ஸ்ரீபாத தாமோதர் சாத்வலேகர்

ஸ்ரீபாத தாமோதர் சாத்வலேகர்

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த வேத பண்டிதருமான ஸ்ரீபாத தாமோதர் சாத்வலேகர் (Shripad Damodar Satwalekar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

பம்பாய் மாகாணம் ரத்னகிரி மாவட்டத்தில் கோல்காவ் என்ற கிராமத்தில் (1867) பிறந்தார். வேதத்தில் நிபுணத்துவம் கொண்ட பரம்பரையில் வந்தவர். இவரும் சிறுவயதிலேயே வேத பாடங்கள் கற்றார். 8 வயதில் சமஸ்கிருத இலக்கணம் பயின்றார்.

சாவந்த்வாடி என்ற இடத்தில் ஓர் ஆங்கில அதிகாரி தொடங்கிய ஓவியப் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அதில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஹைதராபாத்தில் ஓவியப் பள்ளி நிறுவினார். சுதந்திரப் போராட்டங்களிலும் பங்கேற்றார். திலகரின் தொடர்பு கிடைத்த பிறகு, இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

சுதேசி, கதர், ஹோம் ரூல், வெள்ளையனே வெளியேறு இயக்கங்களில் பங்கேற்றார். வேதங்களை ஆதாரமாகக் கொண்டு 'தேஜஸ்விதா' என்ற கட்டுரையை இவர் எழுதியது ராஜதுரோகம் என குற்றஞ்சாட்டப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வேலை தேடி 23 வயதில் பம்பாய் சென்றார். பல சமஸ்கிருத நூல்கள் பயின்றார். புகைப்படம், சிற்பக் கலையில் சிறந்து விளங்கினார். பம்பாயின் பிரபல ஜே.ஜே. ஓவியப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஹைதராபாத் வந்தார். 13 ஆண்டுகள் தங்கியிருந்தவர் அங்கு ஒரு ஸ்டுடியோ நிறுவினார்.

ஆர்ய சமாஜ அமைப்பில் இணைந்தார். வேதாந்த விவாதங்களில் பங்கேற்றார். வேத சாரங்களை எளிமையாக இந்தியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். 'வைதிக் தர்ம' என்ற இந்தி மாத இதழ், 'புருஷார்த்த' என்ற மராத்தி மாத இதழையும் வெளியிட்டார்.

அனைவரும் எளிமையாக சமஸ்கிருதம் கற்கும் வகையில் 'சம்ஸ்கிருத் ஸ்வயம்சிக் ஷக் புஸ்தக் மாலா' நூலை எழுதினார். 80 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூல்தான் சமஸ்கிருதம் கற்க இன்றளவும் பயன்படுகிறது. பல நூல்களை மராட்டியில் மொழிபெயர்த்தார்.

வேத இலக்கியம் சம்பந்தமாக பல கட்டுரைகள் எழுதினார். விவேகவர்த்தினி என்ற கல்வி நிறுவனம் தொடங்கினார். தேசிய சிந்தனைகளுடன்கூடிய இவரது உபதேசங்கள் ஹைதராபாத் நிஜாமுக்குப் பிடிக்கவில்லை. அவர் பல தொல்லைகள் தந்ததால், அங்கிருந்து வெளியேறினார்.

ஹரித்வார், லாகூரில் சிறிது காலம் இருந்துவிட்டு, மகாராஷ்டிராவில் குடியேறினார். அங்கு 'ஸ்வாத்யாய மண்டல்' என்ற அமைப்பை நிறுவி இலக்கியச் சேவைகளில் ஈடுபட்டார். காந்திஜி மறைவுக்குப் பிறகு, குஜராத் மாநிலத்தில் குடியேறி, சமஸ்கிருத இலக்கியத்தின் பெருமையைப் பரப்பினார்.

ஆயுர்வேதம், யோகா, வேதங்கள், பகவத்கீதை உள்ளிட்டவை தொடர்பாக 400-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 'வித்யா மார்த்தாண்ட்', 'மஹாமஹோபாத்தியா', 'வித்யா வாசஸ்பதி', 'வேதமஹரிஷி', 'வேதமூர்த்தி' என ஏராளமான பட்டங்கள் பெற்றவர். ஓவியம், சிற்பக் கலையின் தலைசிறந்த விருதான 'மேயோ' பதக்கத்தை 2 முறை பெற்றார். இவரது சேவையைப் பாராட்டி பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டது.

வேதக் கருத்துகளை எளிமைப்படுத்தி தந்தவரும், சமஸ்கிருதம், இந்தி, மராட்டிய இலக்கியங்களுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான பாத தாமோதர் சாத்வலேகர் 102-வது வயதில் (1969) மறைந்தார்.

Comments