ஒருதலை விபரீதம்

ஒருதலை விபரீதம்

அண்மைக்காலமாக பரபரப்பூட்டும் செய்திகளில் முதலிடத்தைப் பிடித்திருப்பது கொலைகள். அதுவும் பரிதாபகரமான சம்பவங்களாக இருக்கின்றன. பெண்ணாகப் பிறந்திட்டால் துயரங்களைத் தாங்கவேண்டிய கட்டாயத்தில்தான் இன்னும் சூழ்நிலை உள்ளது. பாலியல், வன்முறை, கேலி செய்தல், காதல் குற்றங்கள் இப்படி பல்கிப் பெருகிவிட்டன. வழக்கமாக குடும்பத் தகராறு, சொத்து விவகாரம், அரசியல் பகைமை என்றெல்லாம் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துவரும் வேளையில் தற்போது நிகழும் கொலைகள் மிகவும் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றன. குற்றத்தில் ஈடுபட சரியான காரணம் எதுவுமில்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற கதையாக இளமைத் துடிப்பில் குற்றவாளிகள் பெருகிவிட்டனர். சென்னையில் சுவாதி, விழுப்புரத்தில் நவீனா, கரூரில் சோனாலி, தூத்துக்குடியில் பிரான்சினா, விழுப்புரத்தில் புஷ்பலதா என நடந்தேறியிருக்கிறது. இக்கொலைகளின் நோக்கத்தைப் பார்க்கும்போது அவை ஒருதலைக்காதல் வகையாகக் கூறப்படுகிறது. இப்படி பார்த்தவுடன் காதல், கல்யாணம் என்பது நமது கலாசாரத்தில் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பின்புலம், நேரம், கல்வி, வயது என்ற ரீதியாக நடைபெறுகிறது. கல்லூரிக் காதல்தான் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை முதலிடத்தில் இருக்கிறது. இளைஞர்களைப் பொருத்தவரை அவர்களது வயது இதுபோன்ற பதற வைக்கும் காரியத்தைச் செய்யத் தூண்டுகிறது. இதற்குக் காரணம் தவறான வளர்ப்புமுறை, ஆண், பெண் இனக்கவர்ச்சி, பக்குவமின்மை என வரிசைப்படுத்தலாம். அதிலும் தற்போதைய அறிவியல் சாதனங்கள் இவர்களின் ஆசைக்கு பெருமளவில் தீனி போடுகின்றன. அது திரைப்படம், தொலைக்காட்சி, செல்லிடப்பேசி, இணையம், கட்செவி அஞ்சல் என பல வடிவங்களில் வந்து பயமுறுத்துகின்றன. வெறும் ஆசைக்கும், உணர்வுகளுக்கும் இவர்கள் அடிமையாகி நினைத்ததை நிறைவேற்றத் துடிக்கின்றனர். ஒருபெண்ணைப் பார்த்ததும் பேசிப் பழகி, காதலித்து அப்புறம் திருமணம் செய்வது என்ற பேச்சே கிடையாது. சாலையில் செல்லும் பெண்ணைப் பார்த்ததும் மனக்கோட்டை கட்டுவது, நேரில் பேச தைரியமின்றி கோழையாகி தனக்குள்ளே கனவுகளை வளரவிடுவதுதான் இன்றைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. இதற்குப் பெயர் ஒருதலைக் காதல் என்கிறார்கள். பார்த்ததும் இந்தபெண்ணை நாம் திருமணம் செய்ய வேண்டும்என நினைக்கும் இவர்கள் முதலில் தங்களைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்வதில்லை. தனது வயது, பெண்ணுக்கு நிகரான கல்வி, வேலை, வசதி இருக்கிறதா, திருமணம் செய்தால் வைத்துக் காப்பாற்ற தெம்பு இருக்கிறதா என்று எண்ணுவதில்லை. பெற்றோரிடம் கூறி திருமணம் செய்யும் துணிவும் உண்டா என்றால் அதுவும் கிடையாது. நமக்கு இருக்கும் ஆசையை வலுக்கட்டாயமாக பெண்ணிடம் திணிப்பது நியாயமா என யோசிப்பதில்லை. பல ஆண்டுகள் வளர்த்து படிக்கவைத்த பெற்றோருக்கு அப்பெண்ணின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். ஏதோ ஒரு மாதமோ, சில நாள்களோ பார்த்துவிட்டு காதலை தெரிவிப்பதும், அதை மறுத்தால் கொலை செய்வதும் எந்தவகையில் நியாயம்? இப்படிப்பட்ட நபர்களுக்கு பெண்கள்தான் தக்க பாடம் புகட்ட வேண்டும். தன்னை ஒருவன் பின்தொடர்வதாக தெரிந்தால் முதலில் துணிச்சலாக அவனை அழைத்து, பேசி எச்சரிக்க வேண்டும் அல்லது தன் பெற்றோர், காவல்துறையைத் தொடர்புகொண்டு முன்னதாக குற்றத்தைத் தடுக்கவேண்டும். மாறாக, கண்டும் காணாமல் போனால் கொலை பாதகத்தில்தான் முடியும்.இதனால் இருவரின் வாழ்வும் வீணாகிறது. இன்றைய இளைஞர்களில் சிலர் தவறான காரியங்களில் இறங்குகின்றனர். உதாரணமாக செல்வமிக்க பெண்களை வளைப்பது, தொந்தரவு செய்வது, பணம் பறிப்பது, கட்டாயத் திருமணம் செய்வது, காதலித்து திருமணம் செய்துவிட்டு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு விவாகரத்து செய்வது என பழகி வைத்திருக்கின்றனர். இதை முதலில் தடுக்க வேண்டும். பொது இடங்களில் பெண்களுக்குத் தொல்லை தருவோருக்கு காவல் துறையினர் கடுமையான தண்டனை தரவேண்டும். எச்சரித்து அனுப்புவதால் மட்டும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கமுடியாது. மேலும் கல்லூரிகள், கல்வி நிலையங்கள் பகுதியில் காவல்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் புகார் பெட்டிகளை வைக்கவேண்டும். முக்கியமாக பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். எந்தப் பிரச்னைக்கும் துணிச்சலான முடிவெடுக்காமல் கோழைத்தனமாக தற்கொலைக்கு முயற்சி செய்யக் கூடாது. கொலைவரையில் காதல் கொண்டுபோய் விடும் என்பதைக் கவனிக்க வேண்டும். பெற்றோருக்குத் தெரியாமல் பழகுவது விபரீதத்தைத் தரும். ஆண் நண்பர்களோடு வெளியிடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அந்த வயது அப்படித்தான் என சமாதானம் செய்து கொள்வது தவறு. ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் இளைஞன் அந்தப் பெண்ணை இறுதி வரைக் காப்பாற்றத் திராணியுடையவனாக இருக்க வேண்டும். அது இல்லாமல் காதல்,கவர்ச்சியென இறங்குவது வீண். இருபாலருக்கும் தக்க ஆலோசனைகள் வழங்கும் வகையில் சமூக அமைப்புகள் உதவியோடு கல்லூரி, கல்விநிலையங்களில் தனி மையம் அமைக்க வேண்டியது அவசியம். பெண்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அதை பெண்கள் அலட்சியப்படுத்துவதால் கொலையில் முடிகிறது. நீதித்துறை இளைய கொலையாளிகளுக்கு அவர்கள் வயதில் குறைவானவர்கள் என்று கருணை காட்டாமல் குற்றத்திற்கேற்ப கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.

Comments