KALVISOLAI TNPSC

Wednesday, 28 September 2016

புரட்டாசியில் பெருமாள் தரிசனம்!

புரட்டாசியில் பெருமாள் தரிசனம்!

இந்த பூவுலகின் ஆன்மிக நந்தவனமே நமது பாரததேசம். அதில் அழகிய, வசீகரமும், சுகந்தமுமான அற்புத மலரே ஸ்ரீநிவாசப் பெருமாள். அப்படிப்பட்ட பெருமாள் அருள்மணம் வீசும் அற்புதத் தலம், திருமலை--திருப்பதி என்ற பூலோக வைகுண்டம். திருப்பதியில் தினம் தினம் திருநாள்தான் என்றாலும், புரட்டாசி என்றால் விசேஷம் பல்லாயிரம் மடங்கு பெருகும். எனவேதான் புரட்டாசியில் பெருமாள் தரிசனத்தை ஆன்மிக அன்பர்கள் என்றுமே தவிர்க்க மாட்டார்கள்.

திருப்பதியில் மட்டும்தானா என்று கேட்போருக்கு, 'இல்லையில்லை அர்ச்சாவதார ரூபமாக நானே ஆங்காங்கு எழுந்தருளியிருக்கிறேன்' என்கிறான் வேங்கடவன். வந்து தரிசிப்போருக்கு வற்றாத வளங்களை அருளுவேன் என்றும் கட்டியம் கூறுகிறான். அந்தவகையில் சில தலங்களை இங்கே நாம் தரிசிப்போம்.

கருங்குளம்

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்றாக கருங்குளம் வெங்கடாஜலபதி கோயில் விளங்குகிறது. மூலவர் வெங்கடாஜலபதி தனித்தன்மை வாய்ந்தவர். அழகனான பெருமாள் இங்கு உருவமற்றவராக சந்தனக் கட்டையில் அருவமாக அமர்ந்து ஆட்சி செய்கிறார். இத்தலத்தைப் பொறுத்தவரை மலையடிவாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கிவிட்டுதான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர். திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான சாலையில் 15வது கிலோ மீட்டரில் கருங்குளம் அமைந்துள்ளது. நெல்லை டவுனிலிருந்து பஸ் வசதி உண்டு.

குணசீலம்    

திருச்சிக்கு அருகே உள்ள குணசீலம் தலத்தில் மூலவராகவே பிரசன்ன வெங்கடாஜலபதி அருள்கிறார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சந்நதி இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயில் இது. உற்சவரின் திருநாமம் ஸ்ரீநிவாசப் பெருமாள். பொதுவாக கோயில் விழாவின்போது மட்டுமே கருட சேவை சாதிப்பார்கள். ஆனால், இங்கு ஒவ்வொரு திருவோண நட்சத்திர தினத்தன்றும் கருட சேவை சாதிக்கப்படுகிறது. மனக்குறையுடன் வரும் பக்தர்கள் மட்டுமல்லாது, நீண்டநாள் மன நோயாளிகளும் பூரண நிவர்த்தி பெற இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். திருச்சி-சேலம் பாதையில் 24 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

துறையூர்

துறையூரை அடுத்த கொல்லிமலை-பச்சை மலைத் தொடரில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இந்த மலைகோயில் ராஜராஜ சோழன் பரம்பரையினரால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். இங்கு பெருமாள் திருமண கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். அடிவாரத்திலிருந்து இந்த மலைகோயிலுக்குச் செல்ல 1554 படிக்கட்டுகள் உள்ளன. வாகனங்கள் செல்லவும் 5 கி.மீ. தொலைவிற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை திருப்பதி பெருமாள் தனக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடன்களை இங்கேயே செலுத்தலாம் என்று பிரசன்னமாகிச் சொன்னதாக தலவரலாறு கூறுகின்றது. இத்தலம் திருச்சி, துறையூருக்கு அருகேயுள்ளது.

சென்னை - சைதாப்பேட்டை

மேற்கு சைதாப்பேட்டையில் மிகப் பழமையான பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. தாயார், பெருமாளின் திருமேனிகள் பூமியிலிருந்து கிடைத்ததாக கூறுகிறார்கள். விஜயநகர மன்னர்களிடம் பணியாற்றிய தேசாய் எனும் பிரிவைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. தமிழ் வருடப் பிறப்பு அன்று பிரம்மோற்சவ விழா தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. பிரார்த்தனைகள் நிறைவேற பெருமாளுக்கும், அலர்மேல்மங்கைத் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாத்த நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். செண்பக மரம், தலவிருட்சம்.

