‘மாடுலர் கிச்சன்’ அமைக்கும் முறை

'மாடுலர் கிச்சன்' அமைக்கும் முறை

உள் அலங்காரத்தின் சாத்தியங்கள் வீட்டு வரவேற்பறையோடு முடிந்துவிடவில்லை. சமையலறையிலும் உள் அலங்காரம் சாத்தியமே. நவீன வடிவமைப்புகளோடு தயாரிக்கப்படும் 'மாடுலர் கிச்சன்' பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கிறது.

விதவிதமான வடிவங்கள்

மாடுலர் கிச்சன் அமைப்புகள் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை சமையலறையின் பரப்பளவுக்கு ஏற்றவகையிலும் விருப்பமான வடிவமைப்பிலும் தேர்வு செய்யலாம். இவை நீளமான செவ்வக வடிவத்தில் மட்டுமின்றி எல் வடிவத்திலும் யு வடிவத்திலும்கூட கிடைக்கின்றன. எனவே அறையின் வடிவத்திற்கு தகுந்தபடி மாடுலர் கிச்சனை வாங்கமுடியும்.

சமையலறை பொருட்களை வகைபிரித்து அடுக்குவதன் மூலமாக குறைவான இடத்தில் அதிக பொருட்களை அடுக்க முடியும். எனவே இடத்தை மிச்சப்படுத்த முடியும். நகர வாழ்க்கையில் சமையறைக்காக அதிக இடத்தை ஒதுக்க முடியாதவர்கள் மாடுலர் கிச்சனை பயன்படுத்தி இடப்பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.

எளிதில் இடம் மாற்றலாம்

வழக்கமான சமையலறை வடிவமைப்புகள் நிலையானதாக இருக்கும். அவற்றை இடம் மாற்ற முடியாது. ஆனால் மாடுலர் கிச்சனை பகுதி பகுதியாக பிரிக்கவும் மீண்டும் இணைக்கவும் முடியும். இதனால் அடிக்கடி பணியிடம் மாறுபவர்களும் வாடகை வீட்டில் வசிப்பவர்களும் மாடுலர் கிச்சன்களை பயன்படுத்தலாம். பகுதி பகுதியாக பிரித்தெடுக்க முடியும் என்பதால் ஏதாவது ஒரு பகுதி பழுதடைந்தால் அதை பிரித்தெடுத்து எளிதாக பழுது நீக்கி மீண்டும் பொருத்தலாம்.

இந்த அமைப்பில் மளிகைப் பொருட்கள், பருப்பு வகைகள் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான அடுக்குகள் இருக்கின்றன. மேலும் குப்பைகளை போடுவதற்கான தொட்டியும் இணைக்கப்பட்டு உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு எளிதானது.

பொருட்களை அடுக்கும் முறை

சமையறையில் பொருட் களை சரியாக அடுக்கு வதன் மூலமாக பெருமளவில் சிரமங்களை தவிர்க்க முடியும்.

அடிக்கடி பயன்படுத்தும் எடை குறைவான பொருட்களை தோள் மட்டத்தின் உயரத்தில் அடுக்கி வைக்க வேண்டும். தினந்தோறும் பயன்படுத்த வேண்டிய 'மிக்ஸி ஜார்' போன்ற சற்று எடை அதிகமான பொருட்களை இடுப்பளவு உயரத்தில் வைக்க வேண்டும். இதன்மூலம் குனிந்து அவற்றை தூக்குவதை தவிர்க்கலாம்.

எப்போதாவது பயன்படுத்தும் எடை அதிகமான பொருட்களை அலமாரியின் அடியில் உள்ள அடுக்கில் வைக்கலாம். மேலும் அதிக அளவில் பயன்படுத்தப்படாத பலவகையான பொருட்களையும் அலமாரியின் மேல் அடுக்கில் வைக்கலாம்.

Comments