அசாதாரணப் பிறவி லூசி

அசாதாரணப் பிறவி லூசி


தற்போதைய மனித குலத்தின் மூதாதையர் என்று அறியப்பட்ட ஹோமினிட் ஆதிமனுஷியான லூசி, மரத்திலிருந்து விழுந்து கை முறிந்து இறந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 3.18 மில்லியன் ஆண்டுகளான தொல்லுயிர் எச்சங்களை டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. உயர் நுணுக்க எக்ஸ்ரே சிடி ஆய்வை லூசியிடம் செய்து பார்த்தபோது, வலது கை தோள் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதைக் காட்டியுள்ளது. இடது தோளிலோ மற்ற பகுதிகளிலோ அத்தனை தீவிரமான முறிவுகள் இல்லையென்பதையும் இந்த எக்ஸ்ரே ஆய்வு காட்டியுள்ளது. ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து மனிதர்கள் விழும்போது, அடிபடுவதைத் தவிர்க்கத் தன்னை அறியாமலே கையை நீட்டும்போது, இதுபோன்ற காயங்கள் உருவாவது தவிர்க்க முடியாதது என்கிறார் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் நிலவியல் அறிவியல் பேராசிரியரான ஜான் கப்பல்மான். இந்தக் காயம் தொடர்பாக எலும்பு மூட்டுவியல் அறுவை சிகிச்சை நிபுணரான ஸ்டீஃபன் பியர்சிடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. லூசியின் எலும்புக்கூடு, 1974-ல் எத்தியோப்பியாவில் தோண்டியெடுக்கப்பட்டது. அப்போதிருந்து லூசிக்கும் நவீன மனிதர்களுக்குமிடையிலான தொடர்பு குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். மூன்று அடி ஆறு அங்குல உயரம் கொண்டதாகக் கருதப்படும் லூசி, இரவில் மரங்களில் தங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் வலது தோளில் ஏற்பட்ட காயம் 40 அடி உயரத்திலிருந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. லூசியின் உடலெச்சங்கள் அமெரிக்காவுக்கு 2009-ல் எடுத்துவரப்பட்டபோது ஜான் கப்பல்மான் உள்ளிட்ட டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உயர் நுணுக்க சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. மரத்திலிருந்து விழும்போது தன் கையைத் தரையில் தாங்குவதற்கு லூசி நீட்டியதன் மூலம் சிந்திக்கும் மனிதர்களுக்கு மூதாதையாக அது தன்னை நிரூபித்துவிட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹவுஸ்டன் இயற்கை அறிவியல் அருங்காட்சி யகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் லூசியின் மாதிரி சிலை வடிவம்.  

Comments