மங்கல வாழ்வருளும் பிரம்ம வித்யாம்பிகை : முடிச்சூர்

மங்கல வாழ்வருளும் பிரம்ம வித்யாம்பிகை : முடிச்சூர்

சுடலைக்காடனான சதாசிவனுக்கும், இமவானுடைய புத்திரியான பார்வதிக்கும் திருமணம் செய்வதாக நிச்சயமாயிற்று. பரமசிவனார் தன் ஜடாபாரத்தை கழல் கற்றைகளாக திருத்தி அழகு சுந்தரராக அலங்கரித்துக் கொண்டார். பார்வதி மலையரசியாக பேரழகு பூண்டு நின்றாள். திருமால் தன் அன்புத் தங்கையோடு கண்களில் நீர் துளிர்க்க நடந்துவர சகல தேவர்களும் சிரசுக்குமேல் கரங்கள் உயர்த்தி 'ஹர ஹர மகாதேவா...' என்று பிளிறினர். ரிஷிகள் ஒருபுறம் வேத, உபநிஷதங்களை கோஷமாகச் கூற, அவ்விடத்தை அந்த மறையொலிகள் மத்தளமாக அதிரச் செய்தன. கின்னரர்களின் இன்னிசையும், நடனமாதர்களான ரம்பையும், ஊர்வசியும் சுழன்றெழுந்து நடனமாடினர். தேவர்கள் மகேசனின் அந்த திவ்ய முகத்தினையும், மகாவிஷ்ணுவையும், பார்வதி தேவியையும் அவர்கள்   திருமுகப் பிரகாசத்தை வைத்த கண்வாங்காது கண்டு களித்தனர். பிரபஞ்சத்தையே அசைக்கும் மையச் சக்திகள் மானிட உருகொண்டு மணமக்களாக மாறிய கருணையை கண்டு முனிவர்கள் சிலிர்த்தனர். ஆனால், அவர்களுக்கு மட்டும் எதற்கு இந்த கோலம், ஏன் இத்தனை விளையாட்டு என்று மட்டும் தெரிந்திருந்தது. யுகம்தோறும் அருட்கோலம் காட்டி சகல உயிர்களை ஆட்கொண்டருளவே இந்தத் திருமணம் என்று புரிந்து வைத்திருந்தார்கள். வைகுந்தவாசன் ஈசனின் திருக்கரங்களை மெல்ல பிடித்து, தாமரை மலர்போன்ற தமது தங்கையான பார்வதியின் திருக் கரங்களோடு சேர்த்தார். அந்த இணைவுக்கோலம் ஜீவாத்மா, பரமாத்மா சேர்த்தியை சொல்லாமல் சொன்னது. கோத்த கரங்களோடு மணமேடையேறினார் மகேசன். வேதமோதும் அந்தணர்கள் வேதமூச்சாக விளங்கும் வேந்தன் சிவனுக்கு முன் மறையை மழையாகப் பொழிந்தனர். திருக்கூட்டமோ தன்னிலை மறந்து திளைத்துக் கிடந்தது. ஈசன், திருமாங்கல்யத்தை பார்வதி தேவியின் கழுத்தில் பூட்டி மணம் புரிந்தார். பார்வதி   ஆனந்தத்திலும், நாணத்திலும், வெட்கத்திலும் கனிந்து சிவந்தாள். ஈசனார் கம்பீரக்கோலம் காட்டி அமர்ந்தார். திருமால் நெஞ்சு குழைந்து மாப்பிள்ளையையும், மணமகளையும் பார்த்தபடி நின்றிருந்தார். மூவுலகமும் கூடி நின்று வணங்கியது. பூவுலகான பூமி திருமணக் கோலத்தோடு தாங்களின் திருவடியைச் சுமக்க மாட்டேனா என்று தவமிருந்தது. மகாவிஷ்ணுவும், ஈசனும், உமையும் தம் திருக்கண்களை பூமிமீது படரச் செய்தனர். கோடானுகோடி உயிர்கள் சிலிர்த்தன. மாமுனிகளும், சீரடியார்களும், பாகவதோத்தமர்களும் மணக்கோலத்தோடு நாயகனையும், நாயகியையும் அவர்களோடு திருமாலையும் தரிசிப்பதற்காக காத்துக் கிடந்தனர். 'நகரேஷு காஞ்சி' எனப்போற்றப்படும் கச்சித் தலத்திற்கு சில கல் தொலைவுள்ள வில்வவனப் பிரதேசத்து மக்கள் ஆவலாக காத்திருந்தனர். வெகு தொலைவில் எக்காளம் மற்றும் மேளதாளத்தோடு அகிலத்தையே அசைக்கும் சக்திகள் கருணை வடிவுகொண்டு வருவதைக் கண்டனர். ஒவ்வொருவரும் தாங்கள் காண்பது கனவா, நினைவா என்று ஐயம்மேலிட திகைப்போடு மணக்கோல நாதரை வணங்கியபடி நின்றனர். மேனி முழுதும் மயிக்கூச்செரிய 'மகாதேவா... மகாதேவா...' என்று இடையறாது அரற்றினர். வில்வ வனத்திற்குள் ஓரிடத்தில் சிவனார் உமையம்மையின் தளிர்கரம் பிடித்தபடி நிற்க, அருகேயே மகாவிஷ்ணு சங்கு-சக்கரத்தோடு திருக்காட்சியும் அளித்தார். லிங்க உருவில் மகேஸ்வரனும், அர்ச்சாவதார உருவத்தில் உமையும், பெருமாளும் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். யுகம்தோறும் தாம் வில்வ வனத்தை   விட்டு அகலாது எல்லோரையும் காப்பதாக சங்கல்பம் மேற்கொண்டார்கள். மக்களும், மாமுனிகளும் குதூகலமடைந்தார்கள். அழகிய ஆலயம் அமைத்தார்கள்.   