சுவர்களை அழகுபடுத்தும் கடிகாரம்

சுவர்களை அழகுபடுத்தும் கடிகாரம்

வீட்டை அழகுபடுத்துவதற்கு அலங்காரப் பொருட்களை வாங்கி சேர்ப்பது ஒரு வழி. அன்றாடம் பயன்படுத்தும் பொருட் களையே அழகான வடிவமைப்பில் வாங்குவது இன்னொரு வழி. ஒரே செலவில் அலங்காரம், பயன்பாடு என்று இரண்டு விதமான பயன்களையும் பெற வேண்டுமானால் இரண்டாவது வழியைத்தான் பின்பற்ற வேண்டும். அதன்படி சுவர் கடிகாரங்களை அழகிய வடிவமைப்பில் தேர்வு செய்வதன் மூலமாக நேரம் பார்க்கவும் முடியும். அதேநேரத்தில் அறையை அலங்கரிக்கவும் முடியும்.

வீட்டின் வரவேற்பறையில் மட்டுமின்றி படுக்கையறையிலும் சுவர் கடிகாரங்களை பயன்படுத்தலாம். அடிக்கடி பார்வை படுகின்ற இடங்களில் சுவர் கடிகாரங்களைப் பொருத்துவதால் நேரத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

ஓவியங்கள், புகைப்படங்கள் போல கடிகாரங்களும் சுவர்களை அழகுபடுத்தும் தன்மை கொண்டவை. சுவரின் மையமான இடத்தில் கடிகாரங்களைக் கொண்டு அறையை அலங்கரிக்கலாம். ஆனால் சுவரில் பூசப்பட்டிருக்கும் வர்ணத்தோடு கடிகாரத்தின் நிறமும் வடிவமும் பொருத்தமாக இருக்க வேண்டும். அறையில் உள்ள பர்னிச்சர்களின் நிறத்தோடும் அவை பொருந்திப் போக வேண்டும்.

சுவர் கடிகாரங்கள் பாரம்பரிய வடிவங்களிலும் நவீன வடிவமைப்புகளிலும் கிடைக்கின்றன. நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு கடிகாரங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

Comments