சொந்த வீட்டு கனவை நனவாக்கும் திட்டங்கள்..!

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் திட்டங்கள்..!

சொந்தமாக வீடு கட்ட விரும்பும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை மத்திய அரசு இவ்வருடம் தெரிவித்திருக்கிறது. அதாவது வரக்கூடிய 2022-ம் வருடத்துக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வழங்கும் வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வீட்டுக்கடன் மற்றும் அதற்கான வட்டி உள்ளிட்ட பிற சலுகைகளை யாரெல்லாம் பெற முடியும் என்ற தகவல்களை இங்கே காணலாம்.

கடன் பெறும் தகுதியுள்ளவர்கள்

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள், ஊர்ப் புறங்களில் இருக்கும் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள், குடிசையில் வாழ்பவர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தவர்கள், பழங்குடி வகுப்பை சார்ந்தவர்கள் ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் வீட்டுக்கடனும், அதற்கான வட்டி உள்ளிட்ட மற்ற சலுகைகளையும் பெற இயலும். மேலும் வீட்டுக் கடன் பெற்று வீடு கட்ட விரும்புபவர்களது வயது 70-க்கும் மிகாமல் இருக்கவேண்டும். அவர்களுக்கு சொந்தமாக வேறு வீடுகள் இருப்பதும் கூடாது.

வீட்டு விரிவாக்கம் செய்யலாம்

மேலே குறிப்பிட்டவர் களுக்கு சொந்தமாக வீடு இருக்கும்பட்சத்தில் அதை விரிவாக்கம் செய்வதற்கும் சலுகை வட்டியில் வீட்டுக்கடன் பெறலாம். அல்லது வீட்டின் ஏதாவது ஒரு அறையை மட்டும் கட்டமைப்பதாக இருந்தாலும் கடன் பெறலாம். கட்டுனரை வைத்து கட்டப்படும் வீடாக இருந்தாலும், சொந்தமாக வீடு கட்டுவதாக இருந்தாலும், அல்லது கட்டிய வீட்டை வாங்குவதாக இருந்தாலும் அவர்களுக்கு சலுகை வட்டியில் வீட்டுக்கடன் கிடைக்கும்.

கட்டப்படும் வீட்டின் அளவுகள்

30 சதுர மீட்டர் அளவு அதாவது 323 சதுர அடி அளவுள்ள இடத்திற்கான கடன் பெற வேண்டுமானால் ஆண்டு வருமானம் வருடத்திற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒருவேளை வீடு 60 சதுர மீட்டர் அதாவது 646 சதுர அடியாக இருந்தால் ஆண்டு வருமானம் ரூ. 6லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட சதுர அடி கணக்குகள் யாவும் 'கார்ப்பெட் ஏரியா' என்று சொல்லப்படும் வீட்டின் உள் அளவை குறிப்பிடக்கூடியவையாகும்.

வட்டி விகிதம்

பொதுவாக வீட்டு கடனுக்கான வட்டி என்பது 10 சதவிகிதம் அல்லது அதற்கும் மேலாக இருப்பதுதான் வழக்கம். இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற்று வீடு கட்டுபவர்கள் செலுத்த வேண்டிய வட்டியானது 6.5 சதவிகிதம் மட்டுமே. அதாவது 15 வருடங்களுக்கு ரூ. 6லட்சம் கடன் தொகையை ஒருவர் பெறுகிறார் என்று வைத்துக் கொண்டால், கடனுக்கான வட்டி விகிதமாக மாதம் ரூ. 4,050 மட்டும் செலுத்தி வந்தால் போதுமானது. அதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் தவணைத்தொகையில் ரூ. 2,000 வரை நமக்கு மீதமாகும். மொத்தத்தில் அவருக்கு கிடைக்கும் தள்ளுபடி தொகையானது ரூ. 2,20,187 ஆகும்.

ஊக்கத் தொகை

பழங்குடியினர், பெண்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர் ஆகியோருக்கு இத்திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஊக்கத் தொகையையும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதன் மூலம் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவினர் ரூ.1 லட்சம் முதல் ரூ.2.3 லட்சம் வரை ஊக்கத் தொகை பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

சமர்ப்பிக்கவேண்டிய சான்றுகள்

சொந்த இடம் என்பதற்கான சான்று, கட்டுனர் மூலம் பெறப்பட்ட வீடு என்றால் அதற்கான சான்று மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

Comments