விவசாய கடன் தள்ளுபடியான பயனாளிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.

விவசாய கடன் தள்ளுபடியான பயனாளிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவுள்ள பயனாளிகளின் விவரங்கள் கூட்டுறவுத் துறையின் இணையதளத்தில் (www.tncu.tn.gov.in)வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆறாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும், சிறு-குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, கூட்டுறவு-உணவுத் துறை சார்பில் அரசு உத்தரவும், வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.இணையதளத்தில் தகவல்: கடன் தள்ளுபடி பெறுவதற்கு 16 லட்சம் பேர் தகுதி படைத்தவர்கள் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், மாவட்டத்தின் பெயர், கடன் பெற்ற தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதை உள்ளீடு செய்தால், கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறியலாம். பட்டியலில், வரிசை எண், கடனின் வகை, கடன் பெற்றவரின் பெயர், சங்க உறுப்பினரின் எண், கடனின் எண், எந்த நோக்கத்துக்காக கடன் வாங்கப்பட்டது, நிலத்தின் அளவு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு: 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளோருக்கு  கடன் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஏதேனும் விவசாயிகளின் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது கூடுதல் நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் சட்ட விரோதமாக பயன் பெற்றாலோ அது குறித்து அதிகாரிகளிடம் முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியது:டன்கள் தொடர்பாக, வட்ட அளவில் முறையீடு செய்யும் காலம் முடிவடைந்துள்ளது. இதில் கோரிக்கைகள் ஏதும் ஏற்கப்படாவிட்டால், மாவட்ட பதிவாளர் அளவில் அடுத்த 2 வாரங்களுக்குள் முறையீடு செய்யலாம். அதிலும் கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்பட்டால் இணைப் பதிவாளரிடம் மறு மேல்முறையீடு செய்யலாம். அக்டோபர் முதல் வாரத்துக்குள் அனைத்தும் மேல்முறையீடுகளும் செய்யப்பட்டு அவை தீர்க்கப்படும்.கடன் வழங்கப்பட்ட தேதியில் 5 ஏக்கருக்குள் நிலம் இருந்திருப்பது அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும்.மார்ச் 31-ஆம் தேதிக்குள் கடன் பெற்றோருக்கு மட்டுமே தள்ளுபடி திட்டம் பொருந்தும். அதற்குப் பிறகு யாரேனும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தியிருந்தால் அந்தப் பணம் உரிய முறையில் விவசாயிக்கு கூட்டுறவுத் துறை அளிக்கும் என்றனர்.புதிதாக வழங்கப்படும்: கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு புதிதாக கடன் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Comments