இருமலை போக்கும் வெற்றிலை

இருமலை போக்கும் வெற்றிலை

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று இருமலை குறித்து பார்க்கலாம். இருமலை நாம் ஒரு தனிப்பட்ட ஒன்றாக கருதக் கூடாது. அது உடல் நலக் கோளாறின் வேறொன்றின் அடையாளமாகவே பார்க்க வேண்டும். இருமலைப் பொறுத்தஅளவில் சளி போன்றவற்றை வெளியேற்றுவதற்காக உடல் மேற்கொள்ளும் முயற்சியாக காணப்படுகிறது. இருமலில் குத்திருமல், வறட்டு இருமல், சளி இருமல் என பல்வேறு வகையாக காணப்படுகிறது. காசநோய் தாக்குதல் காரணமாகவும் இடைவிடாத இருமல் இருப்பதை காண முடிகிறது.

அடிநாய்டு எனப்படும் தொண்டை வீக்கம், அதாவது சுவாச பாதையில் சளிக்கட்டுவதால் இருமல் தோன்றுகிறது. இவ்வாறு பல காரணங்களால் இருமல் வருகிறது. நோய் தொற்றினாலும் இருமல் வர வாய்ப்புள்ளது. சளியுடன் கூடிய இருமலை போக்குவதற்கு வெற்றிலையை பயன்படுத்தி எளிமையான மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள். வெற்றிலையை அரைத்து பசைபோல எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். திப்பிலி பொடி மற்றும் தேன். அரைத்து வைத்துள்ள வெற்றிலை பசையை பிழிந்து சிறிதளவு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை 10 மிலி சேர்க்க வேண்டும். இதனுடன் விரல்கடை அளவுக்கு திப்பிலி பொடி சேர்க்க வேண்டும்.  அரை தேக்கரண்டி தேன் சேர்க்க வேண்டும். இதை காலை மாலை இருவேளை எடுத்துக் கொள்வதன் மூலம் கபம் வெளியேறும். இருமலும் சரியாகும். வெற்றிலை சளியை கரைத்து வெளியில் தள்ளக் கூடியதாகும். வலியை போக்கக் கூடியதாகவும், நுண் கிருமிகளை அழிக்கக் கூடியதாகவும் வெற்றிலை பயன்படுகிறது. அதே போல் வல்லாரை, ஆடாதொடை ஆகியவற்றை பயன்படுத்தியும் இருமலுக்கான மருந்தை தயார் செய்யலாம்.

வல்லாரை மூளைக்கு பலம் சேர்க்கக் கூடியது. இதுவும் சளியை கரைத்து வெளியில் தள்ளுகிறது. ஆடாதொடையுடன் வல்லாரை, திப்பிலி வசம்பு ேசர்த்து சாப்பிடும் போது இருமல் இல்லாமல் போகும். இதற்கு தேவையான பொருட்கள் வல்லாரை, ஆடாதொடை இலைப் பொடி, திப்பிலி பொடி வசம்பு பொடி, தேன். வல்லாரை இலைகளை 10 முதல் 15 எண்ணிக்கை வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.  அரை டீஸ்பூன் ஆடாதொடை இலைப்பொடியை சேர்க்க வேண்டும். கால் டீஸ்பூன் அளவு திப்பிலி பொடி சேர்க்க வேண்டும். கால் டீஸ்பூன் அளவு வசம்பு பொடி சேர்க்க வேண்டும்.

இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு தேவையான நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். இந்த தேனீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தேன் சேர்க்க வேண்டும். 100 மிலி அளவுக்கு காலை மாலை ஆகிய இருவேளையும்  எடுத்துக் கொள்ளும் போது இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம். இது போல் அன்றாடம் கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு நாம் இருமலை போக்குவதற்கான மருந்தை தயார் செய்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வோம்.

Comments