Monday, September 26, 2016

மாறியாக வேண்டும்

மாறியாக வேண்டும்

கடல்மட்டத்திலிருந்து ஐந்து மீட்டரிலுள்ள பழையாறு நாகப்பட்டினத்திலிருந்து 50 மீட்டரில் உள்ள கல்லணை வரையிலான காவிரி டெல்டா ஒரு வெப்ப மண்டலம்.ஆனால் 200 மீட்டரில் உள்ள மேட்டூர் அணைக்கு மேலே உள்ள பிலிகுண்டு, கே.ஆர். சாகர், ஹாரங்கி, ஹேமாவதி, கபினி முதலிய அணைகள் 350 மீட்டரிலிருந்து 1,000 மீட்டருக்கும் மேலான உயரத்தில் இருக்கும் கர்நாடக பீடபூமியில் காவிரி டெல்டாவைவிட பல மடங்கிலான காற்றின் ஈரப்பதம் (Humidity)  ஆண்டு முழுவதும் நிலவுவதால், அங்கு பருப்பு பயறு சிறுதானியங்களும் தோட்டக்கலைப் பயிர்களும் (All Rainfed Crops)  விளைச்சலை வழங்கி வந்தன.பருப்பு காய்கனிகள் சிறுதானியங்கள் விளைந்த மண்ணில் நெல் கரும்பு என்றால் அவற்றிற்குத் தண்ணீர் தேவை அதிகம். ஆதலால் கர்நாடக காவிரியில் பாசன நீர் பன்மடங்கு அதிகரித்துவிட்டது.மரபு வழியில் நெல் விளையும் காவிரி டெல்டா நிலங்களில் எந்தப் பயிரும் இல்லாமல் தரிசாக கிடக்கின்றன. நஞ்சைப் பயிர்களைத் தவிர வேறு எந்தப் பயிறும் டெல்டாவில் பயிரிட இயலாது.தற்போது குறுவைப் பருவம் தாண்டி விட்டது. தாளடி மற்றும் சம்பா பருவத்திற்கு மேட்டூரில் உள்ள 45-50 டி.எம்.சி. நீர் மண்ணை ஈரப்படுத்தக்கூட போதாது. ஈரப்படுத்தவே 100 டி.எம்.சி.க்குமேல் நீர் தேவைப்படும்.காவிரி டெல்டா மாவட்ட ஊர்களில் வாழும் மக்களுக்கு விவசாய வேலை / உணவு இரண்டும் மிக மிக இன்றியமையாதவை. ஆனால் இரண்டுக்கும் இப்போதைய நிலையில் வாய்ப்பே கிடையாது.வழக்கமாக குறுவைக்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு டெல்டா முழுவதும் நீர் நிறைந்து நிற்கும். அப்போது பூமியின் மேல் பரப்பில் ஈரப்பதம் உருவாகும். அது வளிமண்டல மேகங்களைத் தொட்டுக் கவர்ந்து கோடையிலும் மழைப் பொழிவை ஊக்குவிக்கும்.தற்போது அந்த ஈரப்பதத்திற்குத்தான் நிரந்தர பஞ்சமாக வந்து விட்டதே! இந்தப் பஞ்சம் வடகிழக்கு பருவமழைக் காலத்திலும் தொடருமோ என்கிற பதற்றம் தற்போது உண்டாகிறது.ஆகவே, வேளாண் பருவ மண்டலங்களுக்கு ஏற்றவாறு, பயிரிடும் முறைகளை வரையறை செய்து அதன்படி காவிரி படுகை மாநிலங்களில் திட்டமிட வேண்டும் (According to the Agro Climatic Land Scape Soil Wise)  என்று மத்திய அரசை வலியுறுத்துவதற்கு காவிரி ஆற்றுப் படுகைவாழ் விவசாயிகள் குழு ஒன்று பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும். சட்டப் போராட்டங்கள் என்பது டெல்டா விவசாயிகளுக்கு நிரந்தரமான பலன் தராது.அந்த சந்திப்பின்போது எக்காலத்திலும் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தி வரக்கூடிய பயிர்வாரி முறை (Zonal Wise Crop Pattern) கோரிக்கையை விளக்கிக் கூறி, அதற்கு மத்திய சட்டம் ஒன்றை இயற்றுமாறு வலியுறுத்த வேண்டும்.