பித்தம் போக்கும் கிச்சிலிப்பழம்

பித்தம் போக்கும் கிச்சிலிப்பழம்

 "குணங்கள் பலவிதமாய்க் கொள்ளாதே நெஞ்சே

வணங்குங் குணமாக வந்துவணங்கியே

மண்டலமெ லாங்கடந்து மாவீட்டை நீதிறந்து

கண்டெடுத்துக் கொள்வாய் கனம்"

கிச்சிலியானது நீள் கோளவடிவில் பசுமையான இலைகள் தூய்மையான வெண்மை நிற பூக்கள் கொண்ட சிறுமரமாகும். பார்ப்பதற்கு எலுமிச்சை செடி போன்று காணப்படும். இதன் பழங்கள் நெல்லிக்காய் அளவுதான் இருக்கும். இதில் நாரத்தை, துருஞ்சிநாரத்தை, கடாரநாரத்தை, பப்பளிமாசு, கமலா, சாத்தக்குடி என பல பிரிவுகள் உண்டு. இதில் குட்டிகிச்சிலி என்ற வகையுமுண்டு. சிலவகை புளிப்புடனும். சிலவகை இனிப்புடனும் இருக்கும். தோலை கமலாப்பழம் போன்று எளிதில் உறிக்கமுடியும். இதன் பூக்கள், காய்கள்,பழங்கள், பழத்தோல் அனைத்தும் மருத்துவகுணமுடையது.  பூக்களிலில் இருந்து தீநீர் வடித்து கொள்ளவும். அதில் உடலின் தன்மை அறிந்து 10 மிலி முதல் 25 மிலி வரை குடித்து வந்தால் பித்தத்தினால் உண்டான உடல் சூடு தணியும். உடல் குளிர்ச்சி பெறும். உடலில் உண்டான வலிகள் நீங்கும்.நன்கு பழுத்த பழத்தை விருப்பமுடன் சாப்பிட பித்தத்தினால் உண்டான அனைத்து நோய்களும் போகும். இதன் பிஞ்சை ஊறுகாய் செய்து சாப்பிட வாந்தி, சுவையறியாமை நீங்கும். உணவில் விருப்பத்தை உண்டாக்கும். வாய்க்குமட்டல் உள்ளவர்கள் இனிப்பு கிச்சிலிபழத்தை வாயிலிட்டு மென்று சாற்றை மெதுவாக விழுங்கினால் வாய்க்குமட்டல் நீங்கும். கோடைக்காலத்தில் தொடர் தண்ணீர் தாகம் உடையவர்கள் கிச்சிலியின் சாற்றை பிழிந்து நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் தாகம் அடங்கும். புளிப்பு பழம் இருமலை உண்டாக்கும் குணம் கொண்டது. இதனை இருமல் உள்ளபோது சாப்பிட்டால் மேலும் இருமலை அதிகரிக்கும். இதன் காய்களை பறித்து உப்பிட்டு வேகவைத்து ஊறுகாய் செய்து சாப்பிட உடலில் உண்டாகும் பல்வேறு வகையான பித்தநோய்களை போக்கும்.பெரும் கிச்சிலியின் பழச்சாற்றை அனைவரும் விரும்பி குடிப்பர். நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு  அதிலிருந்து மீண்டவர்களின் ரத்தம் பல்வேறு மருந்துகளால் கெட்டு இருக்கும். இவர்கள் பகல் உணவுக்கு முன்பாக கிச்சிலியின் சாற்றை 300மிலி அளவில் குடித்து வந்தால் ரத்தம் சுத்தி அடையும். காலை உணவுக்கு பின் பழச்சாற்றை 200மிலி அளவு குடித்து வந்தால் நல்ல ஜீரணசக்தியை கொடுக்கும். இருமல், நீரிழிவு, மார்பு நோய் ஈரல்நோய் முதலியவற்றால் பாதிப்படைந்தோர்கள், மருத்துவத்திற்கு பின்பு குணமடைந்தவுடன் இதன் சாற்றை காலை மாலை குடித்து வந்தால் நோய் பாதிப்பு முற்றிலும் விலகி நலமுடன் வாழலாம்.சிறு குழந்தைகள் வயிற்றுகோளாறுகளால் துன்பப்பட்டால்  பழசாற்றில் பால் சேர்த்து குடித்துவர வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். குழந்தைகளுக்கு உண்டாகும் சோகை, கணை, உட்சூடு, மாந்தம் முதலிய  நோய்களுக்கு கிச்சிலிப்பாரசத்துடன் திராட்சைப்பழரசம் சமஅளவு கலந்து நாள்தோறும் காலை மாலை 30 மிலி முதல் 60மிலி அளவு வரை கொடுத்து வந்தால் அனைத்து நோய்களும் நீங்கும். தொடர்ந்து கொடுத்தால் உடலுக்கு வலிமையை தரும். தொடர் வாந்தி, கழிச்சல் உள்ளவர்களுக்கு புளிப்புள்ள கிச்சிலிசாற்றுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து குடித்தால் வாந்தியும் கழிச்சலும் குணமாகும். பசி இல்லாமல் இருப்பவர்கள் இந்த பழத்தின் தோலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் 1 அல்லது 2 தளிகள் சர்க்கரையில் கலந்து சாப்பிட நல்ல பசியை கொடுக்கும்.இந்த எண்ணெய்யை பித்த அதிகரிப்பால் உடலில் ஏற்படும் வலிகளுக்கு தடவ வலி நீங்கும். இதைத்தான் என்கின்றார் தேரையர். கிச்சிலி நம்நாட்டில் விளையும் தன்மை கொண்டதால் பழத்தை முழுமையாக ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களை கண்டறிந்தார்கள். தாங்கள் அறிந்தவற்றை  வருங்கால மனித குலம் பயன்படுத்தி வாழ வழியும் சொல்லி சென்றார்கள். நமது முன்னோர்கள் காட்டிய வழியில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

Comments