ஒரு போராளியின் மெளன மரணம்!

ஒரு போராளியின் மெளன மரணம்!

அறுபதுகளில் கீழத்தஞ்சை மண்ணில் செங்கொடி இயக்கத்தின் போராட்டங்கள் உச்சக் கட்டத்தில் இருந்தபோது அதன் அனைத்து இயக்கங்களிலும், களப்போராட்டங்களிலும் முன்நின்ற தோழர்களில் ஏ.ஜி.கே என்றழைக்கப்பட்ட தோழர் ஏ.ஜி.கஸ்தூரி ரெங்கனும் ஒருவர்.1932-ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள அந்தணப்பேட்டை எனும் கிராமத்தில் நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் ஏ.ஜி.கே. பிறந்தார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது துணைவேந்தராக இருந்த சர். சி.பி. இராமசாமி அய்யருடன் ஏற்பட்ட மோதலில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவர்.மாணவராக இருந்த காலத்திலேயே 1952 முதல் திராவிடர் கழகத்தில் மிகவும் ஈடுபாடுகளும், தொடர்பும் கொண்டிருந்தார். பின்னர் கிராமப்புறங்களில் திராவிடர் கழக விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி சங்கமாக்கினார்.கிராமப்புறங்களில் திராவிடர் கழக விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி சங்கம் வைத்ததால் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த நிலப்பிரபுகளும், திராவிடர் இயக்கத்தைச் சார்ந்த நிலபிரபுக்களும் ஏ.ஜி.கே. மீது பகைகொண்டார்கள். விவசாயத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் வீடுகளைக் கொளுத்தினர்.ஏ.ஜி.கே. விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி சங்கமாக்கும் செய்தியை நிலபிரபுக்கள் ஈ.வெ.ரா. பெரியாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இது குறித்து ஏ.ஜி.கே.யை அழைத்து நேரில் எதுவும் பேசாமல் "மிராசுதார்களுக்கும், கஸ்தூரிரெங்கனுக்கும் நடக்கும் சண்டையில் திராவிடர் கழகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை' என்று நிலப் பிரபுக்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் அறிவித்து விடுகிறார்.பெரியார் பேசிய பிறகு கஸ்தூரி ரெங்கன் மீது நிலப்பிரபுக்களின் தாக்குதல் தீவிரமடைந்தது.இந்த நிலையில் தன்னையும், திராவிட விவசாயத் தொழிலாளர்களையும் நிலப்பிரபுக்களிடமிருந்து காப்பாற்ற 1962-இல் கஸ்தூரி ரெங்கன் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்கிறார். மார்க்சீய சித்தாந்தத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த கஸ்தூரிரெங்கன் 1964-இல் மார்க்சிஸ்ட் கட்சி உருவானபோது அதில் தன்னை இணைத்துக்கொண்டார்.இக்காலக் கட்டத்தில் நாகை பகுதியில் கம்யூனிஸ்ட்களையும், செங்கொடியையும் அழிப்பதற்காகவே நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒரு சங்கத்தை நிலபிரபுக்கள் உருவாக்கினார்கள்.நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தொடக்க விழாவுக்கு நடிகர் சிவாஜி கணேசன் நாகைக்கு அழைக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.