியங்கள் வேகமாக கரைக்கப்படுகின்றன.குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை சமாளிக்க, ஓய்வு காலத்திற்காக ஒதுக்கப்படும் கட்டாய சேமிப்பு பணம், அவ்வப்போது சேர்த்த ரொக்க தொகை அல்லது கடன் வாங்கும் தொகை செலவாகிறது.இதை தவிர, பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு மற்றும் உத்தரவாத கையெழுத்துடன் பெறும் கடன்களின் பொருளாதார பலத்துடன் உயர் கல்வியை தொடர அயல் நாடுகளுக்கு பயணிக்கும் வாரிசுகள், கல்வி காலம் முடிவுற்ற பிறகு, பெரும்பாலும் பெற்றோர்களை விட்டு தூரத்தில் இருக்கும் அயல் நாட்டு பணியையே விரும்பி, அங்கேயே தங்கிவிட விரும்புகின்றனர்.இதனால், இவர்கள் நாளடைவில் பெற்றவர்களுக்கும் தூரத்து உறவினர்களாக மாறிவிடுகின்றனர். துவக்கத்தில், வருடாந்திர இடைவெளியில் நிகழும் பெற்றோருடனான சந்திப்பு, நாளடைவில் நீண்ட கால இடைவெளி நிகழ்வுகளாக மாறிவிடுகின்றன. இதனால், முதுமையில் பெற்றோர், வாரிசுகளுடன் கூடிவாழும் வாய்ப்புகள் குறைகிறது.இம்மாதிரி, எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகளுடன் முதுமை எனும் பாலத்தை கடக்க மனதளவிலும், பொருளாதார ரீதியாகவும் ஒவ்வொருவரும் தங்களை முன்கூட்டியே தயார்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.பொருளாதாரத்தைத் தவிர, முதுமை காலத்தில் ஒருவருக்கு அதிகம் தேவைப்படுவது அன்பு, அரவணைப்பு, பாசம் போன்ற உணர்வுகளாகும்.ஒருவர் தான் கடந்து வந்த வாழ்க்கையில், இம்மாதிரி உணர்வுகளை பிறரிடத்தில் எந்த அளவு பகிர்ந்திருக்கிறாரோ அந்த அளவு அம்மாதிரி உணர்வுகளை அவர்களிடமிருந்து முதுமையில் எதிர்பார்க்கலாம். ஆகையால், முதுமையை மனதில் கொண்டு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மனித நேய பண்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்து, நல்ல நட்புகளையும், உறவுகளையும் சம்பாதித்து வைத்துக் கொள்வது மிக அவசியம்.நம்முடைய மனித நேயம் சார்ந்த செயல்பாடுகளை நமக்கு நாமே எடை போட்டு கணிக்கும் வயதை 50 என்று நிர்ணயித்துக் கொள்ளலாம். இதுவரை நம் உழைப்பால் எவ்வளவு பொருள் சம்பாதித்திருக்கிறோம் என்ற கணிப்புடன் மனித நேய செயல்பாடுகளால் எவ்வளவு பேரின் நல்லெண்ணங்களையும், நட்பையும் சம்பாதித்திருக்கிறோம் என்ற மீள்பார்வை இந்த காலகட்டத்தில் அவசியம்.சக மனிதர்களுடன் பழகுவதில், அணுகுமுறை தவறுகளை கணித்து, அவைகளை திருத்திக்கொள்ள வேண்டிய கால கட்டமும் இதுதான். இந்த தருணத்தில், சுற்றம், சூழலுடான மன வேறுபாடுகளைக் களைந்து, சுமுகமான சூழலை உருவாக்கிக் கொள்ள முயலவேண்டும். முதுமையில் நம்முடன் ஆறுதல் வார்த்தைகள் பகிர சுமுகமான உறவுகள் அவசியம்.முதுமை என்பது ஓய்வு காலம் என்ற எண்ணத்தைத் தவிர்த்து, மன அழுத்தம் இன்றி இனிமையாகவும், பிறருக்கு பயனுள்ளதாகவும், அந்த பருவத்தை கடப்பதற்கான மன பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையிலும், சில அமைப்புகள் மூலமாகவும் சமூக சேவைகளை ஆற்ற பழகிக்கொண்டால், மன திருப்திக்கு பஞ்சமிருக்காது.எழுத்து, இசை, தோட்டக்கலை, கிராமியக்கலை, ஓவியம், கல்வி கற்பித்தல் போன்றவற்றில் எதிர் நமக்கு ஆர்வமும், நாட்டமும் இருக்கிறதோ அந்த கலையைத் தேர்ந்தெடுத்து, அதில் திறமையை மேம்படுத்திக் கொண்டால், முதுமையில் ஓய்வுக்கு நேரமிருக்காது. கலைகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லையென்றால், அவைகளை ரசிக்கும் உணர்வுகளையாவது மேம்படுத்திக் கொள்ளலாம்.பணி ஓய்வு பெற்ற நண்பர் ஒருவரை சமீபத்தில் சந்திக்க நேரிட்டது. அவரின் நேரடி நட்பு வட்டத்தில், சம வயதினரைவிட, இளம் வயதினரே அதிகம் காணப்பட்டனர். இளம் வயதினருடன் கூட்டணி வகுத்து, தான் வசிக்கும் பகுதியில் பல சமூக பணிகளை அவர் ஆற்றி வருகிறார்.அதுபற்றி அவரிடம் கேட்டேன். முதுமையில், மனதை இளமையாக வைத்திருக்க இதுவும் ஒரு உக்திதான் என்ற அவருடைய விளக்கம் என்னை சிந்திக்க வைத்தது. முதுமையையும், இளமையாக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.முதுமையோடு கூட்டணி சேரும் உடல் உபாதைகளுக்கான மருத்துவச் செலவுகளை சமாளிக்க மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியம். 55 வயதுக்கு முன்பாகவே இம்மாதிரி காப்பீடுகளை செய்து கொண்டால், காப்பீட்டுக்கான வருடாந்திர ப்ரீமியம் தொகை குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது.முதுமையின் பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்ள, சேமிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். பணி ஓய்வின்போது பெறப்படும் கிராஜுவிடி போன்றவற்றை ஒரே மாதிரியான நிதி திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவேண்டும். அசலுக்கான பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி, முதலீடுகளை பரவலாக்க வேண்டும்.வங்கி வைப்பு நிதி திட்டங்கள் பாதுகாப்பானவை. ஆனால், வட்டி விகிதம் பணவீக்கத்திற்கு இணையாக அமைவதில்லை. சேமிப்பின் பெரும்பகுதி, அசலை பாதுகாக்கும் திட்டங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.வருடத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கும் திட்டத்தைவிட, மாதாந்திர அல்லது காலாண்டு வட்டி திட்டத்தில் முதலீடு செய்தால், மாதாந்திர செலவுகளுக்கு பயன்படும். அவசரமாக பணம் தேவையெனில், டெபாசிட்டை முடிக்காமல், அதில் 90 சதவீதம் வரை கடன் பெறலாம். இதனால் நம் சேமிப்பு குலையாமல் பாதுகாக்கப்படும்..சேமிப்பின் ஒரு பகுதியை, பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டின் ஒரு பகுதி, டிவிடென்ட் அதிக விகிதத்தில் வழங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படவேண்டும்.உடனடி தேவையில்லாத நிதி மட்டும்தான் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படவேண்டும். உடனடியாக பெருத்த லாபம் என்ற பேராசையால், பலர் பங்கு சந்தையில் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை இழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், இவ்விஷயத்தில் அதிக கவனம் தேவை.பங்கு சந்தை நடவடிக்கைகளில் பரிச்சயம் இல்லாதவர்கள், வங்கி டெபாசிட்டுகளை போல், தொடர்ந்து டிவிடென்ட் வருமானத்தை வழங்கும் மியூட்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம். செபி அமைப்பினால், முறைப்படுத்தப்பட்டு, அதன் கண்காணிப்பில் இயங்கி வரும் மியூட்சுவல் பண்டுகளில், மாதாந்திர தவணை முறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சமாக ரூ.500 ஏற்றுக்கொள்ளப்படுவதால், நீண்ட கால சேமிப்பு எளிதாகி, நாளடைவில் தொடர் வருமானமும் கூடும்.வீடு, நிலம் போன்ற சொத்துகளின் உரிமையை மாற்றாமல், அவைகளுக்கான உயில் பத்திரத்தை, வழக்குரைஞரின் உதவியுடன் தயார் படுத்துவதுதான் பலராலும் பின்பற்றப்படும் வழிமுறையாகும்.முதுமைப் பருவத்தை எட்டுவதற்கு முன்பே, அதை பற்றி நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல்பட்டால், இளமை மட்டுமல்ல, முதுமையும் இனிமைதான் என்பதில் ஐயமில்லை.

Comments