சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

பொதுவாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் முக்கியமானவை அரிசி, பருப்பு, காய்கறிகள், உணவு எண்ணெய் ஆகியவை ஆகும். அரிசியைப் பொருத்தவரை மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி மீண்டும் 1965-66 நிலைமை வராமல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.அதோடு பொது விநியோகத்தில் விலையில்லா அரிசி வழங்கி தங்கள் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்கின்றன. வெங்காயம், தக்காளி போன்ற சில காய்கறிகள் அவ்வப்போது விலை உயர்ந்தாலும் குறுகிய காலத்தில் நிலைமை சீரடைந்து விடுவதைக் காண்கின்றோம்.பெரும்பாலும் உணவு எண்ணைகளை இறக்குமதி செய்து அது உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கிறதா என்பதைக்கூட கருதாமல், நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்வது ஒன்றே தனது கடமையாகக் கருதுகிறது அரசு. ஆனால் இது நமது நாட்டு விவசாயத்தையும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியையும் பாதித்துக்கொண்டு இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்திய நாட்டு நுகர்வுக்காகவே மலேசிய நாட்டில் பாம் ஆயில் என்று கூறப்படும் எண்ணைக்கான மூலப்பொருளான பனங்காய் உற்பத்தி அதிகரித்துக்கொண்டே போகிறது.அதுபோலவே மியான்மர் எனப்படும் பர்மா நாட்டில் நமக்காகவே அபரிமிதமான அளவில் உளுந்து உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான டன் உளுந்து அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. உளுத்தம்பருப்பின் தரம் அதில் அடங்கியுள்ள மாவுச் சத்தைப் பொருத்துள்ளது.அந்த மதிப்பீட்டின்படி கணக்கிட்டால், நமது நாட்டில் விளையும் உளுந்துதான் தரத்தில் உயர்ந்தது. சென்ற ஆண்டில் உளுந்து அதிகம் விளையும் வட மாநிலங்களில் பருவ மழை பொய்த்ததால் மியான்மர் உளுந்துதான் நமது தேவையைப் பூர்த்தி செய்தது. நமது நாட்டைச் சேர்ந்த வணிகர்களே மியான்மரில் ஏற்றுமதி அலுவலகங்களை நிறுவி இந்தியாவிற்கு கப்பலில் உளுந்து மூட்டைகளை அனுப்புகின்றனர்.வணிகத்தின் அடையாளம் தராசு. வள்ளுவரின் கூற்றுப்படி, சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி என்ற வாசகமே வணிகர்கள் அன்றாடம் பயன் படுத்தும் தராசின் முக்கியத்துவத்தை அனைத்து நாடுகளிலும் உணர்த்துகிறது.வணிகம் ஒரு சேவை என்பது மாறி வணிகர் என்றாலே பதுக்கல்காரர் என்றும் கொள்ளையடிப்பவர் என்றும் சித்திரிக்கப்படும் காலமிது.குறிப்பாக அறுவடைக் காலங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து இருப்பு வைத்து ஆண்டு முழுவதும் நுகர்வோரின் தேவையறிந்து விற்பனை செய்வதே வணிகரின் தலையாய கடமை. அறுவடையாகிய அனைத்துப் பொருள்களையும் விவசாயிகளே இருப்பு வைத்து ஆண்டு முழுவதும் விநியோகிக்க முடியாது.நிதி அமைச்சரும் பொருளாதார நிபுணர்களும் ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். நுகர்வோருக்கு நியாயமான விலையில் வேளாண் விளை பொருள் கிடைக்க வேண்டும், அதே வேளையில் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் கட்டுபடியாகக் கூடியதாக விலை இருத்தல் வேண்டும். இதில் எது ஒன்று தவறினாலும் துலாக்கோல் சம நிலை காட்டத் தவறி விடும்.இந்நிலையில் ஒரு நாளிதழில், துவரம் பருப்பு விலை சரிவால் பதுக்கல் வியாபாரிகள் பீதி என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியானது. வட மாநில வரத்து அதிகரிப்பு என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பரபரப்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்கள் தங்களின் தரத்தைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது என்றார் நமது குடியரசுத் தலைவர்.பதுக்கல் வியாபாரிகள் என்றால் யார் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டது போல் அறுவடைக் காலங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ஆண்டு முழுமைக்கும் நுகர்வோருக்கு விநியோகம் செய்பவர் பதுக்கல்காரர் அல்ல. தன்னிடம் உள்ள கருப்பு பணத்தில் விவசாயப் பொருளை வாங்கி எந்தக் கணக்கிலும் வரவு வைக்காமல் கள்ளக் கணக்கு எழுதுபவரே பதுக்கல்காரர் என்று அழைக்கத் தக்கவர்.முதற்கண் துவரம்பருப்பிற்கான மூலப்பொருளான துவரை 95 சதவீதம் வட மாநிலங்களில் இருந்துதான் தரவழைக்கப்படுகிறது என்பதைப் பலர் அறிந்திருக்கலாம். சில வட மாநிலங்களில் டிசம்பரிலிருந்து மார்ச் வரையிலான கால கட்டங்களிலும் சில மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும் துவரை அறுவடை செய்யப்படுகிறது.மேலே குறிப்பிட்டது போல் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் இந்த மாநிலங்களில் பருவ மழை பொய்த்ததால் துவரம் பருப்பு விலைகள் தாறுமாறாக ஏறி விட்டது உண்மை. ஒரு கிலோ துவரம் பருப்பு 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனை ஆனதற்குக் காரணம் விளைச்சல் குறைவு என்பதே.தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விலையைக் கட்டுப்படுத்த எண்ணிய அரசுக்கு முழுமையான பலன் கிட்டவில்லை. ஆனால் தற்போது அதே துவரம் பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூ.105-க்கு கிடைக்கிறது.வட மாநிலங்களில் இந்த ஆண்டு பருவமழை மிக நன்றாகப் பொழிந்து உள்ளதால் அபரிமிதமாக விளைச்சலை எதிர்பார்த்து புதிய அறுவடை தொடங்குமுன் கையில் உள்ள இருப்புச் சரக்கைக் குறைந்த விலையில் விற்பதற்காக வட மாநில வணிகர்கள் விற்பனை செய்வதே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம். எனவே டிசம்பர், ஜனவரியில் புதிய அறுவடை தொடங்கிய பின்னர் தான் உண்மையான விலை நிலவரம் தெரிய வரும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ரூ.240-க்கு பருப்பு விற்பனையானதால்தான் விவசாயிகள் உற்சாகத்துடன் துவரை விதைப்பைப் பல மடங்கு கூட்டியுள்ளனர். அதற்குத் தகுந்தாற்போல் பருவமழையும் கை கொடுத்தால் நமது பருப்பு உற்பத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதேபோன்று சென்ற ஆண்டு உளுந்தும் விளைச்சல் குறைந்து உளுத்தம் பருப்பின் விலையும் கிலோவுக்கு ரூ.180-லிருந்து ரூ.200 வரை விற்பனையானதால் உளுந்து விதைப்பும் சுமார் 20 சதவீதம் கூடுதல். ஆண்டுக்கு இரண்டு சீசன்களில் மட்டும் அறுவடையாகும் துவரை போல் அல்லாது இரு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு இடமாக அறுவடை செய்யப்படுவது உளுந்து.அவ்வாறே செப்டம்பரில் உளுந்து அறுவடையாகும் மகாராஷ்டிராவில் வரத்து தொடங்கி விட்டதால் உளுந்தம் பருப்பும் கிலோ ரூ.90-லிருந்து ரூ.100-க்குள் விற்பனையாகும் நாள் தொலைவில் இல்லை. இந்நிலையில் தொடர்ந்து மியான்மரிலிருந்து இறக்குமதி நீடித்தால் உளுந்து விவசாயம் செய்வதற்குக் கட்டுபடியில்லாமல் நாட்டு உற்பத்தி பாதித்துவிடும். நிரந்தரமான இறக்குமதி என்பது நமது உழவர்களுக்கு இழைக்கும் அநீதி என்பதை அரசும் பொது மக்களும் உணர வேண்டும்.ஏற்கெனவே பட்டாணி இறக்குமதியால் உ.பி.யில் பெருவாரியாக உற்பத்தியான பட்டாணி ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியானதால் பட்டாணி பயிரிடுவதையே நமது விவசாயிகள் மறந்து சுமார் 40 ஆண்டுகளாகி விட்டன.நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது ஒரு காலத்தில் வறுகடலை பொரிக்கும் இடத்தில் பட்டாணி பொரிக்கும்போது அடுத்த தெருவுக்கு அதன் மணம் வீசும் என்றும் தற்போது பொரிக்கும் இடத்திலேயே பொறித்த பட்டாணியை முகர்ந்து பார்த்தால்கூட மணம் தெரிவதில்லை என்றும் கூறினார்.உ.பி.யில் ஹாத்ரஸ், அலிகர் போன்ற இடங்களில் பயிர் செய்யப்பட்ட பட்டாணி விவசாயம் முழுமையாக நிறுத்தப்பட்டது.தராசுக்கோலில் நுகர்வோரை மட்டுமே கருத்தில் கொண்டு உற்பத்தியாளரைப் புறந்தள்ளியதால் விளைந்தது இது.பாரதப் பிரதமர் குஜராத் மாநிலத்தில் அணை ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போது விவசாயிகளுக்கு அவர்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கச் செய்தால் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்று கூறினார். அது அந்த மாநில விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நாடு முழுமைக்கும் பொருந்தும். விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, இடு பொருள்களில் மானியம், பயிர்காப்பீடு போன்றவை மட்டும் அவர்களைக் காப்பாற்ற போதுமானதல்ல. மழை பொய்த்தாலும் நாடு முழுவதும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஒரே வழி நதிகளை இணைப்பது மட்டுமே.தேசிய நெடுஞ்சாலைகள் எப்படி அமைக்கப்பட்டனவோ அதுபோலவே தேசிய நீர்வழிச்சாலை அமைப்பதன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும், குடி நீர் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் இன்று நீரின்றி தரிசாகக் கிடக்கும் நிலங்களைப் பண்படுத்தி பல மடங்கு உள்நாட்டு விவசாயத்தைப் பெருக்க இயலும். இதற்கு மாநிலங்களின் இசைவு தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடக் கூறியுள்ளது.தண்ணீர் என்று பேசி விட்டாலோ அல்லது எழுதி வைத்துக்கொண்டாலோ நமது தாகம் தீரப்போவதில்லை.மத்திய வேளாண்துறை அமைச்சர் நமது நாட்டினரை ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் போய் விவசாயம் செய்து தானியங்களையும் பருப்புகளையும் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும் அதன் மூலம் தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறி இருக்கிறார்.நமது பிரதமரின் கோஷமான இந்தியாவில் தயாரிப்போம் என்ற வாசகத்திற்கு இது முரணாகத் தெரியவில்லையா?"வரப்புயர நீர் உயரும், நீருயர நெல் உயரும், நெல்லுயர குடி உயரும், குடியுயர கோன் உயர்வான்' என்ற முதுமொழியை நாம் மறக்கலாகாது!

Comments