கைப்படம் தவிர்ப்போம்

கைப்படம் தவிர்ப்போம்

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய செல்லிடப்பேசிகள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இதையடுத்து கேமராவின் பயன்பாடு மக்கள் மத்தியில் கணிசமாகக் குறைந்து விட்டது. கேமராக்களுக்கு மாற்றாக செல்லிடப்பேசிகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பகுதிகளுக்குச் செல்வோரும் கேமராக்களை பயன்படுத்துவதைக் காட்டிலும் செல்லிடப்பேசிகளையே அதிகம் விரும்புகின்றனர்.இதனால் சுற்றுலா செல்வோர் தங்களை பல்வேறு கோணங்களில் செல்லிடப்பேசி மூலம் படம் எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பாக "செல்ஃபி' எனப்படும் கைப்படம் எடுத்துக் கொள்வது அதிகரித்து விட்டது.ஒருவர் மட்டுமன்றி பலரும் சேர்ந்து கைப்படம் எடுத்துக் கொள்வது அதிகரித்து விட்டது. முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருடன் கைப்படம் எடுத்துக் கொள்வதை பலர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.அதுபோல் தங்களுக்குப் பிடித்த பகுதிகள், சிலைகள், ஓவியங்கள் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து கைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். சிலர் ஆபத்தான பகுதிகளில் கைப்படம் எடுத்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.குறிப்பாக மலைப் பகுதிகள், நீர்வீழ்ச்சி, நதிகள், பாலங்கள் போன்ற பகுதிகளின் அருகிலும், பெருவெள்ளம் செல்லும் பகுதிகள், ஆழமான கடல் பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் கைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.அதுபோல் படகு பயணத்தின் போதும், ரயிலின் மேற்கூரை, உயரமான கட்டடங்களின் விளிம்புப் பகுதிகளிலும் கைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.இதன் காரணமாக மலைகள், பாலங்களில் இருந்து தவறி விழுந்தும், நதிகள், பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், கடல், நீர்நிலைகளில் மூழ்கியும் பலர் உயிரிழந்துள்ளனர்.சில மாதங்களுக்கு முன் கங்கை நதி அருகே கைப்படம் எடுத்துக் கொள்ள முயன்ற இளைஞர்கள் ஏழு பேர் கங்கையில் விழுந்து இறந்ததாக செய்தி வெளியானது. நாக்பூர் அருகே மாங்ரூல் ஏரியில் படகு பயணம் மேற்கொண்ட நண்பர்கள் கைப்படம் எடுக்க முயன்றபோது ஒருவர் கால் இடறி ஏரியில் விழுந்து இறந்தார்.கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தில் பெய்த கனமழையின் போது அரக்கோணம் பகுதியில் ஆற்றில் சென்ற வெள்ளத்தின் அங்கே நின்று கைப்படம் எடுக்க முயன்ற புதுமணத் தம்பதி ஆற்றில் விழுந்து இறந்தனர்.கொடைக்கானல் மலைப் பகுதியில் கைப்படம் எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் மலையிலிருந்து தவறி விழுந்து இறந்தார்.குழந்தைகள் விளையாடும்போது உடன் இருந்து பெரியவர்கள் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் பெரியவர்களே இதுபோன்று ஆபத்தான கைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். குழந்தைகளை வைத்துக்கொண்டு ஆபத்தான வகையில் கைப்படம் எடுத்துக் கொள்பவர்களும் உள்ளனர்.இதுபோன்று எடுக்கும் கைப்படங்களை அவர்கள் முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் ஆகியவற்றின் மூலம் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.சுற்றுலா மையங்களில் செல்லிடப்பேசிகள் மூலம் கைப்படம் எடுக்க கட்டுப்பாடு விதிக்குமாறு மாநில, யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்கு மத்திய சுற்றுலாத் துறை அறிவுறுத்தியுள்ளது.சுற்றுலா மையங்களில் கைப்படம் எடுப்பதில் உள்ள அபாயத்தை விளக்கும் விளம்பரப் பலகைகளை வைக்க வேண்டும். அடிக்கடி விபத்து நேரிடும் பகுதிகளில் தன்னார்வலர்களையும், சுற்றுலா காவலர்களையும் பணியமர்த்த வேண்டும் என கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளது.ஆனால் சுற்றுலா மையங்கள் நீங்கலாக ஆபத்தான பகுதிகளில் கைப்படம் எடுத்துக் கொள்வோருக்கு இந்த அறிவுறுத்தல் பயன் தராது.எனவே கைப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரியான தீர்வாக அமையும்.சாலைப் பாதுகாப்பு, தலைக் கவசம் அணிவது, அனைவரும் வாக்களிப்பது, தொழுநோய், ரத்ததானம், உடல் உறுப்புதானம், தாய்ப்பால் வழங்குவது, பெண் கல்வி, சுற்றுச்சூழல், தனிநபர் கழிப்பறை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு, புகையிலை ஒழிப்பு, தூய்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுப் பேரணிகள், மாரத்தான் ஓட்டம், விழிப்புணர்வு நாடகங்கள், அரசின் சார்பிலும், தனியார், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் நடத்தப்படுகின்றன.மேலும் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகளும், சுவர் ஓவியங்களும் பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகளும், சுவர் ஓவியங்களும் பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்படுகின்றன.அதுபோல் ஆபத்தான பகுதிகளில் கைப்படம் எடுப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.சுற்றுலாப் பகுதிகள் மட்டுமன்றி பொது இடங்களிலும் கைப்படம் எடுப்பதைத் தவிர்ப்பது தொடர்பான எச்சரிக்கை, விழிப்புணர்வு வாசகங்களை வைக்க வேண்டும். முடிந்தவரை ஆபத்தான பகுதிகளில் தடுப்புக் கம்பிகள், தடுப்புச் சுவர்களை உயர்த்தி அமைக்க முயற்சிக்கலாம்.

Comments