டைனோசர் பூமி... சுற்றிப் பார்க்கலாமா?

டைனோசர் பூமி... சுற்றிப் பார்க்கலாமா?


* டைனோசர் எனும் சொல் கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். 'பயங்கர பல்லி' என்பது இதன் பொருள். புதைபடிம ஆராய்ச்சியாளரான ரிச்சர்டு ஓவன் என்பவர், தான் கண்டறிந்த பிரமாண்ட உயிரின படிமங்களுக்கு 1842-ல் இந்த பெயரை சூட்டினார்.

* டைனோசர்கள் 16 கோடி ஆண்டுகளாக பூமியில் பலசாலிகளாக மற்ற உயிரினங்களை அடக்கி ஆண்டு வாழ்ந்துள்ளன. இந்த காலம் மெசோஸோயிக் சகாப்தம் அல்லது டைனோசர் காலம் என்று வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்புவரை டைனோசர்கள் பூமியில் வசித்துள்ளன.

* பூமியின் மீது நிகழ்ந்த மிகப்பெரிய விண்கல் தாக்குதல் அல்லது கட்டுக்கடங்காத எரிமலை சீற்றத்தால் இந்த பிரமாண்ட உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபோன்ற இயற்கை இடர்கள் பூமியில் சூரிய ஒளிபடாத அளவுக்கு சூழ்ந்து கொண்டு டைனோசர்களின் சுவாசம் உள்ளிட்ட வாழ்வியல் அடிப்படைகளை பாதித்ததால் அந்த இனமே அழிந்துவிட்டதாக நம்பப் படுகிறது.

* டைனோசர் ஆய்வாளர்கள் 'பாலென்டாலாஜிஸ்ட்' என அழைக்கப்படுகிறார்கள். முதல் டைனோசர் படிவம் 1824-ம் ஆண்டு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இனத்திற்கு 'மெகாலாசரஸ்' என்று பெயரிடப்பட்டது.

* மாமிச உண்ணி டைனோசர்களும், தாவர உண்ணி டைனோசர்களும் இருந்துள்ளன. மாமிச உண்ணி டைனோசர்கள் குறைந்த எண்ணிக்கையிலும், உருவத்தில் சற்று சிறிதாகவும் காணப்படுகின்றன. தாவர உண்ணி டைனோசர் இனங்களான 'பிராசியோசரஸ் மற்றும் அபடோசரஸ்' போன்றவை உருவத்தில் மிகப்பெரியதாக இருந்துள்ளன.

* தாவர உண்ணி டைனோசர்கள் உருவத்தில் பெரிதாக இருப்பது அசைவ உண்ணி டைனோசர்களின் ஆபத்தை எதிர்கொள்ளும் இயற்கை அமைப்பாகவே கருதப்படுகிறது. இதற்கு உதாரணமாக சில அமைப்புகளும் அவற்றின் உடலில் காணப்படுகின்றன. 'ஸ்டீகோசரஸ்' தாவர உண்ணி டைனோசர் நீளமான வால் கொண்டிருப்பதுடன், அதன் நுனியில் எதிரிகளைத் தாக்கும் முள்போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதேபோல டிரைசெராடோப்ஸ் டைனோசரின் தலையில் 3 கொம்புகள் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் காணப்படுகின்றன.

* டைனோசர் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவற்றைப் பற்றிய சங்கதிகள் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. மைக்கேல் கிரிக்டன் 1990-ல் எழுதிய 'ஜூராசிக் பார்க்' என்ற புத்தகம் டைனோசர்களைப் பற்றிய ஏராளமான தகவல்களை தொகுத்துத் தந்தது. இதைத் தழுவி 1993-ல் ஜூராசிக் பார்க் என்ற டைனோசர் திரைப்படம் வெளிவந்து உலகம் முழுவதும் டைனோசர்களை பிரபலப்படுத்தியது.

* சீனாவின் ஹெனான் பேசின் பகுதியில் 'ஹாட்ரோசரஸ்' என்ற டைனோசர் இனத்தின் முட்டைக்குவியல்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டன. உலகில் அதிகமான டைனோசர் முட்டைக்குவியல் இது.

* டைனோசர் முட்டைகள் முதன் முதலில் பிரான்சில் 1859-ல் கண்டுபிடிக்கப்பட்டன. அவை முதலில் பெரிய பறவைகளின் முட்டைகள் என்று எண்ணப்பட்டன. 1923-ல்தான் அவை டைனோசர் முட்டைகள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. மங்கோலியாவில் கிடைத்த முட்டைகள் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டு டைனோசர் முட்டை என்பது கண்டறிந்து கூறப்பட்டது.

Comments