புகழ்பெற்ற மனிதர்கள் வித்தியாசமான கண்டுபிடிப்பாளர்

புகழ்பெற்ற மனிதர்கள் வித்தியாசமான கண்டுபிடிப்பாளர்

தானியங்கி (ஊசிமருந்து செலுத்தும்) சிரிஞ், ஒரு நபர் பயணிக்கும் 'செக்வே' வாகனம், மாடிப்படிகளில் ஏற உதவும் எந்திர சக்கர நாற்காலி உள்பட பல்வேறு வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் டீன் காமென்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் அருகே இருக்கும் லாங் ஐலண்டில் பிறந்தார் டீன் காமென். இவரது தந்தை ஜாக் காமென். இவர் ஒரு ஓவியர். காமிக்ஸ் கதை புத்தகங்களுக்கான படங்களை வரைபவர்.

பள்ளியில் படித்த போதே டீன் காமென் வித்தியாசமான பொருட்களை உருவாக்கும் ஆய்வில் ஆர்வம்காட்டினார். எதையாவது ஒரு பொருளை வித்தியாசமாக உருவாக்க வேண்டும் என்பதில் அவரது கவனம் இருந்தது. கல்லூரியில் படித்த போது அவர் தனது முதல் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். அவரது சகோதரர் மருத்துவர் ஆவார். ஒரு முறை அவர் டீன் காமெனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, நோயாளிகளை கண்காணித்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் அவர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்துவது சவாலான வேலையாக இருக்கிறது என்றார். மேலும் இந்தப்பணிக்காக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும் என்றும் இதற்காக நிறைய பணம் செலவாகிறது என்றும் கூறினார்.

இதையடுத்து டீன் காமென் உருவாக்கியது தான் தானியங்கி சிரிஞ். இதை உடலில் நாம் பொருத்திக்கொண்டால் போதும், குறிப்பிட்ட நேர இடைவெளியில் அது ஊசி மருந்தை உடலில் செலுத்திவிடும். அதற்கு ஏற்ப அந்த தானியங்கி சிரிஞ்சில் கம்ப்யூட்டர் தானியங்கி தொழில் நுட்பத்தை புகுத்தி இருந்தார். இதை அவர் 1972-ம் ஆண்டு கண்டுபிடித்தார். இதன் மூலம் நோயாளிகள் ஒவ்வொரு முறையும் சரியான நேரத்தில் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்து மீண்டனர். குறிப்பிட்ட நேரத்தில் உடலுக்குள் மருந்து செலுத்தப்பட வேண்டும் என்று புரோகிராம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்சிப் பொருத்தப்பட்ட இந்த தானியங்கி சிரிஞ் நோயாளிகளுக்கு பெரும் பயன் அளித்து வருகிறது.

பின்னர் அவர் தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வில் தீவிரம் காட்டினார். இதையடுத்து அவர் கண்டுபிடித்தது தான் அதிநவீன சக்கர நாற்காலி. எந்திரம் பொருத்தப்பட்ட இந்த நவீன சக்கர நாற்காலி மாடிப்படிகளில் ஏறும் சிறப்பு கொண்டது. மேலும் கரடு முரடான தரையிலும் இது கவிழாமல் செல்லும் திறன் கொண்டது. இதற்கு 'ஐபாட்' என்று பெயரிட்டார்.

தொடர்ந்து அவரது கண்டுபிடித்தது தனி நபர் பயணம் செல்லும் மின்சார ஸ்கூட்டர் 'செக்வே'. அடுத்தடுத்து அமைந்த இரு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மேடையில் ஏறி நின்றபடி பயணம் செய்யும் வகையில் இந்த செக்வே தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்த செக்வே கருவியும் மக்களின் அமோக வரவேற்பை பெற்றது.

தற்போது சாக்கடை தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் ஆய்வில் டீன் காமென் ஈடுபட்டு வருகிறார். இதற்கான எந்திரத்தை உருவாக்குவது தான் இவரது இலக்காகும்.

டீன் காமென் தனது கண்டுபிடிப்புகள் குறித்து கூறும்போது, வாய்ப்பு கிடைத்தால், ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம். சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட வேண்டியது அவசியம். வெறும் பாடப்புத்தகங்களை படிப்பது மட்டும் போதாது. அதையும் தாண்டிய செய்முறை பயிற்சி தேவை. அப்படி இருந்தால் தான் மாணவர்கள் கண்டுபிடிப்பாளர்களாக மாற முடியும். இதற்கு இளம் கண்டு பிடிப்பாளர்களை உருவாக்கும் வகையில் 'பர்ஸ்ட்' என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து வரு கிறார்.

Comments