தூது தோல்வி; நோக்கம் வெற்றி!

தூது தோல்வி; நோக்கம் வெற்றி!

மந்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் உள்ளடக்கிய குழு செப்டம்பர் 4, 5-ஆம் நாட்களில் காசுமீர் சென்று அனைத்து தரப்பினரையும் சந்தித்துப்பேசி அச்சிக்கலுக்குத் தீர்வு காணுவதற்காகச் சென்று வெறுங்கையுடன் திரும்பியுள்ளது.இது எதிர்பார்க்கப்பட்டதே. தீர்வுத் திட்டம் எதுவும் இல்லாமல் சென்ற இக்குழுவினரை காசுமீரைச் சேர்ந்த பலகட்சித் தலைவர்கள் சந்திக்கவே மறுத்துவிட்டனர். மக்களும் அவ்வாறே ஒதுக்கிவிட்டனர்.காசுமீர் பள்ளத்தாக்கில் கடந்த 60-க்கு மேற்பட்ட நாட்களாக கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. கடந்த சூலை 9-ஆம் தேதி அங்கு தொடங்கிய வன்முறை நிகழ்ச்சிகளில் காவல் துறையைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட மக்களில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.வரும் 16-ஆம் நாள் தொடங்கி முழு அடைப்புப் போராட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 13-ஆம் நாள் பக்ரீத் விழா அன்று சிறீநகரில் உள்ள ஐ.நா. கண்காணிப்பு அலுவலகம் நோக்கி மிகப்பெரிய மக்கள் பேரணி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற பழமொழிக்கிணங்க உள்துறை அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் குழுவினர் சென்று திரும்பிய பிறகே அங்கு போராட்டங்கள் மேலும் முனைப்படைந்துள்ளன. தலைமை அமைச்சராக பண்டித ஜவாஹர்லால் நேரு இருந்த போது நாகாலாந்தில் இந்திய அரசுக்கு எதிரானப் போராட்டம் தீ பற்றி எரிந்தது. ஆனால் நேரு எப்படி திறமையாகக் கையாண்டு அதை அணைத்தார் என்பது மறக்க முடியாத வரலாறாகும்.ஆங்கிலேய ஆட்சி அசாமைக் கைப்பற்றி தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த போது நாகாலாந்தின் பகுதிகளும் அதற்குட்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு நாகர்கள் தொடக்கத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவிலிருந்த நாகர் தலைவரான பிசோ என்பவர் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரானப் போராட்டத்தில் பங்கேற்றார்.உலகப் போருக்குப் பின் பிற இந்திய தேசிய இராணுவ வீரர்களைப்போல பிசோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு 1946-ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற பிறகு நாகாலாந்திற்குத் திரும்பி வந்து நாகா மக்களை ஒன்று திரட்டத் தொடங்கினார். நாகா தேசியக் குழு என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி போராடத் தொடங்கினார்.இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1947-ஆம் ஆண்டு அசாம் ஆளுநராக இருந்த அக்பர் ஐதரி என்பவரும், முதலமைச்சராக இருந்த பர்டேலாய் என்பவரும் நாகா மக்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி ஒன்பது அம்சத் திட்டம் ஒன்றை ஏற்பதாக அறிவித்தனர். இதற்கிணங்க நாகா மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உடன்பாட்டை மேலும் நீடிக்கவோ அல்லது புதிய உடன்பாடு செய்துகொள்ளவோ நாகா மக்களுக்கு உரிமை உண்டு என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது.இந்த உடன்பாடு சரிவர செயல்படுத்தப் படவில்லை. எனவே தலைமை அமைச்சர் ஜவாஹர்லால் நேருவை 1949-ஆம் ஆண்டில் பிசோ சந்தித்து முறையிட்டார். ஆனாலும், எந்தப் பயனும் விளையவில்லை.எனவே பிசோ நாகாலாந்து முழுவ திலும் சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய மக்களின் கருத்தை அறிந்தார். பிறகு நாகாலாந்தின் எதிர்காலம் குறித்து அம்மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதையொட்டி வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.நாகர்கள் இந்தியாவில் மட்டும் அல்ல அண்டை நாடான பர்மிய மலைக்காடுகளிலும் பரவி வாழ்கின்றனர். எனவே இந்தியத் தலைமை அமைச்சர் நேருவும் பர்மியத் தலைமை அமைச்சர் யூ-நூவும் இணைந்து இரு நாடுகளைச் சேர்ந்த நாகர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, அம்மக்களின் போராட்ட உணர்வுகளைத் தணிக்கலாம் என முடிவு செய்தனர்.