கடலைக் காப்போம்

கடலைக் காப்போம்

கடல் தொழில் விவசாயம் போன்றது, கடல் தொழிலாளர்கள் விவசாயிகள் போன்றவர்கள். கடல் என்பது திறந்து கிடக்கிற பொக்கிஷ அறை அல்ல, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய வயல்வெளி.வரி ஏதும் கொடுக்காமல் வாரி எடுத்துக்கொண்டு வரும் திறந்தவெளிக் கருவூலம் அல்ல கடல். வித்திட்டு, நாற்று நாட்டு, களை எடுத்து, உரம் போட்டு, நீரூற்றி, போற்றி வளர்த்து, பாதுகாத்து, அறுவடை செய்ய வேண்டிய ஆயிரங்காலத்துப் பயிர்நிலம். அந்தப் பயிரின் பெயர் கடல் பூக்கள். அந்த விவசாயிகளின் பெயர் கடலோடிகள், மீனவர்கள்.பூமியின் எழுபத்தொரு சதவீதப் பரப்பினில் வியாபித்திருக்கும் நீலத்திரைக் கடல், உலகின் 97% தண்ணீரைத் தன்னுள் கொண்டுள்ளது. கடல் வெறும் நீர்நிலை மட்டுமல்ல. மானுட வாழ்வின் மகோன்னத ஆதாரம். முத்தும், பவளமும், முதுவயிரக் கற்களும் கொண்ட புதையற் பேழை. நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக்கி, சுகாதாரமானதாக்கி, வெப்பப் பகுதிக்கு குளிரும், குளிர்ப்பகுதிக்கு வெப்பமும் தரும் தன்னிகரற்ற தட்ப வெப்ப இயந்திரம்.சூரியன் தரும் வெப்பத்தை தன்னைத் தழுவும் காற்றாலும், தன்னகத்து நீரோட்டத்தாலும் பாரபட்சமின்றி பார் முழுதும் பரவச்செய்யும் பரோபகாரி. நீரை ஆவியாக்கி, ஆவியை மழையாக்கி, பயிராக்கி, பன்னருந் தொழிலாக்கி ஏற்ற மிகு சேவை செய்யும் தாய்.இந்தியப் பெருங்கடல் நம்நாட்டு முற்றம். தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையினை தொட்டுச் செல்லும் 20 டிகிரி கிழக்கு மெரிடியன் ரேகை இதன் மேற்கு எல்லை. கிழக்கே மலாய் தீபகற்பத்தினின்றும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு, ஜாவா தீவு, திமோர் தீவு, ஆஸ்திரேலியா, தாஸ்மானியா தீவு - இவற்றிடையேயுள்ள மிகவும் குறுகலான தூரங்களை இணைத்து ஒரு கோடு வரைந்து 147 டிகிரி கிழக்கு மெரிடியனோடு இணைத்து விட்டால் இதுதான் கிழக்கு எல்லை. செங்கடல், பாரசீக வளைகுடா, அரபிக் கடல், வங்காள விரிகுடா - அனைத்தையும் உள்ளடக்கிய சுமார் ஏழரை கோடி சதுர கி.மீ. கடற்பரப்புதான் இந்தியப் பெருங்கடல். யுரேனியம், தோரியம், இரும்பு உள்ளிட்ட இருபது உலோகங்கள் செறிந்து காணப்படும் இப்பெருங்கடலின் ஒரு சதுர மைல் கடற்படுகையிலிருந்து (seabed) மட்டும் 70,000 டன் உலோகங்கள் பெற முடியும்.உலகின் மொத்த எண்ணெய் வளத்தின் மூன்றில் இரண்டு பகுதியைத் தன்னுள் கொண்டுள்ள இம்மாக்கடல், ஒவ்வொரு வருடமும் 12 மில்லியன் டன் எடையுள்ள மீன் உணவு அளிக்கிறது. கடல்வழி வாணிபத்தின் உயிர் நாடி, கப்பல் போக்குவரத்தில் முக்கிய சந்திப்பு இந்தியப் பெருங்கடல். இந்தியாவுக்கு சுமார் 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரை இருக்கிறது. இதன் நெடுகிலும் வாழும் கடல் விவசாயிகள் கடல் சம்பந்தப்பட்டத் தொழில்கள் செய்கின்றனர். சிறுகக் கட்டி, பெருக வாழ்ந்த நம் முன்னோர் செய்த கடல் பூக்கள் கொய்யும் தொழில், மக்கள் விஞ்ஞானம், பாரம்பரிய