ஞாபகத் திறனில் கலக்கும் சூப்பர் முதியவர்கள்!

ஞாபகத் திறனில் கலக்கும் சூப்பர் முதியவர்கள்!

முதுமை பெருமைக்குரியது. வயது முதிர்ந்த முதியவர்களை 'பெரியவர்' என்று மரியாதையுடன் அழைக்கும் நம் வழக்கமே அதற்கு சான்று.

அதனால்தான் 'மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம்', 'பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி' போன்ற பழ மொழிகள் இப்பொழுதும் நம்மூரில் வழக்கில் இருக்கின்றன. முதியவர்கள் தாம் கற்ற அனுபவக் கல்வியினால் நமக்கு நல்வழி காட்டக்கூடியவர்கள்.

வயதாக வயதாக விவேகமும், ஞானமும் அதிகரிக்கும் என்பார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, முதுமை அதிகரிக்க அதிகரிக்க பெரும்பாலான முதியவர்களுக்கு பல திறன்களில் குறைபாடுகளும் ஏற்படும். முக்கியமாக ஞாபகத் திறன் குறையத் தொடங்கும். இதற்கு விதிவிலக்குகள் உண்டு என்கிறது முதியவர்கள் மீதான சமீபத்திய ஆய்வு ஒன்று.

அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் எமிலி ரோகால்ஸ்கி மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் சில முதியவர் களுக்கு மட்டும் வயதாக வயதாக ஞாபகத் திறன் அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டறிந்தார். சூப்பர் முதியவர்கள் (super-agers) என்று அழைக்கப்படும் அதீத ஞாபகத் திறன் கொண்ட முதியவர்களின் ஞாபகத் திறனுக்கான காரணத்தைக் கண்டறிய அவர்களின் மூளையை ஸ்கேன் செய்தார் ரோகால்ஸ்கி. அந்த பரிசோதனையில் சூப்பர் முதியவர்களின் மூளையானது பிற முதியவர்களின் மூளையுடன் ஒப்பிடுகையில் முதுமையில் மிகவும் குறைவாகவே சுருங்குகிறது என்று தெரியவந்தது.

ஒரு முதியவரை 'சூப்பர் முதியவர்' என்று அழைக்க வேண்டுமானால், வயது 80 ஆக இருக்க வேண்டும், ஆனால் ஞாபகத் திறன் பரிசோதனைகளில் 55 வயதுடையவர்கள் போல செயல்பட வேண்டும். உதாரணமாக, 80 வயதுடைய சாதாரண முதியவர்களிடம் 15 வார்த்தைகளைக் கூறினால், 15 நிமிடங்களுக்கு பின்னர் அவற்றில் 5 வார்த்தைகளை மட்டுமே அவர்களால் நினைவுகூர முடியும். ஆனால் சூப்பர் முதியவர்களால் 9 வார்த்தைகளை நினைவுகூர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட சில முதியவர்களுக்கு மட்டும் அதீத ஞாபகத் திறன் இருக்க அறிவியல் ரீதியிலான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதைக் கண்டறிய, தங்களுக்கு அதீத ஞாபகத் திறன் இருக்கிறது என்று நம்புகின்ற சுமார் ஆயிரம் முதியவர்களை பரிசோதித்து, அவர்களில் 62 சூப்பர் முதிய வர்களை பல்வேறு வகையான நரம்பியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி வருகிறார் ஆய்வாளர் ரோகால்ஸ்கி.

ஆனால் இதுவரை சூப்பர் முதியவர்களின் அதீத ஞாபகத் திறனுக்கு காரணமாக இருக்கக்கூடிய வாழ்க்கை முறைகள் என்று எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனாலும் சுவாரசியமாக, சூப்பர் முதியவர்களில் சிலர் மதுப்பழக்கம் அல்லது நீண்ட காலமாக புகைப்பழக்கம் கொண்டவர்களாக இருந்தது கண்டறியப்பட்டது. முக்கியமாக, சூப்பர் முதியவர் களில் பலருக்கு அதிகமான ஐ.கியூ இல்லை, மேலும் அவர்களில் பலர் மருத்துவர்களோ அல்லது வழக்கறிஞர்களோ அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிகவும் சுவாரசியமாக, சில வருடங்களுக்கு முன்னர் ஆய்வாளர் எமிலி ரோகால்ஸ்கியின் ஆய்வுக் குழுவினர் மூளையின் பகுதிகளுள் ஒன்றான ஆன்டீரியர் சிங்குலேட் கார்டெக்ஸ் (anterior cingulate co-rtex) சூப்பர் முதியவர்களின் மூளையில் தடிமனாக இருந்ததைக் கண்டறிந்தனர். முக்கியமாக, ஆன்டீரியர் சிங்குலேட் கார்டெக்ஸ் பகுதியானது கவனத்திறனுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் மூலம் சூப்பர் முதியவர்களின் மூளையானது இளமையாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

ஆனால் சூப்பர் முதியவர்கள் எப்படி தங்கள் மூளையை இளமையாக வைத்து பராமரிக்கின்றனர் என்பதைக் கண்டறிய 80 முதல் 101 வயதான 25 சூப்பர் முதியவர்கள் மற்றும் அதே வயதுடைய 15 முதியவர்களின் மூளையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி மூலம் ஸ்கேன் செய்தனர். அதன்பிறகு சுமார் 18 மாதங்கள் கழித்து மீண்டும் அதே முதியவர்களின் மூளையானது எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரின் மூளையின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் தகவல்களில் இருந்து மூளையின் அளவு கணக்கிடப்பட்டது.

பொதுவாக, 40 வயது தொடங்கி சராசரி மனிதர் களின் மூளையானது ஒவ்வொரு பத்தாண்டுகளில் சுமார் 5 சதவீதம் சுருங்குகிறது. முக்கியமாக, 70 வயதுக்கு பின்னர் மொத்த மூளையும் வேகமாக சுருங்கத் தொடங்குவதும், மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் மிக அதிகமாக சுருங்கக்கூடிய ஆபத்து இருக்கிறது என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும், 18 மாத கால ஆய்வின்போது சராசரி முதியவர்களின் மூளை 2 சதவீதம் சுருங்கியது. ஆனால் சுவாரசியமாக, சூப்பர் முதியவர்களின் மூளையானது 0.8 சதவீதம் மட்டுமே சுருங்கியது என்று கண்டறிந்துள்ளது ரோகால்ஸ்கியின் ஆய்வுக்குழு.

சூப்பர் முதியவர்களின் மூளையானது கொஞ்சமாக சுருங்குவதற்கு, பொதுவான மூளை மூப்படைதலை (brain ageing) தடுக்க அல்லது தாமதப்படுத்தக் கூடிய திறன்கொண்ட மூலக்கூறு எதுவும் அவர்களுடைய டி.என்.ஏ.வில் இருக்கிறதா? என்பதைக் கண்டறிய தற்போது சூப்பர் முதியவர்களின் மரபணுக்களை ஆய்வு செய்து வருகிறார் ரோகால்ஸ்கி.

அதுமட்டுமல்லாமல், சூப்பர் முதியவர்களின் மனோபாவம் மற்றும் வாழ்க்கையின் சம்பவங்கள் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டு வருவதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Comments