‘மாற்றுத் திறனாளி பெண்களுக்கு ஊக்கம் அளிப்பேன்’ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை தீபா மாலிக் பேட்டி

'மாற்றுத் திறனாளி பெண்களுக்கு ஊக்கம் அளிப்பேன்' பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை தீபா மாலிக் பேட்டி

'மாற்றுத் திறனாளி பெண்களுக்கு ஊக்கம் அளிப்பேன்' என்று பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபா மாலிக் தெரிவித்தார்.

பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் 4.61 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். பக்ரைன் வீராங்கனை பாத்திமா நிதாம் 4.76 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

பாரா ஒலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற 45 வயதான தீபா மாலிக் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ராணுவ அதிகாரியின் மனைவியான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 17 ஆண்டுகளுக்கு முன்பு முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை நடந்த போது இடுப்புக்கு கீழே உடல் உறுப்புகள் செயல் இழந்தன. அதை குணப்படுத்துவதற்கு 31 முறை அறுவை சிகிச்சை செய்த போதிலும் பலன் இல்லை. நடந்து செல்வது இனி இயலாத ஒன்று என்ற நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்தி வரும் தீபா மாலிக், இப்போது புதிய சகாப்தம் படைத்துள்ளார்.

ரூ.4 கோடி ஊக்கத்தொகை

பதக்கம் வென்ற தீபா மாலிக்குக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய்கோயல் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபா மாலிக்குக்கு, அரியானா மாநில அரசின் புதிய விளையாட்டு கொள்கையின் படி ரூ.4 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார். இதே போல் தீபா மாலிக் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அரியானாவின் மகள்கள் வெற்றிகளை கொண்டு வந்து, எங்களை பெருமைப்பட வைத்திருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளி பெண்களுக்கு ஊக்கம்

பதக்கம் கைப்பற்றிய தீபா மாலிக் அளித்த பேட்டியில், 'இது ஒரு அற்புதமான பயணமாகும். பதக்கம் வென்றதன் மூலம் எனது வாழ்நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. இந்த போட்டிக்காக நான் நன்றாக தயாராகி இருந்தேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அணியில் மூத்த வீராங்கனையாக இடம் பெற்று பதக்கம் வென்றதை நினைத்து பெருமைப்படுகிறேன். ரியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது பதக்கம் இதுவாகும். இப்போதாவது பாரா ஒலிம்பிக் விளையாட்டில், நமது நாட்டில் நிறைய திறமை உள்ளது என்பதை மக்கள் அங்கீகரிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளி பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த பதக்கத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Comments