சின்ன திருப்பதி

தலத்தின் பெயரே சின்ன திருப்பதிதான். தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பாகலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மகாலட்சுமி, பத்மாவதி தாயார்களோடு சேர்ந்து பெருமாள் சேவை சாதிக்கிறார். கரம் உயர்த்தி அருள்பாலிக்கும் தோரணை பெருமாளுக்கு. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடை

பெறுகிறது.

மோகனூர்

காவிரிக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கருவறையில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். நவராத்திரியின்போது 'திருப்பதியில் ஒருநாள்' எனும் உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஒருநாள் மட்டும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நடக்கும் அனைத்து பூஜைகளும் இங்கும் நடக்கும். அர்த்தநாரீஸ்வரர் போல கிருஷ்ணனும் லலிதாவும் இணைந்த சம்மோஹன கிருஷ்ணன் என்ற அபூர்வ திருக்கோலத்தை இத்தலத்தில் தரிசிக்கலாம். மோகனூர் எனும் தலப்பெயர், இவரை வைத்துதான் வந்தது. புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திர நாட்களில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். நாமக்கல்லிலிருந்து 18 கி.மீ. தொலைவில் மோகனூர் அமைந்துள்ளது.

சென்னை-தரமணி

சென்னை வேளச்சேரி-திருவான்மியூர் பாதையில் பாரதி நகர் பேருந்து நிறுத்தத்திலிருந்தும், தரமணி பேருந்து நிலையத்திலிருந்தும் 2 கி.மீ தொலைவில், ராஜாஜி தெருவில் அமைந்துள்ளது வெங்கடேசப் பெருமாள் கோயில். ராகவபட்டாச்சாரியார் எனும் வைணவ பெரியவர் திருப்பதி திருமலையிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்திலும் பல வருடங்களாக கைங்கரியம் புரிந்து வந்தார். வயதான காலத்தில் அவரால் திருப்பதிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட,

ஏழுமலையானைத் தனது இருப்பிடத்திற்கே அழைத்துவர விண்ணப்பித்தார். உண்மையான பக்தனின் அழைப்பை வேங்கடவன் மறுப்பானா? பெரியவரின் விருப்பப்படியே தரமணியில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம், 1976ம் ஆண்டு உருவாகியது.

ஆப்பூர்

சென்னையை அடுத்து, சிங்கப்பெருமாள் கோயில்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ஆப்பூர் தலத்தில் மலைமீது வெங்கடேசப் பெருமாளின் கோயில் அமைந்துள்ளது. இவருக்கு நேர்த்திக் கடனாகப் புடவை செலுத்தப்படுவது வித்தியாசமான வழக்கம். திருமணமாகாதவர்களின் பிரார்த்தனை உடனே பலிக்கிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர்.

திருப்பாற்கடல்

திருப்பாற்கடல் எனும் இத்தலத்தில் திருமாலின் கிடந்த, நின்ற கோலங்களை ஒரு சேர தரிசிக்கலாம். மகாவிஷ்ணு 'ஸ்ரீரங்கநாதனாக' கிடந்த கோலத்தில் பிரம்மாவின் வேண்டுதலுக்கு இணங்க இன்றளவும் காட்சியளிக்கிறார். புண்டரீக மகரிஷி வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை தரிசனம் செய்ய, இக்கோயிலுக்கு வந்தார். ஆனால், இங்கே தூசேஸ்வரர் என்ற ஈசனின் வடிவைக் கண்டார். பெருமாள் ஆலயத்தில் சிவனா என்று வியந்து குழம்பினார். மெல்லிய ஏமாற்றத்தோடு வெளியே வந்தார். அவருடைய அறியாமையை போக்க விரும்பிய திருமால், வயோதிக வடிவில் அவர் முன் தோன்றி, 'ஏன் கவலையோடு செல்கிறீர்கள்?' என்று கேட்டார்.

 

அதற்கு புண்டரீக மகரிஷி, 'நான் திருமாலை சேவிக்க வந்தால் இங்கு சிவம் நிற்கிறதே'என்று ஏக்கமாகச் சொன்னார். உடனே திருமால், 'இது திருமால் கோயில்தானே! வாருங்கள், நீங்கள் பார்த்தது பெருமாள்தான் என்று காட்டுகிறேன்,'என்று சொல்லி அழைத்துச் சென்றார். உடனே பளிச்சென்று வயோதிகர் மறைந்தார். வேங்கடநாதராக காட்சியளித்தார். புண்டரீக மகரிஷிக்காக சிவலிங்கத்தின் மேல் பிரசன்ன வெங்கடேஸ்வரராக சேவை சாதித்தார்.

