வியப்பூட்டும் விண்கல் துண்டுகள்

வியப்பூட்டும் விண்கல் துண்டுகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் 30 ஆண்டு களுக்கு முன் விவசாயி ஒருவர் கண்டெடுத்த விண்கல் துண்டைப் போல மேலும் பல துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவர், ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விண்கல் துண்டு ஒன்றைக் கண்டெடுத்தார்.

தற்போது அந்த விண்கல் துண்டைப் போன்ற ஏராளமான துண்டுகள் பெர்ன் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட விண்கல்லானது பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் புகுந்த நொடியில் நூற்றுக்கணக்கான துண்டுகளாகச் சிதறியுள்ளது. இந்தக் கற்கள் டுவான் மலைப்பகுதியில் விழுந்ததால் இதற்கு 'டுவான்பெர்க்' என்று ஆராய்ச்சியாளர்கள் பெயர் சூட்டியிருக் கின்றனர்.

இந்த விண்கற்கள் ஆயிரம் துண்டுகளாகக் கூட வெடித்துச் சிதறியிருக்கலாம் என அறிவியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், ஆராய்ச்சியாளர்களால் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த கற்கள் மேலும் பல அறிவியல் உண்மைகளை ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிவிக்கும் என கருதப்படுகிறது.

இந்த விண்கற்கள் கூட்டமானது சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருந்திருக்கும் என்று முதலில் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் உண்மையில் இது அதைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தற்போது கூறுகின்றனர்.

பெர்ன் இயற்கை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த 100 விண்கல் துண்டுகளையும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

Comments