விளக்காக விளங்க வேண்டும்!

விளக்காக விளங்க வேண்டும்!

உலகம் இத்துணை முன்னேற்றம் அடைந்துள்ளது மேலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முழுக்காரணர் நல்ல ஆசிரியர்களே. தாங்கள் பெற்றிருக்கும் அறிவுச் செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு வாரி வழங்கும் விதமாக ஒவ்வொரு நல்லாசிரியரும் நல்ல மாணவரை உருவாக்குகிறார்.பண்டைய காலத்தில் ஆசிரியர்தம் வாழ்க்கை எடுத்துக்காட்டு வாழ்க்கையாக இலங்கியது. ஆசிரியர் வீட்டிலேயே மாணவர்கள் தங்கினார்கள். அவர்கள் வாழும் வாழ்க்கையே மாணவர்களுக்கு ஒரு பாடமாய் அமைந்தது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை முறை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்குக் கற்பித்தனர். உண்மையான வழிகாட்டியாக விளங்கினர். இந்த நிலை பின்னாளில் குறைந்தது. குறிப்பாக, ஆசிரியத் தொண்டு தொழிலாக மாறியது. தொண்டு தொழிலாக மாறியவுடன் கல்வி, அறிவு முதலாயின வணிகப் பொருள்கள் ஆகிவிட்டன. என்றாலும் இந்தச் சூழலிலும் குறிக்கோள் ஆசிரியர் சிலர் தன்னிடம் பயிலும் மாணாக்கர்களை அறிவு வளத்தில் உயர்த்துவதில் அக்கறை உடையவர்களாக உள்ளனர்.ஒரு நல்லாசிரியர், தன்னை எடுத்துக்காட்டு மாந்தராக ஆக்கிக் கொள்ள வேண்டும். மாணவர் காலந்தவறாமையைக் கடைபிடிக்க வேண்டும் என்றால் இவர் காலந்தவறாது வகுப்புக்குச் செல்பவராக இருத்தல் வேண்டும். நன்கு தயாரித்து வகுப்பை எடுத்தல் வேண்டும். மாணாக்கர்களோடு நன்கு பழகவேண்டும். சிலர் வகுப்பறையோடு அனைத்தையும் முடித்துக் கொள்வர். சில நல்லாசிரியர்கள் வகுப்பு முடிந்த பின்பும் மாணாக்கர்களோடு உரையாடுவது, நலம் விசாரிப்பது, பாராட்டுவது முதலான இனிய பணிகளைத் தொடருவர்.அவ்வாறு வகுப்புக்கு வெளியேயும் அன்பு பாராட்டும் ஆசிரியர்களையே மாணவர்கள் மிகுதியாக விரும்புகின்றனர். இன்னும் சில ஆசிரியர் தம் மாணவரின் பொருளாதார நிலை கண்டு உதவுவர். தம் புத்தகத்தை வழங்கி வாசிக்கச் செய்வர். சிலர் புதிய புத்தகமே வாங்கிக் கொடுப்பர்.ஆசிரியர் அறிவால் உயர்ந்துகொண்டே இருக்கவேண்டும். அதற்கு ஒரே வழி, தொடர் வாசிப்பு. ஆசிரியர், புதிய நூல்களைப் படிப்பது, பத்திரிகைகளைப் படிப்பது, நூலகத்திற்குச் செல்வது முதலாய பழக்கங்களை உடையவராக இருத்தல் வேண்டும்.அறிவுக்கு உரியவராகவும் அன்புக்கு உரியவராகவும் விளங்குபவரே நல்லாசிரியர். அறிவு மாணவரைக் கேட்க வைக்கும். ஆசிரியர் காட்டும் அன்பு மாணவரை ஈர்க்க வைக்கும். ஒன்றைச் சார்ந்துதான் மற்றொன்று மேலும் மேலும் துலக்கமுறும்.நம்மைக் கவர்ந்த ஆசிரியர் அனைவரிடமும் இந்த இரண்டும் குவிந்திருக்கும். எனவேதான் ஆசிரியரை நம் முன்னோர் தந்தைக்கு நிகராக போற்றினார்கள்.கண்டிப்பு மட்டும் இருந்தால் தளபதி நிலை. கனிவு இருந்தால் தந்தை நிலை. இரண்டும் சேர்ந்திருந்தால் ஆசிரியர் நிலை.