அது முதல் இது புண்டரீக க்ஷேத்ரம் என்றும், புஷ்கரணி, புண்டரீக தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஸ்தல விருட்சம், சைவத்திருத்தலங்களில் மட்டுமே காணப்படும் வில்வம்! ஆகவே, இங்கு 'அரியும், சிவனும் ஒன்று,' என்ற வாக்குக்கு ஏற்ப இறைவன் சிவமாகவும், திருமாலாகவும் ஒருசேர பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்திலிருந்து தெற்காக பிரியும் சாலையில் 3 கி.மீ. தூரம் சென்றால் திருப்பாற்கடலை அடையலாம்.

வரகூர்

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை உறியடி திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம் வரகூர். தஞ்சாவூரிலிருந்து 24 கி.மீ. தூரத்தில் கண்டியூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீநாராயண தீர்த்தர் அவதரிப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாது, திருமலையில் இருந்து ஸ்ரீவேங்கடேச பெருமாள் மற்றும் உபயநாச்சியார் விக்ரகங்களை எடுத்துக்கொண்டு யாத்திரை புறப்பட்டார். பூபதிராஜபுரத்தில் (இப்போதைய வரகூர்) தங்கி அந்த விக்ரகங்களை வைத்து ஆராதனை செய்தார். பிறகு யாத்திரையைத் தொடர எண்ணி விக்ரகங்களை எடுக்க முயன்றபோது அவற்றை அசைக்க முடியவில்லை. அப்போது 'எமக்கு உகந்த இடம் இது. எடுத்துச் செல்ல வேண்டாம்' என்று அசரீரி கேட்டது.

அதன்படி சாதுவும் விட்டுவிட்டு சென்றார். ஸ்ரீலெட்சுமி நாராயணர் மூலவராக கோயில் கொண்டுள்ள இடத்தில் ஸ்ரீவேங்டேசரையும், உபயநாச்சியாரையும் உற்சவராக ஸ்ரீநாராயண தீர்த்தர் வைகாசன ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்தார். குருவாயூரில் நாராயண பட்டத்திரிக்கு அருள் பாலித்த கண்ணன், வரகூரில் ஸ்ரீநாராயண தீர்த்தருக்கு நடனமே ஆடி தரங்கிணியை ஏற்ற அற்புதம் நிகழ்ந்தது. தனது இறுதி காலம்வரை ஸ்ரீவேங்கடேச பெருமாளை பூஜித்து, பஜனை வழி முறைகளை தோற்றுவித்து, தரங்கிணி பாடல்களை பாடி, 'உறியடி' என்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழாவையும் தோற்றுவித்தார் நாராயணதீர்த்தர்.

அரியக்குடி

அரி என்னும் தமிழ்ச் சொல், ஹரி என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு. ஆகவே ஹரி குடிகொண்ட ஊர் அரியக்குடி ஆயிற்று. திருவேங்கடமுடையான் தானே உகந்து எழுந்தருளியதாலும், திருமலைபோல் தென்திசையில் அலர்மேல்மங்கைத் தாயார் சந்நதி இருப்பதாலும், திருப்பதி மலையில் நேர்ந்து கொண்ட பிரார்த்தனையை இந்தப் பெருமாள் ஏற்றுக் கொள்வதாலும் இவ்வூர் 'தென் திருப்பதி' என்னும் சிறப்புப் பெயர் பெற்றது. இங்கு வாழ்ந்த சேவுகன் செட்டியார் என்ற வணிகர், ஆண்டவன் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு திருவேங்கடமுடையானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டார்.

இவர் மூப்பெய்தியபோதும், ஒருநாள் தலையில் காணிக்கை உண்டியலை சுமந்து கொண்டு மலையேறிச் சென்றார். இயலாமையால் மயங்கி விழுந்தார். பக்தனின் பக்தியில் பரவசமடைந்த பெருமாள், சேவுகன் செட்டியார் தள்ளாத வயதில் அவர் இனி மலையேறி வரவேண்டாம் என்றும், அவர் இருப்பிடம் தேடி தானே வருவதாகவும் அசரீரியாகத் திருவாய் மலர்ந்தருளினார்.

அரியக்குடிக்கு அவர் திரும்பிச் செல்லும்போது எந்த இடத்தில் நான்கு பக்கமும் முளைவிட்டு, நடுவில் உடைந்த தேங்காய், துளசி தளம், குங்குமம் ஆகியவை இருக்கின்றனவோ அவ்விடத்தில் தன்னை ஆவாஹனம் செய்து வழிபடலாம் என்று குறிப்பும் கொடுத்தார். அப்படிப்பட்ட அடையாளங்களை கண்ட இடமே இத்திருத்தலம். சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு தெற்கே 4 கி.மீ. தொலைவில் அரியக்குடி அமைந்துள்ளது.