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள கர்நாடக காவிரி படுகை நீர் பாசன பரப்பு 11 லட்சம் ஏக்கருக்குமேல் 28 லட்சமாக உயர்த்தி, அதற்கு ஏற்றவாறு மாநில நிதியை வைத்தே பாசன வசதிகளை ஏற்கெனவே செய்து கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமலும் கண்டு கொள்ளாமலும் விட்டதாலேயே, கர்நாடகத்தில் கருத்தழிந்த மூர்க்கத்தனமான கலவரங்கள் இன்று முற்றி வரம்பு கடந்து விரிந்து நெருப்பைக் கக்கி விட்டன.இரண்டாவது தடவையாகவும் உச்சநீதிமன்றம் தலையிட்டு நீரைத் திறந்து விடும்படி உத்தரவிட்டுள்ளபோதிலும், பாசன முன்னுரிமை கொண்ட கடைமடை காவிரி டெல்டா பாசனத்திற்கு ஏதுவாக, கர்நாடக புதிய பாசன திட்ட அணைகளின் மதகுகளை திறந்தே வைத்திருக்க கர்நாடக அரசுக்கு, நாட்டை ஆளுகின்ற உயர் அதிகாரம் கொண்ட மத்திய அரசு உடனடியாய் உத்தரவிட வேண்டும். (According to the Helsing Law in lieu of internationaly ensured Riparian Rights of tail end farming).உபரி என்றால் வழிய விடுகிற மாநிலம். பற்றாக்குறை என்று வரும்போது தம்மிடம் இருப்பதை விடுவிப்பதைக் கடமையாகக் கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை மக்களுக்கு மத்திய அரசு இனியாவது விளக்க வேண்டும்.தமிழ்நாட்டிலும் பயிர்வாரி முறைக்கு மாறும்படி விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டியது அவசியமாகிறது. அப்படிச் செய்யத் தவறியதால்தான், காவிரி ஆறு நெடுக கூட்டுறவு நீரேற்றுப் பாசன முறைகள் கட்டுப்பாடோ கண்காணிப்போ கூட இல்லாமல், 1972-லிருந்தே இயங்கிக் கொண்டுள்ளது.பயிர்வாரி முறைக்கு மாறும்படி உத்தரவிடாமல், அனைத்து விவசாய பம்பு செட்டுகளுக்கும் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டதால், இன்று மோட்டார்களின் குதிரை சக்திக்கு வரம்பே இருப்பதில்லை.இதனால் ஜீவாதாரமாய் நெடுங்காலமாய் விளங்கி வந்த குடிமராமத்து என்பது காணாமல் போய்விட்டது. விவசாயிகளும் மறந்து விட்டனர். நிலத்தடி நீரும் வற்றி வறண்டுவிட்டது. காற்றில் ஈரப்பதம் அற்றதால் இயற்கையும் தண்டிக்கத் தொடங்கிவிட்டது. ஆறுகளில் நீரோட்டம் கிடையாது. ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் இலவசம் என்கிற தற்கொலைத் திட்டம் கர்நாடகத்தில் கிடையாது. ஆனால் கர்நாடக மின்சார அலுவலகங்களில் மின்கட்டணம் செலுத்த சம்மதித்து விண்ணப்பித்து அங்கும் தற்போது காவிரிப் படுகைகளில் மின்மோட்டார்களின் எண்ணிக்கை நாளும் கூடிக்கொண்டே போகிறது.இதனால் தமிழ்நாட்டைப்போல பயிர்வாரி முறை இல்லாததால் அங்கேயும் நிலத்தடி நீர் தாழ்ந்து தண்ணீர் தட்டுப்பாடு வந்து கொண்டுள்ளது."அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று பதிவு செய்துள்ள சிலப்பதிகாரம் தோன்றிய தமிழகம், இந்தியாவுக்கே வழிகாட்ட வேண்டும்.

No comments:

Post a Comment