கல்வி என்பதை அறிவு ஊட்டுதல், அறிவைப் பெருக்குதல் என்று நாம் அர்த்தப்படுத்திக் கொண்டோம். அது கல்வியின் சிறு பகுதியே தவிர, முழுமை அன்று. சரியான கல்வி என்பது மாணவனை உற்சாகப்படுத்துவதும், உயரவேண்டும் என்ற தாகத்தை அவனுள்ளே விதைப்பதும்தான். இதை "மோட்டிவேசன்' என்பர்.சங்க காலத்தில் ஆசிரியர் என்ற சொல்லை இயற்பெயருக்கு முன்னால் இணைத்துச் சிறப்பித்தனர்.ஆசிரியன் பெருங்கண்ணன் (குறுந். 239), மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் (அகம் 43), மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் (அகம் 172), மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் (நற். 322).அன்று ஆசிரியர் கற்றல், கற்பித்தல், கவிதை இயற்றல் என்று செயல்பட்டுள்ளனர். குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியரைப் பாலாசிரியர் என்று குறிப் பிட்டுள்ளனர்.ஆசிரியர் இலக்கணத்தை நன்னூல் எடுத்துரைக்கிறது:மேன்மையான குணமும், மேலாகிய கருணையும், கடவுள் வழிபாடும், பல நூல்களில் பழகிய தெளிந்த அறிவும், நற்பொருளை மாணாக்கனுக்கு எளிதாக உணர்த்தும் உரை வன்மையும், நிலத்தையும் மலையையும் துலாக்கோலையும் பூவையும் ஒத்திருக்கின்ற மேன்மையும், உலக நடையறியும், அறிவோடு உயர்ந்த குணமும், பிறவும் அமைந்தவரே நல்ஆசிரியராவார்.நம் குருகுலக் கல்வி முறையும் ஆசிரிய மாணவர் இணைந்து கற்றலைக் கொண்டது. ஆசிரியரோடு சீடர்கள் ஒரே ஆசிரம வளாகத்தில் ஆண்டுக்கணக்கில் தங்கி இருந்து கல்வி கற்பது அக்கால வழக்கம். மாணவர்கள் ஆசிரியருக்குத் தேவையான சேவைகளைச் செய்து ஆசிரியரின் நல்ல பழக்கங்களை நேரில் பார்ப்பர், கற்றுக்கொள்வர், பின்பற்றுவர்.துரோணரிடம் கல்வி கற்ற பாண்டவர்கள், வசிட்டரிடம் கல்வி கற்ற இராம லட்சுமணன், உலக ஞானி புத்தருடன் சேர்ந்து வாழ்ந்து ஞானக் கருவூலத்தைச் செவிவாயிலாக பெற்ற சீடர்கள், ஏசுவின் போதனைகளை உடனிருந்து அறிந்த பன்னிரு சீடர்கள், நபிகள் பெருமானின் அறிவுரைகளை உடனிருந்து உணர்ந்த பலர் இருந்தமையால் பெரியோரின் கருத்துகள் அடுத்தடுத்த மக்களுக்குப் போய்ச் சேர்ந்தன.அவ்வையாருக்குச் சீடர்கள் என்போரும் குருகுலம் என்பதும் இல்லை. ஆனால் அவ்வை கூறிய பொன் மொழிகள் மக்கள் காதில் கேட்டு காலம் காலமாகச் சொல்லியும் ஏட்டில் எழுதியும் வந்தமையால் அவ்வையார் மொழிகள் என்றும் போற்றப் பெறுகின்றன.சங்க காலத்தில் அரசரோடு இருந்த புலவர்கள் ஏறக்குறைய குரு சீடர் கல்வி முறையில் வாழ்ந்தவர்கள். சங்ககால அரசர்கள் குருவைப் போன்ற புலவர்களைப் பக்கத்தில் வைத்து வாழ்வியலை உணர்ந்திருந்தனர். அரசனை நல்வழிப்படுத்திப் பண்பட்டவனாக ஆக்கிய பெருமை ஆசிரியரைப் போன்ற புலவர்களுக்கு உண்டு. உலகியல் கல்வி, உடலியல் கல்வி, ஞானக் கல்வி இம்மூன்றையும் ஆசிரியரிடம் மாணவர் பெற்றுக் கொண்டனர். உலகியல் கல்வியையும் பண்புக் கல்வியையும் சங்கப் புலவர்களாம் ஆசிரியர்கள் மன்னனுக்கும் மக்களுக்கும் வழங்கினர்.