பெருவிழாக்களும், ஆண்டுக்கு ஆண்டு திருமணமும் செய்து மகிழ்ந்தார்கள். மணமாகாதவர்கள் இத்தலத்தை அடைந்தவுடனேயே கல்யாணக்களை சூழப்பெற்றார்கள்.   ஈசனையும், அம்மையையும் வணங்கினார்கள். திருமணம் முடிந்து நன்றியாக ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள். காலச் சக்கரம் சுழன்றது. பாரதப்போர்   தொடங்குவதற்கு முன் பாண்டவர்கள் மறைந்துவாழும் நிலைமை ஏற்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் மூலைக் கொருவராக அமர்ந்து தவத்தில் ஆழ்வதுண்டு. இவ்வாறிருக்க, ஒருசமயம் அர்ஜுனருக்கு பாசுபதாஸ்திரம் தந்ததுபோல பீமைனயும் தம் அருட்கணை களால் வலிமையாக்க விரும்பினார் ஈசன். பீமன் வில்வத்தின் வாசத்தில் ஈர்க்கப்பட்டு இத்தலத்தினுள் நுழைந்தான். பேரழகனாக விளங்கும் மகேசனையும், மலையழகியான பார்வதியையும், சிருங்கார நாயகன் வைகுந்தனையும் தரிசித்து தாங்கொணா பேரின்பம் அடைந்தான். தனக்குள் திடப்பட்ட பக்தியால் ஈசனின் முழு திருவருளையும் பெற்றான். அன்னை அவனுக்கு சகல வித்தைகளையும் தந்தாள். திருமால் தான் உடன் இருப்பதாக திருக்கண்ணால் சொன்னார். பீமன் வஜ்ஜிரம் பாய்ந்தவனான். சகோதரர்கள் ஒன்று கூடி வனவாசம் முடித்து கௌரவர்களோடு போர் தொடுத்தனர்; வென்றனர்.   இத்தலத்திற்கு பீமன் வந்து ஈசனை வழிபட்டதால், ஐயனை பீமேஸ்வரர் என்று போற்றினர் மக்கள்.பீமனுக்கு சகல வித்தைகளையும் அருளியவளை வித்யாம்பிகை என்று போற்றித் துதித்தனர். திருமால் கோயில் கொண்டுள்ள தலங்களில் மிகவும் அரிய திருநாமமான தாமோதரன் எனும் பெயரை மாலவனுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். கோயிலோடு ஊரும் வளர்ந்து, இன்றளவிலும் சிறப்புற்று விளங்குகிறது. கடந்த நூற்றாண்டுவரை இத்தலத்திற்கு மணமுடித்த நல்லூர் என்றே பெயர். திருமாங்கல்யத்தின் மஞ்சள் ஈரம் கூட காயாது மூன்று முடிச்சுகளோடு அம்பாள் இத்தலத்தில் காட்சி தந்ததால் முடிச்சூர் என்று வந்தது என்கிறார்கள். தாம்பரம்-காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கிறது முடிச்சூர். ஊரின் மத்தியில் நிமிர்ந்து நிற்கிறது சிவா-விஷ்ணு ஆலயம். வழியில் எதிர்ப்படும் திருக்குளத்தின் ஒருபுறம் கோயிலும் மறுபுறம் சிவசக்தி சிவாகம சமஸ்கிருத வித்யாலயா ட்ரஸ்ட் ஆதரவில் நடைபெறும் வேதபாடசாலையும் கோயிலின் கீர்த்தியை பறைசாற்றுகின்றன. முக்காலமும் திருக்கோயிலில் எதிரொலித்துத் திரும்புகின்றன பாடசாலை   மாணவர் களின் வேதகோஷங்கள். கோயிலின் வாயிலிலிருந்து உள்ளே நேரே பார்க்க அம்பாள் வித்யாம்பிகை வா என்று வாஞ்சையுடன் அழைக்கிறாள். சுடர் விளக்கின்  மத்தியில் மெல்லிய புன்னகை பூத்து நிற்கிறாள். வரத அபய ஹஸ்தங்கள் காட்டி, அங்குச, பாசங்கள் ஏந்தி காக்கிறாள். சகல வித்தைகளுக்கு ஆதார மாதாவான இவளை வணங்க, பேரறிவும் கணநேரத்தில் கைகூடும். அதோடு இத்தலத்தின் பிரதான விஷயம், அம்பாள் சந்நதிக்கருகே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் திருமாங்கல்யமே ஆகும். மூன்று முடிச்சுகளோடு இங்கு வந்து காட்சி தந்ததால், திருமணமாகாதோர் அம்பாளின் பாதத்தில் தாலியை வைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அதை மீண்டும் அம்பாளுக்கு எதிரே முடிச்சுபோட்டுக் கட்டிக்கொள்கிறார்கள். ''தாயே நீ தொங்கத் தொங்க தாலி கட்டிக்கொண்டு இத்தலத்திற்கு வந்தாய். அதுபோல எனக்கும் மாங்கல்ய பாக்கியம் தா. வெகு சீக்கிரம் திருமணமாகி உன்னை தம்பதியராக தரிசிக்கும்படி செய்'' என்று வேண்டிக்கொண்டு தாலியை கட்டுகிறார்கள்.