புற்றுநோயைக் கண்டறிய உதவும் லேசர் பரிசோதனை

புற்றுநோயைக் கண்டறிய உதவும் லேசர் பரிசோதனை

உலகத்திலுள்ள நோய்களுக்கெல்லாம் தலைமையாக, நோய்களின் பேரரசன் என்று கூறும் அளவுக்கு 'என்னை வெல்ல யாருமில்லை இங்கே' என்பதுபோல் பல ஆயிரம் ஆண்டுகளாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது புற்றுநோய். விஞ்ஞான வளர்ச்சியும் சமீபத்திய தொழில்நுட்பப் புரட்சியும் ஒன்று சேர்ந்து புற்றுநோய்களை தொடக்கத்திலேயே கண்டறியும் பல்வேறு அதி நவீன கருவிகளையும், பல்வேறு புற்றுநோய்களை வேரோடு அழிக்கும் சக்திவாய்ந்த மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஆகிய வற்றை உருவாக்கியுள்ளன. இருந்தாலும், புற்றுநோயை இன்னும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், புற்றுநோய் மீதான ஆயிரக்கணக்கான ஆய்வுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாளிகளின் வாழ்க்கையை சுலபமாக்கியும், பலரை புற்றுநோய்க்கு பலியாகாமல் தடுத்தும் மனித இனத்தை காத்து வருகின்றன என்றுதான் கூற வேண்டும்.

அந்த வரிசையில், ரத்தத்தைக் கொண்டு புதிய வகை லேசர் ஒன்றை உருவாக்கி அதனைப் பயன்படுத்தி புற்றுநோயை மிகவும் தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும் என்கிறார்கள் அமெரிக்காவின் மிஷ்ஷிகன் மாநிலத்தில் உள்ள மிஷ்ஷிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரிப் பொறியியல் பேராசிரியர் சூடாங் பேன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர்.

இந்த ஆய்வில், தன் மீது பாய்ச்சப்படும் ஒளியை மேலும் அதிகமாக்கி வெளியிடும் திறன்கொண்ட இன்டோசயானின் கிரீன்-ஐ.சி.ஜி. (indocyanine green, ICG) எனும் சாயமானது முதலில் ரத்தத்தில் கலக்கப்பட்டு, பின்னர் அந்த ரத்தமானது ஒளியை பிரதிபலிக்கக் கூடிய ஒரு உருளைக்குள் நிரப்பப்பட்டது. பிறகு, அந்த உருளையின் மீது ஒரு வகையான இன்ப்ரா ரெட் ஒளியானது செலுத்தப்பட்டது.

அதன் விளைவாக, ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா திரவத்தில் இருக்கும் புரதங்களுடன் ஐ.சி.ஜி. சாயம் கலப்பதன் காரணமாக ஐ.சி.ஜி. ஒளிர்ந்தது. அதன் காரணமாக ஐ.சி.ஜி. கலந்த ரத்தமும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தது. பிரகாசமான இந்த ஒளியின் காரணமாக ரத்தத்தில் உள்ள உயிரணுக்கள், அவற்றின் உள்ளே இருக்கும் பல மூலக்கூறுகள் மற்றும் அவற்றின் வடிவம் அல்லது அமைப்பு என அனைத்தும் துல்லியமாக தெரிந்தது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

சுவாரசியமாக, 'முள்ளால்தான் எடுக்க வேண்டும்' என்று கூறுவார்கள். அதுபோல ரத்தத்தின் உதவியுடன் செயல்படக்கூடிய இந்த புதிய வகை லேசரைப் பயன்படுத்தி உடலிலுள்ள ரத்தத்தை இன்ப்ரா ரெட் மற்றும் ஐ.சி.ஜி. சாயம் மூலம் மிக மிகப் பிரகாசமாக ஒளிரச் செய்து ரத்தத்தில் உள்ள உயிரணுக்கள், மூலக்கூறுகள் உள்ளிட்ட பல்வேறு உயிரியல் அமைப்புகளை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும்.

அதனால், அடிப்படையில் ரத்த நாளங்கள் மற்றும் ரத்த ஓட்டம் அதிகமுள்ள புற்றுநோய்க் கட்டிகள் உள்ள பகுதிகளும் இந்த லேசர் ஒளி பட்டால் மிகவும் பிரகாசமாக ஒளிரும். அதன்மூலம் புற்றுநோய்களை எளிதாகவும், துல்லியமாகவும் அடையாளம் கண்டுவிட முடியும் என்கிறார் ஆய்வாளர் சூடாங் பேன். ரத்தத்தின் உதவியுடன் இயங்கக்கூடிய இந்த புதிய லேசரின் விசேஷம் என்னவென்றால், தற்போதுள்ள புற்றுநோய் கண்டறியும் தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்படும் உயிரியல் அமைப்பு படங்களை விட பல மடங்கு துல்லியமான மற்றும் பிரமாதமான படங்களை உருவாக்குகிறது என்பதுதான்.

அது சரி, இந்த லேசர் தொழில்நுட்பத்தின் அறிவியல் அடிப்படை என்ன?

ஒரு திரவத்தின் மீது ஒரு வகையான ஒளியை பாய்ச்சுவதன் மூலம் அந்த திரவமானது ஒளியை பிரதி பலிக்கும் மையமாக மாறுகிறது. பின்னர் திரவத்தில் இருந்து புறப்படும் ஒளியை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பைக் கொண்டு பிரதிபலிக்கச் செய்ய முடியும். ஆப்டோ புளூயிடிக்ஸ் (Optofluidics) என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இன்ப்ரா ரெட் போன்ற ஒளிக் கதிர்களை உடலிலுள்ள பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நுண்ணிய உயிரியல் அமைப்புகளை படம்பிடிக்கும் மற்றும் ஸ்கேன் செய்யும் கருவிகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆப்டோ புளூயிடிக்ஸ் தொழில்நுட்பத்தை மேலும் மெருகேற்றித்தான் ரத்தத்தின் உதவியுடன் இயங்கும் இந்த புதிய லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது ஆய்வாளர் சூடாங் பேனின் ஆய்வுக்குழு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது ஆய்வு நிலையில் உள்ள இந்த ரத்த லேசர் தொழில்நுட்பமானது மனித பயன்பாட்டுக்கு தேவையான வகையில் பாதுகாப்பானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் மெருகேற்றப்பட்ட பின்னர், மனித புற்றுநோய் கண்டறியும் துறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் சூடாங் பேன்.

Comments