ஆனால், நாகாலாந்தின் தலைநகரான கோகிமாவில் இருநாட்டு தலைமை அமைச்சர்களும் கலந்து கொள்ளும் மிகப்பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருங்கூட்டமும் கூடியிருந்தது. ஆனால் மேடையில் நேரு, யூ-நூ ஆகிய இருவரும் ஏறியவுடன் கூட்டத்திலிருந்த அதிகாரிகளைத் தவிர மற்ற அனைத்து நாகா மக்களும் வெளிநடப்பு செய்தனர். இதைக் கண்டு நேரு அதிர்ந்தார்.பல இலட்சக்கணக்கான மக்களை தனது கூட்டங்களுக்கு ஈர்க்கும் கவர்ச்சிப் படைத்த நேருவுக்கு இக்காட்சி நம்ப முடியாத ஒன்றாக அமைந்தது. நாகர்களின் மன நிலையை நேரு உணர்ந்தார்.படைகளைப் பயன்படுத்தி அடக்குமுறைகளின் மூலம் நாகா மக்களின் மனதை மாற்ற முடியாது என்பதை புரிந்துகொண்டார். எனவே சர்வோதய தலைவரான செயப்பிரகாசு நாராயண் தலைமையில் காந்தி கிராமப் பல்கலைக்கழக துணைவேந்தரான அறம், கிறித்துவத் துறவியான ஸ்காட் ஆகிய மூவரைக் கொண்டக் குழுவை நாகாலாந்துக்கு அனுப்பினார்.இக்குழுவினரின் முயற்சியின் விளைவாக 1964-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியப் படையினருக்கும் நாகா விடுதலைப் படையினருக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. அப்பகுதியில் நடைமுறையில் இருந்த இராணுவச் சட்டம் நீக்கிக்கொள்ளப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி, சுமார் ஐந்து இலட்சம் மக்களை மட்டுமே கொண்ட நாகாலாந்து தனி மாநிலமாக்கப்பட்டது. சனநாயக ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது. இந்த அமைதி ஆறாண்டுகளுக்கு நீடித்தது. ஆனால், நேருவின் மறைவிற்குப் பிறகு மீண்டும் மோதல் உருவாயிற்று என்பது வேறு கதை. காசுமீர் இந்தியாவோடு இணைந்தபோது செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, அம்மக்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என்பதும், காசுமீரத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு உரிமைகள் அளிக்கும் கொடுமையான சட்டம் நீக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பதும், அம்மக்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதும் அம்மக்களின் முக்கியமான கோரிக்கைகள் ஆகும்.படை வலிமை கொண்டு காசுமீர மக்களை ஒடுக்குவதில் தீவிரமாக முனைந்த இந்திய உள்துறை அமைச்சரின் தலைமையில் அனைத்துக்கட்சி குழுவினர் சென்றதற்குப் பதில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் தலைமையில் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு காசுமீருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.நாகாலாந்து பிரச்னையை ஆராய்வதற்காக நேரு, செயப்பிரகாசு நாராயண் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி அம்மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நல்லுறவை வளர்த்ததைப் போலச் செய்திருக்க வேண்டும்.இந்திய உள்துறை அமைச்சர் தமது தலைமையில் பிற கட்சித் தலைவர்களை அழைத்தபோது கொடுமையான இராணுவச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக வைக்க பிற கட்சித் தலைவர்கள் முன்வந்திருக்க வேண்டும். அம்மக்களுக்கு அளிப்பதற்கான தீர்வுத் திட்டம் குறித்துப் பேசி முடிவெடுத்த பிறகு அக்குழுவில் இணைந்து செயல்பட ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர். இதன் விளைவாக இத்தூதுக்குழுவின் முயற்சி படுதோல்வி அடைந்துவிட்டது.ஆனால், தனது தலைமையில் செல்லும் தூதுக்குழுவை காசுமீரத் தலைவர்களில் பெரும்பாலோர் சந்திக்க மறுப்பார்கள் என்பது உள்துறை அமைச்சருக்கு நன்கு தெரியும். இதைச் சாக்காக வைத்து காசுமீர மக்கள் மீது கடுமையான அடக்குமுறையை எதிர்காலத்தில் ஏவிவிடுவதற்கு அனைத்துக்கட்சிகளின் ஒப்புதலையும் அவர் மறைமுகமாகப் பெற்றுவிட்டார்.அவரின் தூது தோல்வியடைந்தாலும், அவருடைய நோக்கம் வெற்றிபெற்றுவிட்டது.

Comments