இவ்வாறு தாலியைக் கட்டிக்கொண்டவர்கள், அதிஆச்சரியமாக வெகு விரைவில் திருமணமாகி, மீண்டும் இத்தலத்திற்கு வந்து கட்டிக்கொண்ட தாலியைப் பிரித்து அன்று கோயிலுக்கு வரும் சுமங்கலிக்கு தாம்பூலமாக வைத்துக் கொடுத்து விடுவார்கள். ஆண், பெண் இருவருக்குமே பொதுவான திருமண பரிகாரத்தலமாக இக்கோயில் திகழ்கிறது. அருகிலுள்ள பீமேஸ்வரரும் அம்மையின் அருளுக்கு உறுதுணையாக இருந்து, மாங்கல்ய பலத்தைப் பெருக்குகிறார்; நீடித்த சுமங்கலியாக வாழும் பெரும் பாக்கியத்தை அருள்கிறார். இதுமட்டுமல்ல, வாழ்வின் தீர்க்க முடியாத சிக்கல்களையும் எளிதான முடிச்சுகளாக, சுலபமாகப் பிரித்துக்கொடுக்கிறார். மிகச் சிரத்தையான பூஜை முறைகளால் கோயிலின் சாந்நித்தியத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கிறார்கள். பிம்ப சாந்நித்தியத்தை எளியவர்களும் சட்டென்று உணர்ந்து கொள்ளும்படியாக வைத்திருக்கிறார்கள். புற உலகை மறக்கடித்து அக உலகை திறக்கச் செய்யும் அற்புதக் கோயில்களுள் முடிச்சூரும் ஒன்று. பல வெளிவராத ரகசியங்களை தாம் மட்டுமே அறிவார் என்பதுபோல பீமேஸ்வரர் வீற்றிருக்கிறார்.பிராகாரத்தில் விநாயகரும், அதற்கு அடுத்த சந்நதியில் சிவனும், உமையும் மணக்கோலத்தில் நிற்க, அதை அருகிலிருந்த ரசித்தபடி சங்கு-சக்கரத்தோடு மகாவிஷ்ணுவும் நின்று கொண்டிருக்கிறார். சாதாரணமாக சிவனின் வலப்பக்கத்தில் அம்பாள் நின்றிருப்பாள்; இங்கு இடப்பக்கத்தில் அம்பாளும், வலப்பக்கம் பெருமாளும் அபூர்வமாக நிற்கிறார்கள். இந்த சிலை மிகவும் தொன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதேசமயம் மிகச்சிறிய வடிவானது. சற்று உற்றுப் பார்த்தால்தான் தெளிவாகத் தெரியும். அடுத்து சுப்ரமணிய சுவாமி அருள்பாலிக்கிறார். கோயிலின் கருவறை மற்றும் பிராகார கோஷ்டங்களில் தட்சணாமூர்த்தியும், லிங்கோத்பவரும், துர்க்கையும் வீற்றிருந்து அருள் கூட்டுகின்றனர். இதையெல்லாம் தரிசித்து நகர சிறிய சந்நதியில் சந்திரன், அதற்கடுத்து ஒரே சந்நதியில்   பைரவரும், சூரியனும் உள்ளனர். நிறைவாக கோயிலின் வாயிலுக்கருகில் வரும்போது நால்வரின் அழகுச் சிலைகளைக் காணலாம். அதில் சுந்தரருக்கு அருகில் பரவை நாச்சியாரின் சிலையையும் அமைத்து மரியாதை செய்திருக்கிறார்கள். சற்று தள்ளி கோயிலின் ஒரு மூலையில் தமோதரப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக ஒரு சந்நதியில் சேவை சாதிக்கிறார். இவருக்கும் தனிப் பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலிலுள்ள மரங்களின் மெல்லிய தென்றலும், ஈசனின் இணையிலா அருளும் காற்றில் கசிந்த வண்ணம் இருக்கின்றன. கோயிலை வலம் வந்து நமஸ்கரித்து நிமிர நமக்குள் பீமபலம் பெருகியிருப்பதை எளிதாக உணரலாம்.சென்னை தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் முடிச்சூர் கிராமம் அமைந்துள்ளது.

Comments