ஸ்மார்ட் கருவிகளை ஒன்றிணைக்கும் அசத்தல் தொழில்நுட்பம்

ஸ்மார்ட் கருவிகளை ஒன்றிணைக்கும் அசத்தல் தொழில்நுட்பம்

'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்' என்பதெல்லாம் இப்போது பழங்கதை ஆகிவிட்டது.இன்றைய சூழலில் தகவல் இல்லாத மனிதனே அரை மனிதன் என்பதுதான் நிதர்சனம்.ஆனால் தகவல் இருந்தால் மட்டும் போதாது. அந்தத் தகவலை மக்களுக்கு பயன்படும் வகையில் சரியாக கையாள வேண்டியதும் மிக அவசியம். ஆகவே தகவல் தொடர்புதான் இன்றைய உலகின் நாடித் துடிப்பு என்றே கூறலாம்.தொழில்நுட்பம் வளராத காலத்தில் மனிதர்களுக்கு இடையில் வாய்மொழியாக நடைபெற்ற தகவல்தொடர்பு, இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் சமீபத்திய வரவுகளான அணினிகள், நவீன உடல் உட்போருத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கருவிகளுக்கு இடையில் நிகழ்கிறது. ஏனென்றால் நம் தினசரிகளை முழுக்க முழுக்க தங்களின் கட்டுபாட்டில் வைத்திருக்கும் நவீன கருவிகளுக்கு இடையிலான தகவல் தொடர்புதான் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.இன்று நம்மிடம் எத்தனை வகையான கருவிகள் இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக அவற்றை ஒன்றுடன் ஒன்று தகவல்களை பரிமாறிக்கொள்ளச் செய்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல. எனவே தகவல்களை பரிமாறிக்கொள்ளும் திறனற்ற கருவிகளை வைத்திருந்தாலும் அதனால் பயனொன்றும் இல்லை.உதாரணமாக, நம் வீட்டில் உள்ள டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நம் மூளை, இதயம் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்களின் ஆரோக்கிய நிலையை கண்காணித்து தகவல்களை அளிக்கக் கூடிய உடல் உட்போருத்திகள் அனைத்திற்கும் நம் ஸ்மார்ட்போனுக்கு தகவல்களை அனுப்பும் திறன் இல்லாமல் போனால் அவற்றால் பயன் ஏதும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.ஆக, நம் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ள கருவிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பை வெற்றிகரமாக ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பங்களைத்தான் உலகம் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.அத்தகைய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய வந்துவிட்டது, சிறிய அணினி கருவிகளை நம் ஸ்மார்ட்போனுடன் இணைக்கும் புதிய கம்பியில்லா தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஒன்று. 'இன்டர்ஸ்கேட்டர்' என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்ரம் ஐயர் உள்ளிட்ட ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.பேக்ஸ்கேட்டர் (Backscatter Technology) எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் இன்டர்ஸ்கேட்டர் புளூடூத், வைபை அல்லது சிக்பீ (ZigBee) ஆகிய பல்வேறு வகையான கம்பியில்லா தகவல் தொடர்பு சமிக்ஞைகளை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றும் அசாத்திய திறன்கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.முக்கியமாக, பல மடங்கு ஆற்றல் இருந்தால் மட்டுமே இயங்கக் கூடிய 'வை பை' போன்ற தொழில்நுட்பங்கள் போல அல்லாமல், மைக்ரோ வாட்ஸ் எனப்படும் மிகக் குறைந்த அளவு ஆற்றலைப் பயன்படுத்தி இயங்கக்கூடியது இன்டர்ஸ்கேட்டர். நம் உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை சேகரித்து நிகழ்நேரத்தில் நம்முடைய ஸ்மார்ட்போனுக்கு அனுப்பக்கூடிய ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸ் போன்ற சிறிய கருவிகளின் இயக்கத்துக்கு இன்டர்ஸ்கேட்டர் மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது.உதாரணமாக, சர்க்கரை நோயுடைய ஒருவர் கண்களில் அணிந்துகொள்ளக்கூடிய ஸ்மார்ட் லென்ஸ் கருவியானது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும் பட்சத்தில் அதனை உடனே நோயாளியின் ஸ்மார்ட்போனுக்கு குறுந்தகவலாக அனுப்பிவிடும். பின்னர் அதனடிப்படையில் நோயாளி முதலுதவி சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த ஆய்வில், இன்டர்ஸ்கேட்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கக்கூடிய நரம்பியல் உட்பொருத்தி ஒன்று உருவாக்கப்பட்டு, அது மூளை குறித்த தகவல்களை ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் வாட்ச் ஆகிய கருவிகளுக்கு நிகழ்நேரத்தில் அனுப்புவதும் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இன்டர்ஸ்கேட்டரில் உள்ள மிக மிக விசேஷமான வசதி என்னவென்றால், ப்ளூடூத், வைபை, சிக்பீ ஆகிய தொழில்நுட்பங்களில் இயங்கும் அனைத்து கருவிகளும் ஒன்றிணைந்து இயங்க உதவும். அது மட்டுமல்லாமல், இந்த மூன்று வகை கருவிகளையும் தகவல் சமிக்ஞைகளை உற்பத்தி செய்யும் source ஆகவும், பெற்றுக்கொள்ளும் receiver ஆகவும் மாற்றும் அட்டகாசமான திறன்கொண்டது என்பதுதான்.ஆக, வருங்காலம் இன்டர்ஸ்கேட்டர் கருவிகளின் காலமாகத்தான் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Comments