மகாபாரதம், இராமாயணக் காலத்தில் உடல் கல்வியாம் போர்க் கல்வியை ஆசிரியர் மாணவர்க்கு வழங்கினர். அர்ச்சுனனை வில்வித்தை அறிந்தவனாக ஆக்கியவர் நல்லாசிரியத் துரோணாச்சாரி. கல்விக்காக மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ்ப் பாடம் கேட்டுத் தமிழ்த்தாத்தா என விளங்கியவர் உ.வே. சாமிநாதையர்.அண்ணல் காந்தியும் வினோபாபாவேயும் ஜாகீர் உசேனும் குருகுலம் சார்ந்த ஆதாரக் கல்வி முறையைத் தோற்றுவித்து நடத்தினார்கள். ஆனால் அவை தொடர்ந்து போற்றப் பெறவில்லை. நோபல் பரிசு பெற்ற வங்கக் கவி தாகூர் சாந்திநிகேதனில் குருகுலக் கல்வி முறையைத் தோற்றுவித்தார்.சாக்ரடீஸ், பிளேட்டோ, அவரின்மாணவர் அரிஸ்டாட்டில், அவரின் மாணவர் அலெக்சாண்டர் என்று ஆசிரியப் பரம்பரை அமைந்திருந்தது. அரிஸ்டாட்டிலின் ஆசிரியர் பிளேட்டோ மாணவரைப் பக்கத்தில் வைத்து, தான் நடக்கும் போதும், உண்ணும் போதும் பாடம் நடத்திக் கொண்டே இருப்பாராம்.அதேபோல் மாணவர் அலெக்சாண்டர் திண்மையும் குறிக்கோளும் அடையக் காரணமாக இருந்தவர் ஆசிரியர் அரிஸ்டாட்டில். ஆசிரியர் கையெழுத்துப் போட்ட "இலியட்' நூலைத் தம் படுக்கையிலேயே வைத்திருந்தாராம் அலெக்சாண்டர்.சாக்ரடீஸ் தம் மாணவர்களைக் கூடவே அழைத்துச் செல்வாராம். வீதியில், நடைபாதையில், தேநீர்க்கடையில் அவரைச் சுற்றியே மாணவர்கள் இருப்பராம். கேள்வி - பதிலாக அவரின் ஆசிரியர் பாணி இருக்குமாம். மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேட்பது ஆசிரியரின் கடனாகக் கொள்வார்.சீனத்தில் கன்ஃபூசியஸ் புகழ் பெற்றவர். அவர் அரசர்களுக்கே ஆசிரியராக இருந்தவர்.தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த முனைவர் வ.அய். சுப்பிரமணியம் தாம் பணிபுரியும் நிறுவனங்களில் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை பணிபுரியும் முறையைக் கடைபிடித்தார். ஆசிரியர் மாணவர்க்குச் சொல்லாமல் சொல்லித் தரும் பாடம் இது.நேரம் காலம் பார்க்காமல் ஆசிரியர் உழைக்கவேண்டும் என்று நடந்து காட்டியவர் அவர். மாணவர்க்கு கல்விக்கட்டண உதவி செய்யத் தம் பணத்தைக் கட்டியவர். சில மாணவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கவும் செய்தவர்.பணி செய்பவருக்கு வேலைக்குரிய கருவிகள் முக்கியம். குழி தோண்டுபவனுக்குக் கடப்பாறை, மண்வெட்டி முக்கியம். அதே போல் ஆசிரியருக்குக் கருவி புத்தகங்கள். ஆசிரியரின் சம்பளத்தில் சிறு தொகைக்குப் புத்தகங்களாகவே தந்துவிடலாம்.நிகழ்கால, வருங்காலச் சமுதாயம் ஆசிரியர் கையில்தான் உள்ளது. ஊதிய மனப்பான்மை கடந்து ஊழிய மனப்பான்மை ஊறும்போதுதான் நல்மாணாக்கர் உருவாவர்.ஒரு சிறந்த ஆசிரியர் நன்றாகப் பாடம் நடத்த வேண்டும் என்பதனினும் மேலாக அவரே மாணவர்க்குப் பாடமாக இருத்தல் வேண்டும்.விளக்கு என்று எழுத்துகளால் உச்சரிப்பதை விட விளக்காகவே அவர் விளங்க வேண்டும் துலங்க வேண்டும்!

Comments