சவால்களும் எதிர்பார்ப்புகளும்

சவால்களும் எதிர்பார்ப்புகளும்

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் மூன்று ஆண்டு பதவிக் காலம் அண்மையில் முடிவடைந்ததை அடுத்து உர்ஜித் படேல் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கெனவே ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பொறுப்பு வகித்தவர். துணை ஆளுநராக இருந்து, நேரடியாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்புக்கு வந்தவர்களில், நாட்டிலேயே இவர் இரண்டாவது நபர். இதற்கு முன்னர் 1943-ஆம் ஆண்டில் இவரைப் போலவே துணை ஆளுநராக இருந்து ஆளுநரானவர் சி.டி. தேஷ்முக் ஆவார்.

புதிய மாற்றத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன?

இந்த கேள்விக்கு பதில் காண்பதற்கு முன் முந்தைய ஆளுநரின் செயல்பாடுகள் எப்படி இருந்தன; அவரது சாதனைகள் எவை; சறுக்கல்கள் எவை என்பதை அலசுவது பொருத்தமாக இருக்கும்.2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றபோது, இந்தியாவில் பணவீக்கம் 11 சதவீதமாக இருந்தது. உச்சத்தில் இருந்த பணவீக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து, சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் இப்போது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி.) 5 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 8 சதவீதமாக உயருவதற்கான சூழல்கள் உருவாகியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவில் இருந்து மீட்சி அடைந்து விரைவிலேயே ஸ்திரம் அடைந்தது.வங்கிகளில் வாராக் கடன் அதிகரித்தபோது, வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்கள் அதனை துல்லியமாக வெளிப்படுத்தப்படாத நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்களை ஒளிவு மறைவு இல்லாமல், வெளிப்படுத்தியது ரிசர்வ் வங்கி.Small Banks, Payment Banks ஆகிய புதிய வங்கிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், வங்கிச் சேவை, குறிப்பாக சிறிய கடன்கள், பணத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு விரைந்து அனுப்புதல் போன்ற சேவைகள் சாதாரண மக்களுக்கும் ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் சென்றடைய வழி செய்துள்ளார் ரகுராம் ராஜன்.2014-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை, ரிசர்வ் வங்கியின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக அதாவது 1.5 சதவீதம் குறைத்துள்ளார் ரகுராம் ராஜன். இது கணிசமான வட்டி குறைப்பு.

ரகுராம் ராஜன் செய்யத் தவறியது என்ன?

பொருளாதார ரீதியில், அவர் செய்யத் தவறியது, Wilful defaulter--கள் என்று குறிப்பிடக்கூடிய, வசதி இருந்தும் வேண்டும் என்றே வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாத கடன்தாரர்களின் மீதான நடவடிக்கையை, அவர் பொறுப்பேற்ற உடனேயே விரைந்து முடுக்கிவிட்டிருக்க வேண்டும்.அப்படிப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டிருக்க வேண்டும்.வளர்ச்சிக்காக மத்திய அரசு வாதாடுவதும், பணவீக்க கட்டுப்பாட்டுக்காகவும், விலைவாசி கட்டுப்பாட்டுக்காகவும் ரிசர்வ் வங்கி வாதாடுவதும் வாடிக்கை. இது எப்போதுமே நிகழ்வதுதான். அதேநேரம், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதற்காக முயற்சிகளை ரகுராம் ராஜன் மேற்கொண்டிருக்கலாம். இவையெல்லாம் அவரது சறுக்கல் எனலாம்.

புதிய கவர்னர் உர்ஜித் படேல் முன் உள்ள சவால்கள் என்னென்ன?

