SCROL

Friday, September 30, 2016

கடவுள் போன்று நினைத்து கொள்ளாதீர்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்

கடவுள் போன்று நினைத்து கொள்ளாதீர்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்

லோதா கமிட்டி பரிந்துரையை நிறைவேற்ற கிடுக்குபிடி

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர்.லோதா கமிட்டி பரிந்துரையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, கடவுள் போன்று நினைத்து கொள்ளாதீர் என்றும் 'குட்டு' வைத்தது.

அதிரடி பரிந்துரைகள்

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கின் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க, முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டியை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது.லோதா கமிட்டி பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பல்வேறு பரிந்துரைகளை முன் வைத்தது. இவற்றில், "இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் நிர்வாக பொறுப்பில் தொடரக் கூடாது; அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கிரிக்கெட் வாரியத்தில் இடமில்லை; ஒருவர் ஒரே நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில சங்கங்களில் என்று இரட்டை பதவி வகிக்க அனுமதி கிடையாது; இரண்டு முறை பதவி வகித்தால், அடுத்த முறை பதவிக்கு வர 3 ஆண்டுகள் இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும், ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு ஓட்டுரிமை (மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுரிமை உள்ளது)" போன்றவை லோதா கமிட்டியின் சிபாரிசுகளில் மிக முக்கியமானவையாகும். இவற்றை அமல்படுத்த உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, கண்காணிக்கும் பொறுப்பை லோதா கமிட்டியிடம் வழங்கியது.

கிரிக்கெட் வாரியம் அதிருப்தி

ஆனால் ஒரு சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியது. அத்துடன் கிரிக்கெட் வாரிய மறுசீரமைப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு மேற்கொண்ட முடிவுகள் சட்டவிரோதமானவை. அதில் அரசியலமைப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று கிரிக்கெட் வாரியத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கும் குழுவின் தலைவரான முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறினார். அவரது யோசனைப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இதற்கிடையே, தங்களது பரிந்துரைகளை நிறைவேற்ற லோதா கமிட்டி இரண்டு கட்ட கெடு விதித்தது. அதாவது செப்டம்பர் 30-ந்தேதிக்குள் (நாளை) இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும், டிசம்பர் 15-ந்தேதிக்குள் செயற்குழுவுக்கு பதிலாக 9 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டியை அமைக்க வேண்டும் என்று கிடுக்குபிடி போட்டது.என்றாலும், பி.சி.சி.ஐ எதற்கும் வளைந்து கொடுப்பது போல் தெரியவில்லை. அண்மையில் நடந்த பி.சி.சி.ஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்திலும் இந்த விஷயத்தில் எந்தவித தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை. லோதா கமிட்டியின் சிபாரிசுகளை அமல்படுத்துவதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகிறது. இதனால் கிரிக்கெட் வாரியம் மீது லோதா கமிட்டி கடும் கோபத்திற்குள்ளாகி இருக்கிறது.

அனுராக் தாகூரை நீக்குங்கள்

இந்த நிலையில், பரிந்துரைகளை அமல்படுத்தும் விஷயத்தில் இதுவரை கிரிக்கெட் வாரியம் செய்தது என்ன?, எத்தகைய நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிக்கையாக தயாரித்த லோதா கமிட்டி அதை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது.அந்த அறிக்கையில், 'ஆலோசனை நடத்துவதற்காக ஆகஸ்டு 9-ந்தேதி கமிட்டி முன்பு ஆஜராகும்படி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூருக்கு பல முறை இ-மெயில் அனுப்பினோம். ஆனால் அதற்கு ஒரு பதில் கூட வரவில்லை. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் தலையிடக்கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அவர் கடிதம் எழுதினார். அது மட்டுமின்றி கடந்த சில வாரங்களாக மிகவும் ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவரது நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டு மற்றும் இந்த கமிட்டியை குறைத்து மதிப்பிடும் வகையில் இருக்கிறது. எனவே கோர்ட்டின் உத்தரவுக்கு அடி பணிய மறுக்கும் கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை உடனடியாக நீக்க வேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நீங்கள் கடவுளா?

இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கிரிக்கெட் வாரிய வக்கீலை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார்."தாங்கள் வைக்கிறது தான் சட்டம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது. அப்படி நினைத்தால் அது தவறு. கோர்ட்டின் உத்தரவை எப்படி நிறைவேற்ற வைப்பது என்பது எங்களுக்கு தெரியும். கிரிக்கெட் வாரியம் தங்களை கடவுள் போன்று நினைத்து கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒழுங்காக நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். இல்லாவிட்டால் உரிய வழியில் உங்களை அதை செய்ய வைப்போம். இன்னொரு உத்தரவு பிறப்பிப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை மிகவும் மோசமாக இருக்கிறது. காலத்தை கடத்த அவர்கள் கையாளும் தந்திரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல" என்று கூறிய நீதிபதி டி.எஸ்.தாக்குர் பின்னர் லோதா கமிட்டியின் உத்தரவுகளை அமல்படுத்தாதது குறித்து அக்டோபர் 6-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டார்.இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் மிக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment