சினிமா விமர்சனம்: குற்றமே தண்டனை

சினிமா விமர்சனம்: குற்றமே தண்டனை

சினிமா விமர்சனம்: குற்றமே தண்டனை

கதாநாயகன்-கதாநாயகி: விதார்த்-ஐஸ்வர்யா ராஜேஷ்.

டைரக்‌ஷன்: மணிகண்டன்

கதையின் கரு: குற்றவாளி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தாலும் மனசாட்சி அவரை தண்டிக்கும்

வங்கி கடனை வசூலிக்கும் வேலை பார்க்கிறார், விதார்த். அவருடன் பூஜா தேவாரியாவும் பணி செய்கிறார். விதார்த்துக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. இதற்காக டாக்டரிடம் ஆலோசனை கேட்க- அவர் கண் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படியும் அதற்கு பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறுகிறார்.

விதார்த் அறுவை சிகிச்சைக்கு அலுவலகத்தில் கடன் கேட்க நிர்வாகம் கைவிரிக்கிறது. அவர் குடியிருக்கும் அடுக்குமாடிக்கு எதிர் வீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் வசிக்கிறார். அவர் வீட்டுக்கு ரகுமானும் இன்னொரு இளைஞரும் அடிக்கடி வந்து போகிறார்கள். ஒருநாள் ரகுமான் தவிப்போடு நிற்பதை பார்த்து விதார்த் விசாரிப்பதற்காக அந்த விட்டுக்குள் நுழைய-அதிர்ச்சி. ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்.

ரகுமான், அந்த கொலையை செய்யவில்லை என்று மறுக்கிறார். தான் அங்கு வந்ததை காட்டிக்கொடுக்காமல் இருப்பதற்காக பணம் தருவதாக விதார்த்திடம் ஆசை காட்டுகிறார். விதார்த்துக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் உடன்படுகிறார். ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்து போகும் இன்னொரு இளைஞரை போலீசில் சிக்க வைத்து விட்டு ரகுமானிடன் பணம் வாங்கி மாயமாகிறார். ஐஸ்வர்யா ராஜேசை கொன்ற கொலையாளி யார்? விதார்த்துக்கு கண்பார்வை கிடைத்ததா? என்பது கிளைமாக்ஸ்.

விதார்த் யதார்த்தமாக வந்து கண்குறைபாட்டை சரிசெய்ய பணம் இல்லாமல் தவிக்கும் சராசரி இளைஞரின் உணர்வுகளை அழுத்தமாக பிரதிபலிக்கிறார், ஒரு கொலையை வைத்து இரண்டு பேரை பயமுறுத்தி பணம் பறித்து இன்னொரு முகம் காட்டுகிறார். கிளைமாக்சில் மனசாட்சி உறுத்தலில் அழுது துடித்து கவனம் ஈர்க்கிறார்.

பூஜா தேவாரியா நடுத்தர குடும்பத்து பெண்ணாக மனதில் நிற்கிறார். விதார்த் மீதான அவரது காதலில் ஜீவன் இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் காதலித்தவனை ஏமாற்றுவது, பல ஆண்களுடன் தொடர்பு வைத்து இருப்பதுபோல் துணிச்சலாக நடித்து இருக்கிறார்.

கொலை வளையத்துக்குள் இருந்து வெளியே வர போராடும் ரகுமான், விதார்த்துக்கு ஆறுதலாக இருக்கும் நாசர், வழக்கறிஞர் உதவியாளராக வந்து விதார்த்துடன் பண பேரம் நடத்தும் குரு சோமசுந்தரம், போலீஸ் அதிகாரி மாரிமுத்து ஆகிய கதாபாத்திரங்களும் நேர்த்தி. கதை, ஒரே இடத்தில் முடங்குவது அலுப்பு. அதையும் மீறி அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புடன் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி படத்துடன் ஒன்ற வைக்கிறார் இயக்குனர் மணிகண்டன். தவறு இழைத்த ஒவ்வொருவருக்கும் கோர்ட்டுக்கு போகாமலேயே தண்டனை கிடைக்க செய்து இருப்பதில் அவரது மாறுபட்ட சிந்தனை பளிச். இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறது.

Comments