Monday, September 26, 2016

வெளிநாட்டு இந்தியர் இங்கு வீடு வாங்கலாமா?

வெளிநாட்டு இந்தியர் இங்கு வீடு வாங்கலாமா?

ஒன்றரை மாதம் முன்பு என் உறவினரின் பேத்தி அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். தாம்பரம் பக்கம் வீடு வாங்க உத்தேசித்திருப்பதாகவும் அதற்காக அலைய வேண்டியிருக்கிறதென்றும் தெரிவித்தாள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (Non-Residents) இங்கு வீடு வாங்க முடியுமா? அதற்கான விதமுறைகள் என்னென்ன? வெளிநாடு வாழ் இந்தியர்கள் இங்கு வீடு வாங்க வேண்டுமென்றால் என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது போன்று பல கேள்விகள் அவளுக்கு எழுந்தன. அது போன்ற கேள்விகளும் அதற்கான பதில்களும்.

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

பான்கார்ட், முகவரிக்கான அத்தாட்சி, வேலைக்கான நிரூபணம் (Work Permit) ஆகியவை தேவையான ஆவணங்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலமாகவே பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு வேளை பான் எண் இல்லாவிட்டால், பாஸ்போர்ட், விசா இவை போதும். பொதுவாகவே பாஸ்போர்ட்டைத் தகுந்த அடையாளமாக ஏற்கிறார்கள்.

அயல் நாடுகளில் வசிக்கும் எல்லாரும் வீடு வாங்க முடியுமா?

முடியாது. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், சீனா, இரான், நேபால், பூடான் போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் வாங்க முடியாது. ரிசர்வ் வங்கி அனுமதியுடன்தான் வீடு வாங்க இயலும். இன்னும் சொல்லப்போனால், சில நாடுகளில் வழக்கத்திலிருக்கும் சில உள்நாட்டு விதிகள், இந்தியாவிலோ வேறு இடத்திலோ சொத்து வாங்குவதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. அது போன்ற நிலைமைகளில் அங்குள்ள மத்திய வங்கியின் அனுமதியைப் பெற வேண்டும்.

நேரில் வர முடியாவிட்டால் என்ன செய்வது?

தெரிந்த பதில்தான். அதிகாரப் பத்திரம் (power of Atterney) உறவு நபருக்கு தரலாம். அந்தப் பத்திரத்தில், கான்ஸ்லேட் ஜெனரல் அலுவலகத்தின் முத்திரை இருக்க வேண்டும். இந்தத் தன்மை மேற்கு ஜெர்மனியில். வேறு நாடாயிருந்தாலும் யாராவது ஓர் அரசு அதிகாரியின் முன் P.A. (power of Atterney) கையெழுத்திட வேண்டும்.

வெளிநாடு இந்தியர்கள் இங்கு வீடு வாங்க வேண்டுமென்றால் வங்கிக் கடன் தருவார்களா?

தாராளமாக. முதல் பாராவில் குறிப்பிட்ட பெண், தேவையான ஆவணங்களைக் கொண்டு வந்திருந்தாள். அவை:

பாஸ்போர்ட், ஆறு மாத கால வங்கிக் கணக்கு. மூன்று வருட வருமான வரிச் சான்று. கடன் மதிப்பீடு (Credit rating). இவை எல்லாம் திருப்திகரமாக இருந்தால், கடன் வழங்குவார்கள்.

கடன் வாங்கினால் தவணைத் தொகையை எவ்விதம் பிடித்துக் கொள்வார்கள்?

பொதுவாக, இதுபோன்ற அயல் நாடுகளில் வசிக்கும் நபர்களுக்கு இரண்டு வகையான கணக்குகள் இருக்கும். ஒன்று N.R.(O). மற்றொன்று NR(E). O என்றால் (ordinary) ஆர்டினரி; E என்றால் எக்ஸ்டர்னல் (external). இதில், NR(O) கணக்கில் உள்ளூர்ச் செலவினங்கள் அனுமதிக்கப்படும். பூர்விக சொத்துக்கான வீட்டு வரி, தண்ணீர் வரி போன்றவை.

இதே NR(O) கணக்கில், வெளிநாட்டிலிருந்து வருகிற டாலர் அல்லது யூரோ காசோலைகள் வரவு வைக்கப்படலாம். அத்தகைய காசோலைகள் வசூலான பிறகு, நிறுத்த ஆணை மூலம் தவணைத் தொகையைப் பிடித்துக் கொள்வார்கள். தப்பித் தவறிக்கூட NR(E) கணக்கில் இந்திய ரூபாயில் வருட செலவு இருக்கக் கூடாது.

வீடு வாங்கலாமென்றால், எல்லா விதச் சொத்துகளையும் வாங்கலாமா?

முடியாது. அயல்நாடு வாழ் இந்தியர்கள், விவசாய நிலம், எஸ்டேட், பண்ணை வீடு போன்றவை வாங்க இயலாது. அதற்கு ரிசர்வ் வங்கியின் தனி அனுமதி பெற வேண்டும். பண்ணை வீட்டைப் பற்றி சிறு குழப்பம் நிலவுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும். வருமான வரி விதிகளின்படி, பண்ணை வீடு பிற வீடுகளைப் போலத்தான் கருதப்படுகிறது. ஆனால் அயல் நாட்டினர் இதில் முதலீடு செய்வதென்றால், அனுமதி பெறத்தான் வேண்டும்.

வருமான வரிகள் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

இதைப் பொறுத்தமட்டில், அயல் நாடு இந்தியர், மற்ற இந்தியர் என்ற வேறுபாடு இல்லை. விளக்கம்: வருமான வரி செலுத்துவதற்கு உறுதியாக பான் கார்டு எண் தேவை. இணையத்தில் விண்ணப்பித்தால், மூன்று வாரங்களில் வெளிநாடு முகவரிக்கே வந்துவிடும். இங்கு ஏதாவது சொத்திலிருந்து வரும் வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும். இன்னொரு அம்சம்: இங்கு கிடைக்கும் வருமானத்தை அயல் நாடுகளுக்கு எடுத்துச் செல்ல, சில நிபந்தனைகள் உண்டு.

ஒரே வருமானத்துக்கு இரண்டு நாடுகளிலும் வரி பிடித்தமாகுமா?

ஆகாது. இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்று அமெரிக்கா, கனடா, யு.கே. போன்ற நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. உதாரணமாக சில நாடுகளில் 25 சதவீதம் வரி இருக்கும். இங்கு வருமான வரி விகிதப்படி 20 சதவீதம் கட்டினால் மீதி 5 சதவீதத்தை அயல்நாட்டில் செலுத்தலாம் (குறிப்பாக மூலதன லாப வரி).

பூர்வீக சொத்தை விற்று, அத்தொகையை அயல்நாடுகளுக்குக் கொண்டு போக இயலுமா?

இது கொஞ்சம் சிக்கலானது. ஆனால் தற்போது பல விதிகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இரண்டரை லட்சம் டாலர் வரை கொண்டு போகலாம் என்று சொல்கிறார்கள். எப்படியானாலும் NR(E) கணக்கில் வரவு வைத்து, அதன் மூலமாகத்தான் மாற்ற இயலும். உங்கள் ஆடிட்டரிடம் கேட்டுச் செயல்படுங்கள்.

No comments:

Post a Comment