அழகான பழைய நகரம்!

அழகான பழைய நகரம்!

ஏழு உலக அதிசயங்களில் ஒன்று சிச்சென் இட்ஸா . தென் கிழக்கு மெக்ஸிகோவின் யுகட்டான் மாகாணத்தில் அமைந்துள்ளது இந்தப் பாரம்பரிய சிச்சென் இட்ஸா. மிகப் பெரிய புகழ்பெற்ற மாயன் நகரங்களில் ஒன்று இது. மெசோ அமெரிக்கப் பழங்குடியினரான மாயன்கள்தான் சிச்சென் இட்ஸாவை உருவாக்கினார்கள். கொலம்பஸுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த நகரம் இந்த சிச்சென் இட்ஸா. கி.பி. 600-ல் சிச்சென் இட்ஸா பகுதி புகழ்பெறத் தொடங்கியது. கி.பி.900-ம் ஆண்டிலிருந்து 1050 வரை இந்நகரம் புகழ்பெற்ற தலைநகராக விளங்கியது. 1221-ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக சிச்சென் இட்ஸாவின் புகழ் மங்கி, 'மாயபன்' என்னும் ஊர் தலைநகராக மாறியது. ஆனாலும், மாயன்களுக்கு சிச்சென் இட்ஸா ஒரு புனிதத் தலமாகவும் வியாபார மையமாகவும் விளங்கியது. வெறும் ஐந்து சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரில் பல வகையான மக்கள் வசித்தனர். அதனால் பல வகையான கலாச்சாரங்களும் காணப்பட்டதால், இங்கு பல வகை பாணி கட்டிடக் கலைகளும் இடம்பெற்றுள்ளன. மாயன்கள் கட்டிடக் கலையில் வல்லவர்கள். கடவுள் உருவங்கள், அரசர்கள், விலங்குகள், போர்க் காட்சிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் சிற்பங்கள் சிச்சென் இட்ஸாவின் கட்டிடங்களை அலங்கரித்தன. இப்போது இந்தப் பகுதி சுற்றுலாவாசிகளின் சொர்க்கப்புரியாக உள்ளது. அழிந்துபோன நகரின் மிச்சமான சிச்சென் இட்ஸாவை மெக்ஸிகோ அரசு பராமரித்து வருகிறது.1988-ம் ஆண்டில் சிச்சென் இட்ஸா, யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. 

Comments