பாரா ஒலிம்பிக் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை

பாரா ஒலிம்பிக் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை

ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

தீபா மாலிக்

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் அதிகபட்சமாக 4.61 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். பக்ரைன் வீராங்கனை பாத்திமா நிதாம் 4.76 மீட்டர் தூரம் எறிந்து தங்கமும், கிரீஸ் வீராங்கனை டிமிட்ரா கோரோகிதா 4.28 மீட்டர் தூரம் வீசி வெண்கலமும் வென்றனர்.

பாரா ஒலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனையை 45 வயதான தீபா மாலிக் படைத்துள்ளார்.

இடுப்புக்கு கீழ் ஊனம்

அரியானா மாநிலத்தை சேர்ந்த தீபா மாலிக் ராணுவ அதிகாரியின் மனைவி ஆவார். இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.17 ஆண்டுகளுக்கு முன்பு முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை நடந்த போது, இடுப்புக்கு கீழே உடல் உறுப்புகள் செயல் இழந்தன. அதை சரி செய்வதற்கு 31 அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இடுப்புக்கும், தொடைக்கும் இடையே மட்டும் 183 தையல்கள் போடப்பட்டன. இவ்வளவு இன்னல்களை சந்தித்த போதிலும் அவரால் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. நடந்து செல்வது இனி சாத்தியமில்லை என்ற நிலையில் சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.

உடல் ஊனமானாலும், மன உறுதி தளராமல் விளையாட்டில் கவனம் செலுத்தினார். சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு குண்டு வீசும் அவர் ஏற்கனவே 2011-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருக்கிறார். மத்திய அரசின் அர்ஜூனா விருதும் பெற்றுள்ளார். வருகிற 30-ந்தேதி பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு பிறந்த நாள் பரிசாக இந்த பதக்கம் கிட்டியது.

ரூ.4 கோடி பரிசு

அரியானா மாநில விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தின்படி இது போன்று சாதிப்பவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி தீபா மாலிக் ரூ.4 கோடி பரிசை பெற உள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 'தேசத்தை பெருமைப்பட வைத்து விட்டீர்கள்' என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதே போல் சச்சின் தெண்டுல்கர் உள்பட ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கமும், அதே பிரிவில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் வெண்கலமும் வென்று இருந்தனர்.

பாரா ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் 11-வது பதக்கமாக இது அமைந்தது.

Comments