இதுவரை ஆளுநராகப் பதவி ஏற்றவர்களில் இவர்தான் மிகவும் இளம் வயதுடையவர். 53 வயதேயான இளம் ஆளுநர். ரகுராம் ராஜனுடன் இணைந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.பணவீக்க விகிதத்தை அண்மைக்காலம் வரை மொத்த விலை அடிப்படையில் தான் கணக்கிட்டு வந்தனர். அதனை சில்லறை விலை அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்று பரிந்துரைத்தவர் உர்ஜித் படேல்தான். அந்தப் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு, இப்போது சில்லறை விலை அடிப்படையில்தான் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. பணவீக்கக் கட்டுப்பாட்டுப் பணியில் நீண்ட கால அனுபவம் கொண்டவர் உர்ஜித் படேல். மத்திய அரசு ஊழியர்கள் முதலானவர்களுக்கு ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளின்படி ஊதியம் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் கணிசமான சம்பள உயர்வு காரணமாக பணவீக்கம் உயரக்கூடும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஏற்கெனவே பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கிறது.வரும் காலத்தில் பணவீக்கத்தை 4 சதவீதமாக, அதாவது மத்திய அரசு நிர்ணயித்துள்ள 4 சதவீதம் (2 சதவீதம் கூடவோ அல்லது 2 சதவீதம் குறைவாகவோ இருக்கலாம்) என்கிற விதிமுறையைப் பேணிக் காப்பது இவருக்குள்ள முக்கிய சவால் ஆகும். அவருக்குள்ள உடனடி சவால் என்னவெனில், வெளிநாடுவாழ் இந்தியர்களின் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) F.C.N.R (அயல்நாட்டு கரன்சி) டெபாசிட்கள் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நான்கு மாதங்களில் முதிர்வடைய உள்ளன.இந்தப் பெரும் தொகையை அமெரிக்க டாலரில் டெபாசிட் செய்தவர்களுக்குத் திரும்பத் தர வேண்டும். இதனால் நாட்டில் அமெரிக்க டாலர் கையிருப்பு கணிசமாகக் குறையும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரியும். இந்தச் சவாலை எதிர்கொள்வது உர்ஜித் படேலின் முக்கிய பொறுப்பு.இந்த நிலையை எதிர்கொள்வதற்கு, வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து புதிய எஃப்.சி.என்.ஆர். டெபாசிட் திட்டங்களை தகுந்த மாற்றங்களுடன் வடிவமைத்து அறிவிக்கலாம்.பேலன்ஸ் ஷீட்களை வெளிப்படைத்தன்மை உள்ளதாக ஆக்கும் பணியை ரகுராம் ராஜன் துவக்கினார் என்று பார்த்தோம். அதன் நிறைவு காலம் 31-3-2017. குறிப்பிட்ட காலவரையறைக்குள் இப்பணியை முடிப்பது எளிதல்ல. அதனைச் செய்து முடிப்பதில் தீவிரம் காட்டும் அதேநேரம், காலவரம்பை நீட்டிப்பதற்கும் தயாராக இருத்தல் வேண்டும்.உள்நாட்டு வங்கி டெபாசிட் வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இந்த வளர்ச்சியை முடுக்கிவிட வேண்டும். அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் டெபாசிட் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜி.டி.பி.) 8 சதவீதம் ஆக உயரும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதனை எட்டிப் பிடிப்பதற்கான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதும் உர்ஜித் படேலின் முன் உள்ள சவால்.வங்கிக் கடன்களின் தரத்தை (Quality of Assets)  மேம்படுத்துவதற்கு முந்தைய ஆளுநர் ரகுராம் ராஜன் முயற்சி மேற்கொண்டார். அந்தப் பணி முடிவடையவில்லை. எனவே தற்போது ஆளுநர் உர்ஜித் படேல் தேவையான செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக இருப்பது உணவுப் பண்டங்களின் விலைவாசிதான். அரசின் புள்ளிவிவரங்கள் வரும்வரை காத்திருக்காமல்உணவுப் பணவீக்கத்தின் ஏற்ற இறக்கத்தை கண்காணிக்கும் வகையில், ரிசர்வ் வங்கியே அதற்கான கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.வங்கிகளில் C.R.R எனப்படும் ரொக்கக் கையிருப்பு (டெபாசிட்களின் பாதுகாப்பு கருதி வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து வைக்கும் தொகை தவிர, S.L.R. எனப்படும் வங்கிகள் சட்டபூர்வமாக ரிசர்வ் வங்கியிடம் பாண்டு வடிவில் கொடுத்து வைக்கும் இருப்புத் தொகை) கணிசமாகக் குறைக்கப்படலாம் என்ற கருத்தை பல பொருளாதார வல்லுநர்கள் முன்வைத்துள்ளனர்.பல வளர்ந்த நாடுகளில் இந்தத் திட்டமே இல்லை என்றும், இருக்கும் நாடுகளிலும் இந்தியாவில் இருப்பதுபோல், அதிக அளவில் 21.5 சதவீதம் இல்லை என்றும் ஒரு கருத்து வலம் வருகிறது.கடந்த காலத்தில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை ஒன்றில் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. டெபாசிட்டர்களின் பாதுகாப்புக்கு கடுகளவும் ரிஸ்க் இல்லாத வகையிலும், அதேநேரம் வங்கிகளின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் வகையிலும் எஸ்.எல்.ஆர். எந்த அளவு குறைந்தால், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது என்பது குறித்து புதிய ஆளுநர் ஆய்வு மேற்கொள்வது சரியானதாக இருக்கும்.லண்டன் பல்கலைக்கழகம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், யேல் (அமெரிக்கா) பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பொருளாதாரப் பட்டப் படிப்பும், ஐ.எம்.எஃப்.பிலும் ஐ.டி.எஃப்.சி.யிலும் முறையே பொருளாதார நிபுணராகவும், செயல் இயக்குநராகவும், ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநராக பணிபுரிந்த அனுபவமும் ஆற்றலும் கொண்ட உர்ஜித் படேல் மேற்கூறிய சவால்களை செவ்வனே சமாளிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.குறிப்பாக, மத்திய அரசுடன் இணக்கமான உறவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும், அதேநேரம், ரிசர்வ் வங்கியின் அடிப்படைத் தத்துவங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் நாட்டு மக்கள் அனைவரது எதிர்பார்ப்பாகஉள்ளது.எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பது போகப்போகத்தான் தெரியும்!

Comments