முறைகள், சுயக் கட்டுப்பாடுகள் நிறைந்ததாய் இருந்தது. அரும்புகளைத் தவிர்த்து, மூத்தவைகளை, முதிர்ந்தவைகளை, பூத்தவைகளை, புலர்ந்தவைகளைக் கொய்து வந்தனர் நெய்தல் தொழில் செய்தோர். பணமயமாக்கப்பட்டுவிட்ட இன்றைய உலகில், அந்த மாதிரியானக் கட்டுப்பாடுகள் காற்றிலே பறக்க விடப்படுகின்றன. வெளிநாட்டு டிராலர்கள் (Trawlers) கடலை அரித்து அப்படியே அள்ளிக்கொண்டு போவதும், விசைப் படகுகள் ஆழ் கடலில் தங்கியிருந்து கையில் அகப்பட்டதையெல்லாம் பிடித்துக் கொண்டு போவதும் வழக்கமாகிவிட்டன.இன்று கடலும், கடல் சார்ந்த சமுதாயங்களும் பிற்படுத்தப்பட்டு கிடக்கின்றன. புண்ணியப் பெருங்கடலை போர்க்களமாக்கினோம். அப்புதையற் பேழையை புதைகுழியாக்கிக் கொண்டிருக்கிறோம்.வீட்டுக் கழிவுகள் மற்றும் குப்பைகள், தொழிற்சாலைகளின் பல்வேறு கழிவுப் பொருட்கள், உரம், பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயனக் கழிவுகள், பெட்ரோலியப் பொருட்கள், கப்பல்களில் எழும் எண்ணெய்க் கசிவு, அணுசக்தி கதிர்வீச்சுக் கழிவுகள் போன்றவற்றை கடலில் கொட்டி, நமது உணவில் நாமே விஷம் கலந்து கொண்டிருக்கிறோம்.நாம் வீசும் நச்சுப் பொருட்கள் மீன்களைக் கொன்று, நீர்வழி நோய்களை எழச் செய்கின்றன, கடற்கரையோரங்களை மாசுபடுத்துகின்றன. மண்ணாசைப் பிடித்து உழலும் நமது உலகில், கடற்கரையை நீரருகுச் சொத்தாகப்  (waterfront property)  பார்க்கின்றனர் நில வணிகர்கள். தொழிற்பேட்டையாகப் பார்க்கின்றனர் தொழில் வல்லுனர்கள். தங்கச்சுரங்கமாகப் பார்க்கின்றனர் தனியார் மணல் திருடர்களும், மணல் நிறுவனங்களும். லஞ்ச பொக்கிஷமாகப் பார்க்கின்றனர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்.உண்டுறை விடுதிகள், உல்லாச விடுதிகள், கப்பல் உடைக்கும் தளங்கள், குடிநீருக்கான உப்பகற்றி ஆலைகள், ஸ்டெர்லைட் போன்ற ஆபத்தான நிறுவனங்கள், துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள் கடற்கரை எங்கும் தொடங்கப்படுகின்றன. காசு, பணம், துட்டு, மணி, மணி, மணி என்பதுதான் தாரக மந்திரம். மீனவ மக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்கள்கூட, அவர்களுக்கு எதிராகத்தான் அமைகின்றன. ஒருங்கிணைந்த கடற்பகுதி மேலாண்மை (Integrated Coastal Zone Management - ICZM) என்ற திட்டத்தின் உதவியுடன் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகும் கடலோரப் பகுதிகளைக் கண்டறிந்து, வரைபடங்கள் தயாரித்து, கடலரிப்பைத் தடுத்து, மாசுக் கட்டுப்பாடு செய்து, அங்கே வாழும் மக்களை இடப்பெயர்ச்சி செய்வார்களாம்.அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது புரிகிறதா? கடற்கரையிலிருந்து மக்களை அப்புறப்படுத்துவதற்கு இப்படி ஒரு விஞ்ஞானகரமானத் திட்டம். தமிழ்நாட்டிற்கு சுமார் 1,050 கி.மீ. நீளமுள்ள கடற்கரை இருக்கிறது. இதில் 442 மீனவ கிராமங்கள் இருக்கின்றன. தென்கோடியிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 72 கி.மீ. நீளமுள்ள கடற்கரை உள்ளது. அங்கே 42 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 1,35,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 48,000 பேர் மீன்பிடித் தொழில் செய்கின்றனர். தமிழகத்தின் மொத்த மீன்பிடித் தொழிலின் வருமானத்தில் 26.2 சதவீதத்தை அவர்கள் சம்பாதித்தாலும், கிட்டத்தட்ட 70 சதவீத குமரி மாவட்ட மீனவ மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்.தேசிய கடலோர மீனவர் கணக்கெடுப்பு 2005-இன் படி (National Marine Fisheries Census 2005), இந்தியாவில் 7,56,212 கடலோர மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களின் மொத்த மக்கள்தொகை 35,19,116. சுமார் 7,17,999 பேர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.இதில் 61.7 சதவீதம் மீனவ குடும்பத்தினர் வேறு தொழில் எதுவும் செய்யத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். மொத்தம் 58,911 விசைப் படகுகளும், 75,591 மோட்டார் படகுகளும், 1,04,270 நாட்டுப் படகுகளும் இவர்களால் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன.கடலை குப்பைத் தொட்டியாக, சாக்கடைகள் சங்கமிக்கும் கழிவுநீர்த் தேக்கமாகக் கருதாமல் நமது உணவுப் பெட்டகமாக, காலநிலை கணிக்கும் கருவியாக, தாயாகப் பார்ப்பது முக்கியம். கடல் சார்ந்து வாழும் சமூகங்களே கடலைப் புனிதமாகப் பார்க்காது, குப்பைகளை வாரி எறிவது மிகுந்த வேதனையான விஷயம். வீட்டுக் குப்பைகளையும், மதுபான பாட்டில்களையும் கடலுக்குள் தூக்கி எறிவதும், கரையோரங்களை சுத்தமாகப் பராமரிக்காமல் புறக்கணிப்பதும் கேவலமானச் செயல்கள்.எங்கோ இருக்கும் சாயப்பட்டறைக் கழிவுகளை குழாய் வழியாகக் கொண்டு வந்து கடலுக்குள் கொட்டலாமா என்றும், அணுஉலைக் கழிவுகளை அப்படியே ஊரார் கண்ணுக்குத் தெரியாமல் கடலுக்குள் விடலாமா என்றும் திட்டமிடும் அதிகார வர்க்கத்தை தட்டிக்கேட்கும் நாம், முதலில் நம்மை திருத்திக் கொண்டாக வேண்டும். அடுத்தவன் கண்ணில் கிடக்கும் தூசியைப் பற்றிக் கவலைப்படுமுன்னர், நம் கண்ணில் கிடக்கும் உத்திரத்தை அகற்றுவோம்.வருங்காலக் கடல் விவசாயிகளின் நிலைமையும், தன்மையும் எப்படியிருக்கும் என்பது ஒரு மிக முக்கியமான கேள்வி. மிகப் பெரும்பாலான மீனவக் குழந்தைகள், இளைஞர்கள் பள்ளிக்கு, கல்லூரிக்குப் போகிறார்கள். நல்ல வேலைகளை, உயர் பதவிகளைப் பெறுகிறார்கள். அப்படியானால் மெதுவாக கடல் தொழிலை விட்டு விலகி விடலாமா?பொருளாதாரத்தில் நலிந்திருக்கும் வேறு மக்கள் கையில் ஒப்படைக்கலாமா? இவற்றுள் எதுவுமே உரிய விடையல்ல. கடலையும், கடற்கரையையும் தக்க வைத்துக் கொள்வதுதான் ஒரே வழி. பாரம்பரியத் தொழிலான மீன்பிடித் தொழிலை பாதுகாப்பு உடையதாக, தகுதி மிக்கதாக, கெளரவம் உடையதாக மாற்றுவதே சிறப்பு."ஒருவருக்கு இன்று மட்டும் உணவளிப்பதென்றால், ஒரு மீனைக் கொடு அவர் வாழ்க்கைக்கே உணவளிப்பதென்றால், மீன் பிடிக்கக் கற்றுக்கொடு' என்கிறது ஒரு சீனப் பழமொழி. மீன்பிடிக்கக் கற்றறிந்த கடல் விவசாயிகளே, என்ன செய்யப் போகிறோம்?

Comments