செவிலியர் பட்டயப் படிப்பு விண்ணப்பம்: மாணவிகள் ஆர்வம்

செவிலியர் பட்டயப் படிப்பு விண்ணப்பம்: மாணவிகள் ஆர்வம்

செவிலியர் பட்டயப் படிப்புக்கான (டிப்ளமோ நர்சிங்) விண்ணப்பங்கள் விநியோகம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமைத் தொடங்கியது. விண்ணப்பங்களை மாணவிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில், கலந்தாய்வு முறையில் ஒதுக்கப்படும் இடங்களுக்கு, மூன்றரை ஆண்டு செவிலியர் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. இந்தப் படிப்புக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செவ்வாய்க்கிழமைத் தொடங்கியது. கல்லூரி முதல்வர் பி.வசந்தாமணி தொடங்கிவைத்தார். நிலைய மருத்துவ அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.விண்ணப்பங்களை பொதுப் பிரிவினர் ரூ.300-க்கான வங்கி வரைவோலை வழங்கியும், எஸ்சி,எஸ்டி பிரிவினர் உரிய சான்றிதழ் நகல் வழங்கி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அலுவலக நாள்களில், வரும் செப்.15-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். செப்.16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள், செயலர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதற்காக முதல் கட்டமாக தற்போது 400 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்ப விநியோகப் பணிகளை நிர்வாக அலுவலர்கள் கவிஞர் சிங்காரம், ஆனந்தஜோதி, இளநிலை அலுவலர்கள் மதுமதி, கண்காணிப்பாளர்கள் சுஜாதா, சண்முகசுந்தரம், அரிதாஸ், ரபிஏசுதாஸ் உள்ளிட்டோர் மேற்கொண்டுள்ளனர்.

Comments