மனித முகத்தோடு விநாயகர் அருள்பாளிக்கும் மயிலாடுதுறை திலதைப்பதி கோவில்

மனித முகத்தோடு விநாயகர் அருள்பாளிக்கும் மயிலாடுதுறை திலதைப்பதி கோவில்

உருவத்தில் யானை போன்ற உடல்வாகுடன் இருக்கும் விநாயகர், தொடக்கத்தில் மனித முகத்துடன் தான் இருந்தார். அதை காட்சிப்படுத்தும் ஆலயம் பற்றியும், கதையை பற்றியும் பார்ப்போம்.கஜமுகாசுரன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவனது கடும் தவத்தின் பயனாக அவன் முன்பாக தோன்றினார் பிரம்மதேவர். 'கஜமுகா! உன்னுடைய தவத்தினால் மகிழ்ந்தேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்' என்றார். அவனோ பேராசை காரணமாக தான் எப்போதும் சிரஞ்சீவியாக இருக்கும் வரம் தந்தருள வேண்டும் என்று பிரம்மாவை வேண்டினான்.பிரம்மாவோ, 'உலகில் பிறந்த அனைவருக்கும் அழிவு என்பது உண்டு. ஆகையால் இயற்கையைத் தாண்டி எதையும் செய்ய இயலாது. வேறு ஏதாவது வரம் கேள்' என்றார். சற்று சிந்தித்த கஜமுகாசுரன், 'ஆண்- பெண் கலப்பு இல்லாமல் பிறந்த ஒருவனால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும்' என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை அப்படியே தந்தார் பிரம்மதேவர். தான் பெற்ற வரத்தால் இறப்பு என்பதே தனக்கு இல்லை என்று நினைத்த கஜமுகாசுரன், உலக உயிர்கள், தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான். இதனால் தேவர்களும், முனிவர்களும், தங்களைக் காத்தருளும்படி அன்னை பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அன்னையும், சிவபெருமானுடன் பேசி இதற்கு தீர்வு செய்வதாக உறுதியளித்தார்.மயிலாடுதுறை - திருவாரூர் சாலையை ஒட்டி ஓடும் நதியில் இறைவன் மந்தாரவணேஸ்வரர் என்ற பெயருடனும், அம்பாள் சுவர்ணவல்லி என்ற பெயருடனும் வீற்றிருந்தனர். இத்தலத்தில் தேவர்களும், கணங்களும், அம்பாளும் வந்து நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். ஒரு நாள் அம்பாள் நீராடி இறைவனை வழிபட நினைத்தார். நீராடச் செல்லும் முன்பாக தான் வரும் வரை காவலாக இருக்க ஒருவரை நியமிக்க எண்ணினார். நீராடுவதற்காக எடுத்துச் சென்ற மஞ்சளில், அழகான இளம் பிராயத்து பிள்ளை ஒன்றை உருவாக்கினார்.பின்னர் அந்த சிறு பிள்ளையிடம், 'மங்கள மகனே! யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்காதே' எனக் கட்டளையிட்டு நீராடச் சென்றார். அந்த நேரம் பார்த்து உலக உலாவை முடித்துக் கொண்டு வந்தார் சிவபெருமான். வாசலில் அமர்ந்திருந்த குழந்தையைப் பார்த்ததும் அவர் அனைத்தையும் உணர்ந்து கொண்டார். கஜமுகாசுரனை அழிக்க சிறந்த பிறவி என முடிவு செய்தார். வாசலில் அமர்ந்திருந்த பாலகனை கவனிக்காதது போல, உள்ளே நுழைய முயன்றார். ஆனால் அந்த பாலகனோ, 'யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை' என்று கூறி சிவபெருமானைத் தடுத்தான்.இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஈசனுக்கு கோபம் உண்டானது. சினம் மேலோங்க பாலகனின் சிரத்தை துண்டித்தார். பிள்ளையின் சத்தம் கேட்டு ஓடி வந்தார் பார்வதிதேவி. அங்கு தனது பிள்ளை தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு, அந்தக் குழந்தையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார்.சிவனும் தன்னுடைய தவறை உணர்ந்தவர் போல் அந்த பாலகனுக்கு உயிர் தர முன் வந்தார். சிவகணங்களை அழைத்து, 'உலகில் இயற்கைக்கு மாறாக வடபுறம் தலை வைத்திருக்கும் உயிர்களில், உயர்ந்தது எதுவோ அதன் தலையைக் கொண்டுவந்து வையுங்கள்' என்றார். வடக்கில் தலை சாய்த்து படுத்திருந்த யானையின் தலை கொண்டுவந்து பொருத்தப்பட்டு, பாலகனுக்கு உயிர் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த பாலகனுக்கு கஜ முகாசுரனின் வரலாறும், அவனது தவமும், பெற்ற வரமும் விளக்கிக் கூறப்பட்டது. அதைக் கேட்டு அனைவரிடமும் ஆசி பெற்றுச் சென்று கஜமுகாசுரனுடன் கடும்போர் புரிந்து அவனை அழித்து வெற்றி பெற்றுத் திரும்பினார் விநாயகப்பெருமான்.மகிழ்ந்த சிவனும், உமையும் விநாயகருக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பி அவரது விருப்பத்தையும் கேட்டனர். 'எப்போதும் பெற்றோரான நீங்கள் வசிக்கும் இடத்தில் உங்களோடு நானும் இருக்க வேண்டும். நான் உருவான இடத்தில், இதற்கு முன்பான எனது மனித உருவத்துடன் நான் இருந்து என்னை வணங்க வருபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்' என்று கேட்டார்.அதன்படி விநாயகப்பெருமானுக்கு சிவாலயங்களில் தனி சன்னிதி அமைக்கப்பட்டது. அவர் மனித முகத்தோடு 'ஆதி விநாயகர்' என்னும் பெயருடன், திருக்கோவிலின் முன்புறம் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார். ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதி அன்றும், விநாயகர் சதுர்த்தி அன்றும், ஆதி விநாயகரை தரிசனம் செய்வது உகந்த நாட்களாக கூறப்படுகிறது.திலதைப்பதி என்று வழங்கப்படும் இந்தத் திருத்தலம் மயிலாடுதுறை - திருவாரூர் பாதையில், பூந்தோட்டம் என்ற இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  

Comments