கீழத்தஞ்சை மாவட்ட நிலப்பிரபுக்கள் இந்த சங்கத்தின்கீழ் அணித்திரண்டனர். செங்கொடி இயக்கத்தைக் குறி வைத்தனர். கஸ்தூரி ரெங்கனை குறிவைத்த நிலப்பிரபுக்கள் இவர் மீது போட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளைச் சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் நீதிமன்றத்திலேயே கிடப்பார் ஏ.ஜி.கே.வெண்மணி கோரச் சம்பவம் நிகழ்ந்த அடுத்த ஆண்டு 1969-இல் ஏ.ஜி. கே.யின் சொந்த கிராமமான அந்தணப்பேட்டையில் மூன்று பேர் கொல்லப்படுகின்றனர். ஏ.ஜி.கே.க்கும் இந்த முக்கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால் இவரைப் பழிவாங்க காத்திருந்த நிலப்பிரபுக்கள் கூட்டம் இந்த கொலை வழக்கில் ஏ.ஜி.கே.யை முதல் எதிரியாக சேர்க்கிறது. இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. பின்னர் ஏ.ஜி.கே.யின் அரசியல் வாழ்க்கை தடம் மாறுகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த தொடர் பெருமுயற்சியின் காரணமாக தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டு தண்டனை முடிந்து வெளிவருகிறார்.தான் இருக்கும் இடத்தை போராட்டக்களனாக மாற்றுவதில் ஏ.ஜி.கே. கை தேர்ந்தவர். ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த காலத்தில் சிறைக்காவலர்களின் கொடுமைகளையும், சிறைச்சட்டங்களையும் கடுமையாக எதிர்த்த ஏ.ஜி.கே. 1973-இல் சிறையில் இருந்தவாறே சிறைப்படுத்தப்டோர் நல உரிமைச் சங்கம் எனும் சங்கத்தை தம்முடன் சிலரைச் சேர்த்து ரகசியமாக உருவாக்கினார்.உரிமைக் குரல் எனும் கைப்பிரதியை துவக்கி பல்வேறு சிறைக் கைதிகளுக்கும் ரகசியமாக சுற்றுக்குவிட்டார்.சிறைக்கைதிகள் மட்டுமல்ல, சிறைக்காவலர்களுக்கும் நிர்வாக ரீதியாக ஏராளமான கொடுமைகள். இதற்காகவும் ஏ.ஜி.கே. சிறையில் போராடினார். சிறைக்காவலர்களுக்கு வருகின்ற மெமோக்களுக்கு ஏ.ஜி.கே. பதில் எழுதித் தருவார். மேல்முறையீட்டு விளக்கங்கள் எழுதித் தருவார். அதனால் சிறைக்காவலர்களும் ஏ.ஜி.கே.யை நேசித்தனர்.ஏ.ஜி.கே.யை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றினர். அங்கே செவ்வொளி எனும் கைப்பிரதியை தொடங்கினார். சிறையில் இவர் நடத்திய போராட்டத்தின் பயனாக ஏராளமான சிறைச் சட்டங்கள் திருத்தப்பட்டன. இன்று நடைமுறையிலுள்ள பல சிறைச்சட்டச் சீர்திருத்தங்கள் ஏ.ஜி.கே. சிறைக்குள் நடத்திய போராட்டங்களின் விளைவாய் கிடைத்தவை என்றால் மிகையல்ல.ஏ.ஜி.கே.யின் சிறை வாழ்க்கை சுவாரசியம் நிறைந்ததும் படிப்பினை தருவதுமாகும். சிறையிலா வெளியிலா என்பதல்ல பிரச்சனை. சூழலைப் புரிந்துகொண்டு அதில் நம்மை பொருத்திக்கொண்டு சமூக மாற்றத்திற்கு உழைப்பதுதான் போராட்டம் என்று ஏ.ஜி.கே.  சொல்வார்.திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் எடுத்துள்ள ராமையாவின் குடிசை என்கிற ஆவணப் படத்தில் வெண்மணி கோர நிகழ்வுகளையும், செங்கொடி இயக்கத்தை ஒடுக்க கீழத்தஞ்சை நிலப்பிரபுக்கள் கையாண்ட கொடிய அடக்குமுறைகளையும் ஏ.ஜி.கே. சரியாக விவரித்துள்ளார்.60 ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை. அதில் 24 ஆண்டுகள் சிறை வாழ்க்கை என 84 ஆண்டுகள் வீர வாழ்வுக்குப் பின் 11.8.2016-இல் ஏ.ஜி.கே. மரணமுற்றார்.

Comments