திருவெள்ளக்குளம்

சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருவெள்ளக்குளம். இங்கே கோயில் கொண்டிருக்கும் வேங்கடவன், பிராட்டியான அலர்மேல் மங்கையுடன் (தனிக்கோயில் தாயாராக) அழகு தரிசனம் தருகிறார். திருமங்கையாழ்வார் திருமலை வேங்கடவனிடம் வேண்டிக் கொண்டதை, இந்தத்தலத்து வேங்கடவன் நிறைவேற்றிக் கொடுத்தான்.

அதனால், 'பூவார் திருமகள் புல்கிய மார்பா' என்றும், 'வேடார் திருவேங் கடமேய விளக்கு' என்றும், 'அண்ணா அடியேனிடரைக் களையாயே' என்றும் குறிப்பிட்டு, திருமலை வேங்கடவனுக்கு அண்ணனாக இவரைப் பாடி மகிழ்ந்தார். இதையொட்டியே இந்தத் தலம் 'அண்ணன்கோயில்' என்று பெயர் பெற்றது. தலபுராணம், இவரை மரண பயம் நீக்கும் மகாவிஷ்ணு என்று வர்ணிக்கிறது. திருப்பதியைப் போலவே இத்தலமும் பிரார்த்தனை தலமாக விளங்கி வருகிறது.

திருவண்ணாமலை (ஸ்ரீவில்லிபுத்தூர்)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தன் பாசுரத்தில் 'வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே' என்றும், 'மானிடவர்க்கென பேச்சுப்படின் வாழகில்லேன்' என்றும் பாடி மகிழ்ந்தாள். அந்த அடியொற்றியே திருவேங்கடவனும் ஆண்டாளை மணம் புரிய வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் வருகிறான். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும், அரங்கனுக்கும் திருமணம் நிறைவேறிய செய்தியறிந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் தங்கி விடுகின்றான். இத்தலமே 'வைணவத் திருவண்ணாமலை'. புரட்டாசி மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் சிறந்த பிரார்த்தனை தலமாக இக்கோயில் விளங்குகிறது.

சென்னை சௌகார்பேட்டை பைராகி மடம்

வடநாட்டு பைராகியான (சாது) லால்தாஸ் என்ற பக்தருடைய கனவில் தோன்றி அவர் மூலம் வேங்கடவன் அமைத்துக் கொண்ட திருக்கோயில். இங்கு திருப்பதி-திருமலையைப் போலவே மூலவர் காட்சியளிக்கிறார். தாயார் அலர்மேல்மங்கையும் உடன் அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தில் பூஜைமுறைகள் திருப்பதியைப் போன்றே கடைபிடிக்கப்படுகின்றன. அலர்மேல்மங்கைக்கும் திருச்சானூரில் நிகழ்த்தப்படுவது போலவே கார்த்திகை மாதத்தில் பஞ்சமி தீர்த்த உற்சவம் 10 நாட்கள் நடக்கின்றன. இங்கு நிவாசரைத் தவிர காஞ்சி வரதர், வேணுகோபாலன், அரங்கன், ராமன், லட்சுமி நரசிம்மர், பூரிஜெகன்னாதர் சந்நதிகளும் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலுக்குச் சென்று வந்தால் திருப்பதிக்கே சென்று வந்த நிறைவு கிடைக்கும் என்பது பக்தர்களின் அனுபவம்.

மொண்டிப்பாளையம்:

கோயம்புத்தூருக்கு அருகேயுள்ள இத்தலம் ஐநூறு வருடங்கள் பழமையானது. அலர்மேல்மங்கை சமேத வெங்கடேசப் பெருமாள் சாளக்கிராம கல்லில் சுயம்பு மூர்த்தியாக, ஏகதள விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். நான்குபுறம் பட்டையாகவும், மத்தியில் கூராகவும், வாழைப்பூ வடிவில் சுயம்பு லிங்கம்போல காட்சி தருவது வேறெந்த வைணவத் தலங்களிலும் காணக்கிடைக்காத சிறப்பாகும். சுவாமிக்கு இடதுபுறத்தில் திருப்பாதம் அமைந்துள்ளது. இங்கு மூலிகைப்பொருட்கள் அடங்கிய மல்லிப்பொட்டு எனும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை மேலத் திருப்பதி என்று அழைப்பர்.

No comments:

Post a comment